Tuesday, June 22, 2010

காங்கிரசின் கபட நாடகம்

போபால் விஷவாயுவால் இறந்தவர் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதிக நிவாரணம் தருவது மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, தனது பரிந்துரைகளை பிரதமர் மன்மோகனிடம் திங்கள்கிழமை அளித்துள்ளது.

மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையிலான இந்த அமைச்சர்கள் குழு, பரிந்துரைகள் அரசின் தவறுகளை மூடி மறைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக இருக்கிறது என்பதும் பல யூகங்களுக்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருப்பதையும் காணும்போது, வருத்தமே மிஞ்சுகிறது.

முதலாவதாக, போபால் விஷவாயுவால் இறந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும், நிரந்தரமான ஊனமுற்ற நபர்களுக்கு ரூ.5 லட்சம், ஓரளவு ஊனமுற்றோருக்கு ரூ.3 லட்சம் என்று இந்தப் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே இவர்கள் பெற்ற தொகையைக் கழித்துக்கொண்டு, இந்த நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பரிந்துரையில் தெரிவித்துள்ளனர். அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்று- அதிக நிவாரணத்தொகை பெற்றுத்தருவது என்பது. அப்படியிருக்க, எதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட சொற்ப நிவாரணத் தொகையை இதில் கழிக்க வேண்டும் என்பது புரியவில்லை.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, விஷவாயுவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் என்கிற செய்தி மட்டுமே உலகத்தாருக்குப் போய்ச் சேரும். ஆனால், அங்கே பாதிக்கப்பட்டவர்களிடம் "முன்பு பெற்ற உதவித்தொகை தொடர்பான ஆவணத்தைக் காட்டுங்கள், அதைக் கழித்துக்கொண்டு மீதிப் பணத்தைத் தருகிறோம்' என்று அரசு இயந்திரம் கறாராகச் சொல்லும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தனை பேர் பழைய நிவாரணத் தொகை விவரங்களைச் சான்றுகளுடன் வைத்திருப்பார்கள்? இத்தகைய சிக்கலுக்கே வழி இல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும், அவர்கள் முன்பு பெற்ற நிவாரண உதவி எவ்வளவு என்றாலும், தற்போது கூடுதலாக அளிக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு செய்வதுதான் முறையானதாக இருக்கும்.

இரண்டாவதாக, போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள சுமார் 300 டன் நச்சுப்பொருளை அகற்றி, அப்பகுதியில் மீண்டும் நல்வாழ்வுக்கான சூழலை ஏற்படுத்துவது என்பதும் இந்தக் குழுவின் நோக்கமாகும். இதற்காக ரூ.250 கோடி செலவிடப்படும் என்று இக்குழு தெரிவித்துள்ளது.

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் இந்தியப் பங்குகளை டெü நிறுவனம் வாங்கியபோது, நீதிமன்ற உத்தரவின்படி டெü நிறுவனம் இங்குள்ள நச்சுக்களை அகற்ற ரூ.100 கோடியை அரசுக்குச் செலுத்த வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் அத்தொகையைச் செலுத்தியதா, அல்லது அந்நிறுவனம் செலுத்திய தொகையோடு கொஞ்சம் அரசும் சேர்த்து இப்போது வழங்குகிறதா என்பதை விளக்குபவர்கள் யாருமில்லை. இந்த ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தையும் நீக்க வேண்டிய பொறுப்பையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் அல்லது அரசு நிர்ணயிக்கும் புதிய நிவாரணத் தொகையை அளிப்பதையும் டௌ நிறுவனம் ஏற்கும்படி செய்வதுதான் முறையாகும். ஆனால், அரசியல் காரணங்களுக்காக, குறிப்பாக ராஜீவ் காந்தியின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக இந்தச் செலவுகளையும் கூடுதல் நிவாரண உதவிகளையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்பதைத் தவிர, சொல்வதற்கு ஒன்றுமில்லை.

இது தவிர, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அப்போதைய தலைவரும், பிணையில் வெளிவந்து நியூயார்க்கில் இருப்பவருமான வாரன் ஆன்டர்சனை இந்தியாவுக்கு கொண்டுவந்து விசாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதும், பணியில் கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம் என்பதாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், இந்த வழக்கு கொலைவழக்கு என்பதாக மீண்டும் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்வது குறித்தும்கூட இந்தப் பரிந்துரைகள் சொல்கின்றன. இவற்றில் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை இருக்கும் என்பது அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொருத்துத்தான் தெரியும்.

அமைச்சர்கள் குழு முதல்நாள் கூடும் முன்பாகவே, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அந்த இடத்தில் நச்சுக் கழிவுகளை அகற்றும் பணிகளுக்காக திட்டக்குழு ரூ.982 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று செய்திகள் வெளியாகின. அரசு ஆவணங்களின்படி போபால் விஷவாயுவால் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 3,000 மட்டுமே. இவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அளித்தாலும் ரூ.300 கோடி செலவாகும். ஊனமுற்றோர், சிறிதளவு ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் நிவாரண உதவித்தொகைகளையும் சேர்த்தால் ரூ.500 கோடியை தாண்டாது. மேலும் டௌ நிறுவனம் தான் செய்ய வேண்டிய, செலவிட வேண்டிய தொகையும் -ரூ.250 கோடி- அரசாங்கமே அளித்துவிடுகிறது. இதர செலவுகளையும் சேர்த்தால், திட்டக் கமிஷன் மூலம் அரசு கொடுக்கும் ரூ.982 கோடி சரியாக இருப்பதைக் காணலாம்.

மக்கள் பணத்தை வைத்து மக்கள் வாயை மூட முயற்சிக்கிறார்கள்.

அமெரிக்காவின் அடிமையாகி விட்ட காங்கிரசை என்ன செய்ய ?

நன்றி - தினமணி

Tuesday, May 25, 2010

இனி கோக் குடித்து தாகம் தீர்த்து கொள்ளுங்கள்

கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடிநீர்த் தட்டுப்பாடு பற்றிய ஒரு கேள்விக்கு அரசுத் தரப்பிலிருந்து தரப்பட்ட பதிலில் ஒரு புள்ளிவிவரம் கிடைக்கிறது.​ அதன்படி,​​ இந்தியாவிலுள்ள 6 லட்சம் கிராமங்களில் 1.80 லட்சம் கிராமங்களில் மிகவும் தரம் குறைந்த,​​ உபயோகத்துக்கே தகுதியற்ற குடிநீர்தான் கிடைப்பதாக அரசே ஒத்துக் கொள்கிறது.​ சொல்லப்போனால்,​​ இந்தக் கிராம மக்கள் குடிநீர் என்கிற பெயரில் மெல்லக் கொல்லும் விஷத்தை அருந்துகிறார்கள்.

நாடாளுமன்றத்தில், ​​ அமைச்சர் சாதுர்யமாகச் சொல்லாமல் விட்ட தகவல் ஒன்று உண்டு.​ இந்தியாவின் எல்லா முக்கியமான நதிகளின் கிளை நதிகளும்,​​ பல்வேறு தொழிற்சாலைகளின்,​​ நகரங்களின் கழிவுநீர் ஓடைகளாக மாறி விட்டிருக்கின்றன என்கிற உண்மைதான் அது.​ தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகள் கலப்பதால் மாசுபடுத்தப்பட்ட இந்த ஆறுகளின் தண்ணீர்,​​ அதன் இரு கரைகளிலும் வசிக்கும் கிராம மக்களின் வறண்ட தொண்டையின் தாகத்தைத் தணிக்கும் குடிநீரா இல்லை விஷநீரா என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்தியாவின் முக்கியமான ஆறு,​​ ஆற்றுப்படுகைகள் வறண்ட ஆறுகளாக முத்திரை குத்தப்பட்டுவிட்டன.​ அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் ஐந்து ஆறுகள் வறண்டு இந்தப் பட்டியலில் சேர இருக்கின்றன.​ ஆறுகள் வறண்டு வரும்போது அதன் தொடர் விளைவாக,​​ ஏரிகளும் குளங்களும் மட்டுமல்ல,​​ நிலத்தடி நீரும் வறண்டு விடுகின்றன.

வேடிக்கை என்னவென்றால்,​​ நமது ஆட்சியாளர்களும்,​​ திட்டமிடுபவர்களும் கழிவுநீர் ஓடைகளாகவும்,​​ நச்சுநீரை உள்வாங்கும் வாய்க்கால்களாகவும்,​​ நதிகளும்,​​ ஆறுகளும் மாறுவதை வளர்ச்சி என்று கருதிப் பெருமைப்பட்டுக் கொள்வது.​ சென்னையையே எடுத்துக் கொள்வோம்.​ ஏறத்தாழ,​​ ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்,​​ ஊர் மக்கள் குளிக்கும் ஆறாக இருந்த கூவம் இன்று கழிவுநீர்க் கால்வாயாக மாறிவிட்டிருப்பதைப் பற்றி யாருமே வருத்தப்படுவதாகத் தெரியவில்லை.​ இதே நிலைமைதான் இந்தியாவிலுள்ள பல ஆறுகளுக்கும் நேர்ந்திருக்கிறது.

நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றின் அறிக்கையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.​ அதன்படி,​​ கிராமப்புறங்களிலுள்ள 84 விழுக்காடு வீடுகள் கிராமப்புறக் குடிநீர்த் திட்டத்தால் பயன்பெறுவதாகவும்,​​ அதில் 16 சதவிகிதத்தினர் மட்டுமே பொதுக் குழாயில் தங்களது அன்றாடக் குடிநீர்த் தேவையைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் தகவல் தரப்பட்டுள்ளது.​ அதே அறிக்கையில் இன்னோர் இடத்தில்,​​ ஒரிசா போன்ற மாநிலங்கள் பற்றிய குறிப்புகளில் 9 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே வீட்டில் குழாய் வசதி பெற்றிருப்பதாகவும் கூறுகிறது.​ அதே அறிக்கை,​​ நகர்ப்புறங்களில் 37 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே நேரடி குழாய் வசதி பெற்றிருப்பதாகவும் குறிப்பிடுகிறது.​ அப்படியானால் எது உண்மை?

வேடிக்கை என்னவென்றால்,​​ ஒருபுறம் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை.​ ஆனால்,​​ டாங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்பவர்களுக்கோ,​​ கேன்களில் சுத்திகரிப்பு செய்த தண்ணீரை விநியோகிப்பவர்களுக்கோ தண்ணீர் தட்டுப்பாடே கிடையாது.​ எத்தனை வறண்ட கோடையாக இருந்தாலும் பன்னாட்டு குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்கள் தண்ணீர் ​ ​ ​தட்டுப்பாட்டால் தங்களது உற்பத்தியை நிறுத்தி வைத்ததாக இதுவரை தகவல் இல்லை.

சமீபத்தில்,​​ ஆந்திர அரசு குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியிலிருந்து நாளொன்றுக்கு 21.5 லட்சம் லிட்டர் தண்ணீரை கோகோ கோலா நிறுவனத்துக்குத் தர உறுதி அளித்திருக்கிறது.​ இந்த ஏற்பாட்டுக்கு நன்றிகூறும் விதமாகவும்,​​ ஏழை எளிய மக்களின் வறுமையைத் தீர்க்கவும் பெரிய மனது பண்ணி கோலா நிறுவனம் தமது "மாஸô' குளிர்பானத்துக்காக ஆந்திரத்திலிருந்து மாம்பழங்களை வாங்கிக் கொள்ள உறுதி அளித்திருக்கிறது.​ குண்டூர் மாவட்டத்தில் கடும் கோடையால் பாதிக்கப்பட்டு,​​ நா வறண்டு தவிக்கும் கிராமவாசிகள் கோகோ கோலா அருந்தித் தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஆந்திர அரசு நினைக்கிறதோ என்னவோ...

குடிமக்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வழிகோலுவது ஒரு தேசியக் கடமை என்று நமது மத்திய,​​ மாநில அரசுகள் ஏனோ கருதவில்லை.​ மினரல் வாட்டர் நிறுவனங்களும்,​​ பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களும் மக்களின் வறண்ட நாக்கின் தாகத்தைத் தணிக்கும் என்று அரசு ஒதுங்கிக் கொள்ளப் பார்ப்பது ஒருபுறம்.​ படித்த,​​ பதவிகளில் இருக்கும் நகர்ப்புற வாசிகளும்,​​ மத்தியதர வகுப்பினரும் தாங்கள் மட்டுமே இந்தியப் பிரஜைகள் என்று நினைத்து,​​ மினரல் வாட்டர் குடிக்க முடியாதவர்களைப் பற்றிக் கவலையேபடாமல் இருப்பது இன்னொருபுறம்.

பணக்கார மற்றும் மத்தியதர வகுப்பினர் மட்டும்தான் இந்தியாவா?​ ஏனைய வாய்ப்பு வசதியில்லாத,​​ ஏழை எளிய மக்களும்,​​ கிராமப்புறப் பொதுஜனங்களும் சாக்கடைத் தண்ணீரையும்,​​ நச்சுத் தண்ணீரையும் குடித்து நாசமாய்ப் போகட்டும் என்பதுதான் நமது சமத்துவ,​​ சமதர்ம சமுதாயக் கோட்பாடா?​ அந்த அப்பாவிகளுக்காகக் கவலைப்பட நம்மில் யாருமே இல்லையா?

நன்றி - தினமணி

Friday, April 2, 2010

அணு உலை விபத்து மசோதா: இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி

அணு உலை விபத்து இழப்பீட்டு மசோதாவை இந்தியா நிறைவேற்றியாக வேண்டும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவும், இந்தியாவும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக, அணு உலை விபத்து காப்பீடு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த மாதம் இந்த மசோதாவை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய முயன்ற போது, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த மசோதா நிறைவேறவில்லை. இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் குறிப்பிடுகையில், 'அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்ட போது, அணு உலை விபத்து காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவதாக இந்தியா எங்களுக்கு உறுதியளித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதை எந்த முறையில் நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்ய வேண்டியது இந்திய அரசு தான். இருப்பினும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதாக இந்திய அரசு எங்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறது' என்றார்.

Sunday, March 21, 2010

காலாவதியான மருந்துகள் மீண்டும் விற்பனை -- உஷார்

காலாவதியான மருந்துகளை மீண்டும் புதிய தேதி அச்சிட்டு, மருந்துக் கடைகள் மூலம் விற்பனை செய்ததாக அண்மையில் சென்னையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் காவல்துறை அறிவிப்பும், தமிழக சுகாதாரத் துறைச் செயலரின் நடவடிக்கையும் சரியானதாக இருந்தாலும்கூட, இதில் வெளிப்படாத அல்லது மறைக்கப்படும் ரகசியங்கள் பல இருக்கவே செய்கின்றன.

இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் வழக்க முறை பற்றிக் குறிப்பிடுகையில், கொடுங்கையூர் அருகே குப்பைமேட்டில் கொட்டப்படும் மருந்து மாத்திரைகளை எடுத்துவந்து அதன் மீது புதிதாகத் தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிகளை அச்சிட்டு, புத்தம் புதிதாக (அதாவது, மருந்துக் கடைக்காரர்களே ஏமாறுகிறவிதத்தில்) மருந்துக் கடைகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கின்றனர் என்று கூறப்படுகிறது. இதில் மாநிலங்களைக் கடந்து செயல்படும் கும்பல் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதைப் போல மாத்திரைகள் தனியார் மருத்துவமனைக்கு வெளியே இருக்கும் குப்பைத் தொட்டிகளில்கூட கிடைப்பதில்லை என்கிறபோது, இந்த மோசடிப் பேர்வழிகளுக்காக மட்டும் தனியாக ஒரு குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகிறது என்பது முதல் தகவல் அறிக்கைக்கு வேண்டுமானால் வலு சேர்க்குமே தவிர, வெறும் வாதத்திற்குக் கூட எடுபடாது.

இத்தகைய மாத்திரை, மருந்து, டானிக்குகளை குறிப்பிட்ட கும்பல் ஒவ்வொரு மருந்துக்கடைக்கும் சென்று, சேகரித்து வந்து, குறிப்பிட்ட இடத்தில் மொத்தமாக வைத்து, இவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதியான தேதிகளை மாற்றி அச்சிடுதல் அல்லது புதிய லேபிள் ஒட்டுதல் ஆகிய பணிகளைச் செய்து, மீண்டும் மறுசுழற்சிக்காக மருந்துக்கடைகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள் என்பதும்கூட, செலவுமிக்க நடைமுறைதான். மோசடி செய்பவர்களுக்கு இதில் அதிக லாபம் கிடைக்காது.

காலாவதியான மருந்துகளை மீண்டும் சந்தைக்கு அனுப்புவதை, மாத்திரைகளைத் தயாரிக்கும் நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்துக்கான மாநில அளவில் அல்லது தென்னிந்திய விற்பனை உரிமை பெற்றுள்ள விநியோகஸ்தர்கள் மட்டுமே செய்ய முடியும்.

அவர்களை அடையாளம் காண்பதும் அரசுக்கு எளிது. அத்தகைய நபர்கள் யார் என்று கண்டறிவதும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும்தான் இந்தப் பிரச்னைக்கு உடனடித் தீர்வாக அமையுமே தவிர, வெறுமனே எல்லா மருந்துக்கடைகள் மீதும் சந்தேகத்தின் பலனைத் திருப்பிவிடுவதால் பயனில்லை.

தமிழ்நாட்டில் 42,000 மருந்துக் கடைகள் இருப்பதாக சுகாதாரத் துறை செயலர் வி.கே. சுப்புராஜ் குறிப்பிடுகிறார். இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் நகர்ப்புறங்களில் இருப்பவை.

நகர்ப்புறங்களில் இருக்கும் 90 விழுக்காடு கடைகள் கணினி மூலம் ரசீதுகள் வழங்குபவை. கணினி திரையில் மருந்துகளின் இருப்பு மட்டுமன்றி, அவற்றின் காலாவதி தேதிகளும் தெரியும் வகையில் மென்பொருள் உள்ளன.

காலாவதியான மாத்திரைகளை மருந்துக்கடைக்காரர்கள் தனியே பிரித்து வைப்பதும், அவற்றை தமக்கு விநியோகம் செய்த மொத்தக் கொள்முதல் நிறுவனத்துக்குத் திருப்பிக் கொடுத்து அதற்கான தொகையைப் பெறுவதும் நடைமுறையில் உள்ளது.

மருந்துகளின் மொத்தக் கொள்முதல் நிறுவனங்கள் அல்லது மாநில விநியோகஸ்தர்களின் கிடங்குகளில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதும், அங்கே திரும்பப் பெறப்பட்ட, காலாவதியான மாத்திரை மருந்துகளின் அளவைக் கணிப்பதும், அதை அவர்கள் மருந்து தயாரித்த நிறுவனத்துக்கு அனுப்புகிறார்களா அல்லது என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதும் சுகாதாரத் துறையும் மருந்துக் கட்டுப்பாட்டு பிரிவும் செய்ய வேண்டிய வேலை.

மருந்துக்கடைகளிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்தி, வாங்கப்பட்ட விற்கப்பட்ட மாத்திரைகளின் எண்ணிக்கையை வைத்தே அந்த மருந்து மாத்திரையின் சந்தை வரவேற்பைக் கணிக்கவும், அதற்கேற்ப சந்தை வரவேற்பின்றி காலாவதியாகும் மருந்துகளின் பெயர்களை வகைப்படுத்தவும் முடியும். இன்றைய கணினி முறையில் இவை யாவுமே சாத்தியம். ஆனால், இதைச் செய்யத்தான் அரசு அதிகாரிகளுக்கு மனமில்லை, ஏன்?

நோவால்ஜின் என்ற உண்மை மருந்துக்கு இணையாக நோவா-ஜின் என்ற, பெயர் ஒலிப்பு முறையில் மட்டும் இசைவாக இருக்கும் மாத்திரைகளை தமிழக அரசு அதிகாரிகள் எப்படி அனுமதிக்கிறார்கள்? அவை எப்படி மருந்துக்கடைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன? பல மருந்துகளுக்கு ஒரு "எழுத்துப்பிழை பிராண்டு' இருக்குமென்றால், அது தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்காததால் வந்த பிழைதானே? இது தெரிந்தே நடக்கும் தவறுதானே?

ஓர் அட்டையில் 10 மாத்திரைகள் இருக்குமென்றால், அதன் ஓரத்தில் கத்தரிக்கோலுக்கு வெட்டுப்படும் இடத்தில் தயாரித்த தேதி, காலாவதியாகும் தேதியை ரப்பர் ஸ்டாம்ப் மூலம் பதிவு செய்யும் நடைமுறையை இன்னமும் வைத்திருக்கும் சுகாதாரத் துறையைக் குற்றம் சொல்லாமல் வேறு யாரைக் குற்றம் சொல்வது?

எல்லாரும் 10 அல்லது 12 மாத்திரைகள் கொண்ட முழுஅட்டையை வாங்குவதில்லை. இதனால் மாத்திரை தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதியை அறியாமல்தான் வெறும் நம்பிக்கையின்பேரில், நோயாளிகள் மாத்திரையை வாங்கி உட்கொள்கிறார்கள்.

மருந்து, மாத்திரையில் உள்ள மூலப்பொருள்கள் விவரத்தைக்கூட வெறும் கண்களால் படிக்கும் விதத்தில் எந்த லேபிளும் தயாரிக்கப்படுவதில்லை. பூதக் கண்ணாடி வைத்துப் படித்தால்தான் உண்டு. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாகவும், பெரிய விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே ஆதரவாகவும், எந்த நாளிலும் நோயாளிகள் மீது அக்கறை இல்லாமலும் இருக்கும் அரசுதான் இதற்கெல்லாம் முதல் குற்றவாளி.

பூனை கண்ணை மூடினால் உலகம் இருளாது. ஆனால், சுகாதாரத்துறை கண்ணை மூடினால் போலி மருந்துகள் உலவத்தான் செய்யும். குற்றவாளிகளைவிட குற்றவாளிகளுக்குக் குற்றேவல் புரிவதும், குற்றத்துக்கு உடந்தையாகச் செயல்படுவதும்தானே அதிக தண்டனைக்குரிய குற்றம்? 42,000 மருந்துக்கடைகளைச் சோதனையிடுவதற்குப் பதில் 420 மொத்த விற்பனையாளர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் சோதனையிடலாமே? அதற்கு ஏன் தயங்குகிறது நமது சுகாதாரத் துறை?

நன்றி - தினமணி

Monday, March 8, 2010

அப்படி என்னதான் மன்மோஹன் சிங்ற்கு நிர்பந்தம்?

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?

இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.

இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.

இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.

இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

நன்றி - தினமணி

Saturday, February 27, 2010

அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்?

மத்திய அரசு ஏன், எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொள்கிறது? அப்படி என்னதான் நமது இந்திய அரசுக்கு நிர்பந்தம்? யாருடைய வற்புறுத்தலின் பேரில், யாருடைய நன்மையைக் கருதி இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து வருகிறது?- இதுபோன்ற கேள்விகளை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் எழுப்பியே தீரவேண்டிய ஒரு கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக நமது அரசின் சில செயல்பாடுகள் மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக அமைந்திருப்பதை நம்மில் பலர் உணராமல் இருக்கிறோம். அதுமட்டுமல்ல, மிகவும் ரகசியமாக சில உடன்பாடுகள் கையெழுத்திடப்பட இருக்கின்றன. இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் இந்த உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.

விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட அரசியல் நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்திச் செயல்படும் நமது எதிர்க்கட்சிகளும் சரி, அவ்வப்போதைய பரபரப்புகளை விலைபேசி, தங்களது வாடிக்கையாளர்களையும் வாசகர்களையும் தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கவே அனுமதிக்காமல் செயல்படும் ஊடகங்களும் சரி, மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.

அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில்

ஈடுபடுகிறார். இவரது விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி இந்த விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

இத்துடன் முடிந்துவிட்டது என்று நினைத்துவிடாதீர்கள். ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நம்மை விடுங்கள். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எத்தனை பேர் கவலைப்படுகிறார்கள்?

முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.

இப்போதல்லவா தெரிகிறது ஏன் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காய் விஷயத்தில் பின்வாங்கினார் என்பதும், தாற்காலிகமாகக் கைவிடப்பட்டது என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தார் என்பதும். இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.

இந்த ஆட்சியும் அரசும் யாருக்காக நடைபெறுகிறது? இவர்கள் இந்தியாவை என்னதான் செய்யக் கருதுகிறார்கள்? தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்ட அவலநிலையைக் கண்டு நமது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒருவருக்குக்கூட எதிர்ப்புக் குரல் எழுப்பத் துணிவில்லையா, இல்லை இவர்களும் விலைபேசப்பட்டு விட்டனரா?

thanks to dinamani

Tuesday, February 16, 2010

தமிழகத்தை எதிர்நோக்கும் இன்னொரு சவால்

இந்திய மருத்துவக் கழகமும்,​​ சி.பி.ராமசாமி ஐயர் சுற்றுச்சூழல் பயிற்சி மையமும் இணைந்து மருத்துவக் கழிவுகளைக் கையாள்வது பற்றிய ஒரு பயிலரங்கத்தைக் கோவையில் சனிக்கிழமை நடத்தின.​ இதுபோன்ற பயிலரங்கங்களைத் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியமும் நடத்தி வருகிறது.

நாளும் பெருகிவரும் மருத்துவமனைகளும்,​​ ரத்தப் பரிசோதனைச் சாலைகளும் தொற்று நோய்களைப் பரவச் செய்யும் பல மருத்துவக் கழிவுகளையும்,​​ உயிரிக் கழிவுகளையும் அன்றாடம் வெளியேற்றுகின்றன.​ இவை தகுந்த முறையில் தரம் பிரிக்கப்பட்டு,​​ அந்தந்தக் கழிவுகளின் தன்மைக்கேற்ப அழிக்கப்பட வேண்டும்.​ ஆனால்,​​ குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் தவிர பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகள் முறையாகக் கையாளப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருவது தொடர்கிறது.

ஒரு மருத்துவமனையில் அன்றாடம் ஏற்படும் கழிவுகளில் 80 சதவிகிதம் குப்பை கூளங்களின் ரகத்தைச் சேர்ந்தவைதான்.​ ஏனைய 20 சதவிகிதம் மிகவும் ஆபத்தான உயிரிக் கழிவுகள்.​ இவை சரியான முறையில் கையாளப்பட்டு அழிக்கப்படாவிட்டால் அதன் நச்சுத்தன்மையும்,​​ கிருமித்தன்மையும் தொடர்விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையன.​ உதாரணத்துக்கு,​​ பயன்பாடு முடிந்த ஊசிகளை எடுத்துக்கொண்டால் அவை முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டியவை.​ இப்போது மண்ணுக்குள் புதைப்பதுடன் நிறுத்தி விடுகிறோம்.

மருத்துவக் கழிவுகளை வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட குப்பைத் தொட்டிகளில் போட்டு இனம் பிரிக்க வேண்டும் என்கிற இந்திய மருத்துவக் கழகத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது.​ இதை முறையாகச் செயல்படுத்த வேண்டிய கடமை செவிலியர்களைச் சாரும்.​ பல்வேறு இக்கட்டான அவசர வேலைகளால் செவிலியர்கள் இந்த வரைமுறையைப் பின்பற்றுவதில்லை என்கிற குற்றச்சாட்டை அந்தப் பயிலரங்கத்தில் சிலர் முன்வைத்ததில் உண்மை இல்லாமல் இல்லை.​ பழக்கம் மட்டுமே இந்தக் குறைபாட்டை நீக்கவல்ல மருந்து.

மருத்துவக் கழிவுகள் என்பது மேலோட்டமாகப் பிரித்தால் மூன்று வகைப்படும்.​ பேண்டேஜ்,​​ பஞ்சு,​​ மருந்துக் குப்பிகள்,​​ அட்டைப் பெட்டிகள்,​​ பிளாஸ்டிக் சிரிஞ்சுகள்,​​ உபகரணங்கள் போன்ற திடப்பொருள்கள் ஒருவகை.​ திரவப் பொருள்கள் இன்னொரு வகை.​ இந்த இரண்டையும்விட ஆபத்தான மூன்றாவது வகையைச் சேர்ந்தவை,​​ பரிசோதனைச் சாலை மற்றும் அறுவை சிகிச்சைகளால் ஏற்படும் கழிவுகள்.

இந்தியா முழுவதுமாக எடுத்துக் கொண்டால் நாளொன்றுக்கு சுமார் 408.60 டன் மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.​ இந்தியாவின் மொத்த தினசரி மருத்துவக் கழிவுகளில் 294.75 டன்கள் மட்டுமே முறையாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அழிக்கப்படுகின்றன.

மருத்துவக் கழிவுகளைக் கையாள விஞ்ஞான ரீதியாக அமைந்த கழிவு அழிப்பு நிலையங்கள் இந்தியாவில் 50 மட்டுமே.​ தமிழகத்தில் 13.​ இந்த நிலையங்களின் எண்ணிக்கை குறைந்தது நான்கு மடங்காவது அதிகரிக்கப்படாவிட்டால்,​​ தொற்றுநோய்கள் பரவுவதையும்,​​ உயிரிக்கழிவின் நச்சு மண்ணில் கலப்பதையும் தடுத்து நிறுத்துவது கடினம்.​ மருத்துவக் கழிவுகள் மண்ணில் கலப்பதும்,​​ ஓடைகள் மூலம் ஆறுகளில் கலப்பதும் நிலத்தடி நீரையும்,​​ குடிநீரையும் மாசுபடுத்துவதுடன் அபாயகரமான சுகாதாரச் சீர்கேடுகளை விளைவிக்கும் என்பதில் என்ன சந்தேகம்?

தமிழகத்தை எதிர்நோக்கும் இன்னொரு சவால்,​​ எல்லா மருத்துவமனைகளும்,​​ கழிவுகளை அகற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்காமல் இருப்பதுதான்.​ வெவ்வேறு நிறத்திலான குப்பைத் தொட்டிகளில் இனம் பிரித்து மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு,​​ முறையான பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி இதற்காக அமைக்கப்பட்டுள்ள கழிவுகளைக் கையாளும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கவோ,​​ புதைக்கவோ செய்வதுதான் மருத்துவக் கழக விதி.​ ஆனால்,​​ 30 சதவிகிதம் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்படுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

உலக வங்கி,மருத்துவக் கழிவுகளைச் சேகரித்து முறையாகக் கையாள்வதற்காகத் தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க இருப்பதாகத் தெரிகிறது.​ மருத்துவக் கழிவுகளைக் கையாள இப்போது இருக்கும் 13 நிலையங்கள் குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒன்றாக அதிகரிக்கப்படுமா என்பது தெரியவில்லை.

அரசும் மருத்துவமனைகளும் இந்தப் பிரச்னையில் விழிப்பாக இருக்கிறதோ இல்லையோ பொதுமக்கள் விழிப்பாகச் செயல்பட்டு,​​ மருத்துவக் கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதித்து சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும்.​ நோய்கள் பரவினால் பாதிக்கப்படுவதும்,​​ அவதிப்படுவதும் நாம்தான்.​ அரசுக்குத் தேவை கடமையுணர்வும்,​​ சுறுசுறுப்பும்.​ பொதுமக்களுக்குத் தேவை அக்கறையும் விழிப்புணர்வும்!

thanks to dinamani

பொறுப்பேற்க வேண்டியவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிநிறுவனம்.​

எல்லா மாநிலங்களிலும் பரவலாக எதிர்ப்பு தோன்றியதையடுத்து,​​ குறிப்பாக இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டங்களில் காணப்பட்ட ஏகோபித்த எதிர்ப்பைக் கண்டு,​​ மரபீனி மாற்றுக் கத்தரிக்காயை அறிமுகம் செய்வதை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு.​ இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டோம் என்ற சொல்லத் துணிவில்லாமல்,​​ தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கும் வேளாண் தொழில்துறையினருக்கும் ஏற்புடைய வகையில் அறிவியல் உண்மைகள் நிறுவப்படும் வரை,​​ சுற்றுச்சூழலுக்கும் மனித உடலுக்கும் தீமை விளைவிக்காது என்பதை ​ நீண்டகாலச் சோதனைகள் நடத்தி முடிவுகள் காணப்படும்வரை இந்த பி.டி.​ கத்தரிக்காயை நிறுத்தி வைப்பதாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.​ ​

இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டித்தான் இத்தனை நாள்களாக விவசாயிகள் போராடி வந்தனர்.​ ஆனாலும்,​​ அதே காரணங்களை அரசே தன் வாயால் சொல்லி,​​ நிறுத்தி வைப்பதுதானே அரசின் வழக்கம்.​ அந்த வழிவழி வந்த நடைமுறை மாறாமல்,​​ ஏதோ தாங்களாகவே நிறுத்தி வைப்பதைப்போல பி.டி.கத்தரிக்காயை மூட்டை கட்டி வைக்கத் தீர்மானித்தார்கள்.​ கடைசியாக,​​ இப்போதாகிலும் இத்தகைய நல்ல முடிவு எடுத்தார்களே என்பதற்காக மத்திய அரசைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பி.டி. ​ கத்தரிக்காய் தடை செய்ததில் வெற்றி அடைந்த களிப்பில் இன்னும் சில கடமைகளை வேளாண் போராளிகள் மறந்துவிடக்கூடாது.​ இந்தியாவில்,​​ கத்தரிக்காய் போன்று 46 வகை உணவுத் தாவரங்களுக்கு இத்தகைய மரபீனி மாற்று வடிவங்கள் சோதனை அடிப்படையில்,​​ ​ வளர்க்கப்பட்டு வருகின்றன.​ இவையும் மெல்லமெல்ல தலைகாட்டும் என்பதை மறந்துவிடக்கூடாது.​ இவற்றில் கத்தரிக்காய்போல,​​ அனைவராலும் உண்ணப்படும் முக்கிய பயிரான நெல் ரகமும் இருக்கிறது.

கத்தரிக்காய் மீதான எதிர்ப்புகள் அதிகமாக இருந்ததால்,​​ சற்றே கிடப்பில் போடப்பட்ட மரபீனி மாற்று நெல் ரகங்கள் தற்போது வேறு வடிவம் கொள்ளவும்,​​ அவற்றை வீரிய ரகங்களாகச் சந்தைக்குள் கொண்டுவரவும் புதியபுதிய உத்திகளைக் கையாளுவார்கள் என்று சொல்லப்படுகிறது.​ இவை வீரிய ரகங்களாகச் ​ சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டால்,​​ அவற்றை பிரித்தறியும் திறன் நம்மில் பலருக்கும் கிடையாது.​ ஆகவே,​​ வேளாண் போராளிகள் இத்தகைய மரபீனி மாற்று ஆய்வுக்காக களத்தில் சாகுபடி நிலையில் உள்ள அனைத்துப் பயிர்களையும் கண்டறிந்து அத்தகைய சோதனை முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.

பி.டி. ​ கத்தரிக்காய் எதிர்ப்பு வெற்றியில் முடிந்ததற்கு காரணம்,​​ இதை அனைவரும் சாப்பிடுகிறோம் என்பதுடன் இப்பயிர் அனைத்து மாநிலங்களிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது என்பதும்தான்.​ கத்தரிக்காய் அல்லாமல்,​​ சில மாநிலங்கள் மட்டுமே விளைவிக்கும் சில வகை உணவுப் பயிர்களுக்கு மரபீனி மாற்று அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் நிச்சயமாக முழுமையான எதிர்ப்புத் தோன்றியிருக்காது.​ சில மாநிலங்களில் மட்டும் எதிர்ப்பு எழுந்து,​​ பிசுபிசுத்துப் போயிருக்கும்.

இத்தகைய குளறுபடிகள் அனைத்துக்கும் அரசையும் இதற்கான பொறுப்பு வகிக்கும் ஆட்சியாளர்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை.​ இந்தக் குளறுபடிக்கு மிகப்பெரும் பொறுப்பேற்க வேண்டியவர்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்களும் என்பதை நாம் மறுப்பதற்கில்லை.

பி.டி.​ கத்தரிக்காய் அறிமுகம்,​​ சாகுபடி இவற்றுக்கு மூல ஆதார நிறுவனம் மான்சாண்டோ.​ இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான மைக்கோ மூலமாகத்தான் இந்தியாவில் பி.டி,​​ கத்தரிக்காய் எடுத்துக்கொள்ளப்பட்டது.​ இது எந்த வித ஆபத்தையும் விளைவிக்காது என்று பரிந்துரை செய்த நிறுவனம் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்.​ ​

இந்திய ஆட்சியாளர்களைவிட,​​ இந்திய ஆராய்ச்சியாளர்களைக் கைக்குள் போட்டுக்கொள்வதில் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வெற்றிதான்,​​ இத்தகைய தேவையற்ற மரபீனி மாற்று உணவுப் பொருள்கள் இந்தியாவுக்குள் நுழையக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

இந்தியாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள்,​​ இந்திய வேளாண் ஆராய்ச்சிக் ​ கழகம் ஆகியவற்றின் பல ஆராய்ச்சிகளுக்கு நிதிநல்கை பெருந்தகையாளர்களாக மான்சாண்டோ,​​ ஃபோர்டு போன்ற பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன.​ இந்தியாவில் ஆராய்ச்சி செய்வதோடு,​​ ஆய்வு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பெறும் களப்பணிக்கு,​​ நம் ஆராய்ச்சியாளர்களை ஐரோப்பா,​​ அமெரிக்கா போன்ற நாடுகளைக்கு நிதிநல்கையுடன் அழைத்துச் செல்லவும் செய்கிறார்கள்.​ இந்த ஆராய்ச்சியாளர்கள்தான் அரசு மற்றும் பல்கலைக்கழகப் பணிகளில் உயர் பதவிக்கு வருபவர்களும்!​ பழைய நட்பு புதுப்பிக்கப்படுகிறது.​ அன்பினால் நெருக்கடி தந்து,​​ ​ தங்களுக்குச் சாதகமான மரபீனி மாற்றுப் பயிர்களை இந்தியச் சந்தையில் நுழைக்கும் அனைத்து கருத்துருக்களையும் தயாரிக்க வைக்கிறார்கள்.​ பிறகுதான் ஆட்சியாளர்களை மயக்கும் வித்தையை இந்த பன்னாட்டு நிறுவனங்கள் கையில் எடுக்கின்றன.

இந்த நிலைமை ஏற்படக் காரணம் இந்திய அரசு,​​ வேளாண் ஆராய்ச்சிகளுக்கு போதிய ஆர்வம் காட்டாமல்,​​ போதிய நிதி ஒதுக்காமல்,​​ இவ்வாறாக அன்னிய நிதிநல்கைகளைப் பெற்றுக்கொள்வதை அனுமதிப்பதுதான் என்றால் அது மிகையாகாது.​ இந்திய அரசுப் பணத்தில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வுகளை நடத்தவும்,​​ பன்னாட்டு நிதிநிறுவனம்,​​ அல்லது அத்தகைய தொடர்புகள் உள்ள நிறுவனங்களின் நிதிநல்கையைத் தவிர்ப்பதும் இந்திய வேளாண் ஆராய்ச்சியாளர்கள் ​ முழுக்க முழுக்க இந்தியத்தன்மையோடு நிலைத்து நிற்க நிச்சயம் உதவியாக இருக்கும்.


thanks to dinamani

Wednesday, January 27, 2010

கீரை, காய்கறிக்கு ரசாயன மருந்து : கடும் பாதிப்பு அபாயம்

ரசாயன மருந்து தெளித்த சில மணி நேரத் தில், அறுவடை செய்யப் பட்ட காய், கீரைகள் விற்பனைக்கு வருகின்றன. இதனால், கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


உடல் ஆரோக்கியத்திற்கான சைவ உணவுகளில், காய்கறி, கீரைகள் முக்கியமானவை. இவைகளை கொண்டு, பொரியல், அவியல், காய்கறி கூட்டு, சாம்பார் உள் ளிட்டவை செய்யப்படுகின்றன. உடலில் சத்து குறைபாடு உள்ளவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் ஆகியோர், நாள்தோறும் காய்கறி, கீரை சாப்பிடவேண்டும் என, டாக்டர் கள் அறிவுறுத்துகின்றனர். தற்போது காய்கறிகள், கீரைகள் விளைவிக்க, அதிக அளவில் ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. பூச்சிக்கொல்லி மருந்து தெளித்த சில மணி நேரத் தில், காய்கறிகள், கீரைகள் விற்பனைக்கு வருகின்றன. கத்தரிக்காய், தக்காளி, வெண்டை, காலிப்ளவர், அவரைக்காய் போன்ற காய்களின் உள்ளே புகுந்து விடும் புழுக்களை கொல்ல, வீரியம் நிறைந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.


காய்கள், கீரைகள் நாள்தோறும் அறுவடை செய்ய வேண்டும்; இல்லையெனில், அவை முதிர்ந்து விடும். எனவே, காய்கள் மற்றும் கீரைகளிலுள்ள ரசாயன மருந்தின் மணம் மாறாத நிலையில், அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு வருகின்றன. அதை வாங்கி சமைக்கப் படும் நிலையில், மருந்தின் வீரியம் குறையாமல் உட் கொள்ளப்படுகின்றன. தண்டு கீரை, சிறு கீரை, அரை கீரை, புதினா, கொத்தமல்லி, மணத்தக் காளி உள்ளிட்ட கீரைகள் செழித்து வளர, அளவுக்கு அதிகமான வகையில் யூரியா போடப்படுகிறது; கீரைகளின் தண்டு பகுதி, இலை பகுதியை பூச்சி, புழுக்கள் சேதபடுத்தாமல் இருக்க, வீரியமான ரசாயன பூச்சிக்கொல்லி மருந் துகள் தெளிக்கப்படுகின் றன. பூச்சிக்கொல்லி மருந் தின் மணம் வீசும் காய் மற்றும் கீரைகள் சாப்பிடுவதால், குடல் புண், வாயு தொல்லை, மூலம், மலச்சிக்கல் போன்ற தொந் தரவுகள் ஏற்பட்டுள்ளன.


தோட்டக்கலைத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: வீரியம் குறைந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை அடித்தால், தற்போது இருக்கும் புழு, பூச்சிகள் இறப்பதில்லை. காய் மற்றும் கீரைகளுக்கு அதிக திறன் கொண்ட ரசாயன மருந்துகளை பயன்படுத்த வேண்டியுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து அடித்த மூன்று தினங்கள் கழித்து, காய் மற்றும் கீரைகள் அறுவடை செய்ய வேண்டும். தற்போது, மருந்து அடிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. பொதுமக்களின் ஆரோக்கியத்தை காப்பாற்ற, விற்பனைக்கு வரும் காய் மற்றும் கீரைகள் தர பரிசோதனை செய்து விற்க அனுமதிக்க வேண்டும். அதற்கு உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில், தர பரிசோதனைக் கூடம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அலுவலர் கூறினார்.

readers comments

வீரியம் நிறைந்த பூச்சிக்கொல்லி ரசாயன மருந்துகளை உபயோகப்படுத்துவதால்
மூலம், மலச்சிக்கல், கான்செர் போன்ற வியாதிகள் வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. பல ஐரோப்பிய நாடுகளில் இப்படித்தான் பலதரப்பட்ட பிரச்சினைகள்; அதன் பிறகு அவர்கள் விதவிதமான கெமிகல் மருந்து மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு இருக்கிறாகள்! இந்தியாவுக்கும் இந்த நிலைமை வேண்டாமே!! ப்ளீஸ் இதை இந்திய மதிய அரசு உடனடியாக கவனிக்க வேண்டும்!!!!

by L Kavirichelvi,Crete,Greece

மிகவும் கொடுமை இது. படிக்கவே கஷ்டமாக இருக்கிறது. எந்த வித கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் பாதிக்கப்படுவது கொடுமையிலும் கொடுமை.
தர பரிசோதனைக் கூடம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் மனசாட்சியுள்ள ல்ஞ்சத்திற்கு மயங்காத நல்ல ஆய்வக அலுவலர்கள் பணிபுரியவேண்டும்.

by K JEEVITHAN,villupuram,India

பயனற்ற உணவு வகைகள் என்பவை நம் உடம்பை வியாதிக்கு உள்ளாக்கி நம்முடைய ஆயுளை குறைக்கக் கூடியவை. செயற்கையாக மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் எல்லாம் இந்தப் பிரிவின் கீழ் அடங்கும். உடம்பிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் இவற்றில் இருக்காது. மேலும் இந்த பயனற்ற உணவுப் பண்டங்கள் புற்றுநோய், சர்க்கரை நோய், இதயக் கோளாறுகள் ஆகியவற்றை உண்டு பண்ணக் கூடியவை.
-----------------------------
விஞ்ஞான வளர்ச்சியால் செயற்கை உரங்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை உரங்களை பதப்படுத்தி, பக்குவப்படுத்தி தயாரிப்பதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதனாலேயே செயற்கை உரங்களை நம்மூர் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இவற்றால் வயல்களுக்கும், பயிர்களுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை விவசாயிகள் தெரிந்து கொள்ளவில்லை என்பதே உண்மை.
------------------------------------
யூரியா உள்ளிட்ட செயற்கை உரங்களை பயன்படுத்தாமல், பசுவின் சாணத்தை கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை எந்தவித பாதிப்பும் இல்லாத நெல், அரிசி கிடைக்கும். இதனை உட்கொண்டால் சர்க்கரை வியாதி உள்ளிட்ட இதர வியாதிகள் வராமல் தடுக்க முடியும்.
by தில்லாலங்கடி,தில்லையாடி,India

அவசியமான கட்டுரை.இதிலிருந்து மக்கள் தான் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.எந்த ஒரு கெட்ட வழக்கமும் இல்லாதவர்கள் பாதிக்கப்படுவது மிகவும் கொடுமை. விற்பனைக்கு வரும் காய் மற்றும் கீரைகளை தர பரிசோதனை செய்ய உழவர் சந்தை, காய்கறி சந்தை ஆகிய இடங்களில், தர பரிசோதனைக் கூடம் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் மனசாட்சியுள்ள ல்ஞ்சத்திற்கு மயங்காத நல்ல ஆய்வக அலுவலர்கள் பணிபுரியவேண்டும்.
by துரை.செல்வராஜு,,Thanjavur,India

எல்லா கீரை, காய்கறிகள், தோலுடன் சாப்பிடும் பழ வகைகள் ஆகியவற்றை தண்ணீரில் நீண்ட நேரம் ஊற வைத்தோ கழுவியோ சமைப்பது தான் நம்மை காத்துக் கொள்ளும் வழி. இயற்கை விவசாயத்திற்கு எவ்வளவு சீக்கிரம் மாறுகிறோமோ அவ்வளவு நல்லது, நமது சிறார்களுக்கு. குறுகி வரும் விளை நிலங்களும், உரிய விலை கிடைக்காத விவசாயமும், சுரணையே இல்லாத அரசும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
by N.S Sankaran,Chennai,India

தற்போது உணவுக்குழாய் சார்ந்த புற்று நோய் வர இவ்வனைத்தும் காரணமாக இருக்கலாம். ஆச்சரியப்படகூடிய உண்மை என்னவென்றால் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளோர் எந்த ஒரு கெட்ட வழக்கமும் இல்லாதவர்கள். ஆகவே, தகுந்த விழிப்புணர்வை அரசும் மற்ற சார்பற்ற நிறுவனங்களும் ஏற்படுத்த வேண்டும்.
by R சுந்தர்,QATAR,Qatar \

thanks to dinamalar

பி.டி.கத்தரிக்காய்க்கு தடை:தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் பி.டி.கத்தரிக்காயை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்டு பயிரிடப்படும் பயிர்களினால் உடல் நலக்கோளாறு ஏற்படும் ஆபத்து உள்ளதாகவும், வேளாண் நிலங்கள் பாதிக்கும் ஆபத்தினால் விவசாய நிலங்களும், விவசாயிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் எனவே தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட பி.டி.ரக கத்தரிக்காய் உற்பத்திக்கும்,விற்பனைக்கும் தடைவிதிக்கவேண்டும், பிற மரபணுமாற்றப்பட்ட பயிர்களை விவசாயம் செய்யவும் தடை விதிக்கவேண்டும் என்று விவசாயிகள்,வேளாண்மை அமைப்புகள்.

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இது தொடர்பாக பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பின் சார்பில் ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம், நடிகை ரோகினி உள்ளிட்ட அவ்வமைப்பின் நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு அளித்தனர்.

மரபணு காய்களினால் ஏற்படும் ஆபத்து குறித்து விரிவாக எடுத்துரைந்தனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் … ''முதல்வர் கருணாநிதியை அவரது வீட்டில் பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம் பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு பெண்கள் இணைப்புக் குழு ஆகியவற்றின் நிர்வாகிகள் சந்தித்து மரபணு மாற்றுக் கத்தரிக்காயை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டனர்.

முதல்வர் கருணாநிதி அதுபற்றி அரசு அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என்றுதெரிவித்தார்.மேலும் எந்தவொரு அதிகாரியும் தமிழக அரசு முடிவெடுக்கும் வரை இதை விற்கவோ பயிரிடவோஅனுமதிக்கக் கூடாது.'' என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, January 14, 2010

பி.டி., கத்தரிக்காய் பயிரிட்டால் 200க்கும் மேற்பட்ட செடிகள் அழியும் : நம்மாழ்வார் எச்சரிக்கை

""பி.டி., கத்தரி சாகுபடி செய்யும் பட்சத்தில், கத்தரி இனத்தை சேர்ந்த தூதுவளை, சுண்டக்காய், கண்டகத்தரி, மணத்தக்காளி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் அழிந்து விடும்,'' என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.கோவை வேளாண் பல்கலை மற்றும் அமெரிக்கா விதை நிறுவனமான மான்சான்டோவின் இந்திய பங்குதாரர் "மஹிகோ' நிறுவனமும் காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் மரபணு மாற்றம் செய்த பி.டி., கத்தரிக்காயை உற்பத்தி செய்துள்ளது.


பி.டி.,கத்தரிக்காய்க்கு, இந்திய உயர் தொழில் நுட்பவியல் ஒழுங்குமுறை அமைப்பு, மத்திய அமைச்சகத்துடன் இணைந்த ஜெனிடிக் இன்ஜினியரிங் ஒப்புதல் கமிட்டியும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்தியாவில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, காய்கறி உற்பத்தியை பெருக்குவதற்காக, தட்ப வெப்ப நிலைக்கு தாக்கு பிடித்து, அதிக அளவில் காய்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.பி.டி., கத்தரியை சாகுபடி செய்வது தொடர்பாக, விவசாயிகளின் கருத்து கேட்க, மத்திய அரசு இம்மாதம் நாடு முழுவதும் ஆறு மாநில தலைநகரங்களில் கூட்டம் நடத்தவுள்ளது.


பி.டி., கத்தரி தொடர்பாக அகில இந்திய இயற்கை உழவர் இயக்க தலைவரும், இயற்கை விஞ்ஞானியுமான நம்மாழ்வார் கூறியதாவது:விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பின்னர் பி.டி., கத்தரி சாகுபடி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கினாலும் ஆச்சரியமில்லை. ஆனால், தமிழகத்தில் பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், விவசாயிகளிடம் நேரில் சென்று பி.டி., கத்தரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.தற்போது பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்கினால், படிப்படியாக, அனைத்து காய்கனிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விடும். பி.டி., கத்தரி குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவித் தொகை வழங்குகிறது. அதனால்தான் பி.டி., கத்தரி எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என, அவர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால், பி.டி., கத்தரி சாப்பிட்டால் புற்றுநோய், மலட்டுதன்மை, அலர்ஜி போன்ற நோய்கள் வரும் அபாயம் உள்ளது.


தூதுவாளை, கண்டங்கத்தரி, மணதக்காளி, சுண்டக்காய் என, கத்தரி இனத்தில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் நாட்டில் இருந்தது. இவற்றில் பெரும்பாலான ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விட்டன.பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், அதன் விதையை எடுத்து மீண்டும் உபயோகப்படுத்த முடியாது. பதிலாக, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து தான், ஒவ்வொரு முறையும் விதைகள் வாங்கியாக வேண்டும். பி.டி.,கத்தரி சாகுபடி செய்யும் போது, அந்த பூக்களில் அமரும் பூச்சிகள்தான், பிற கத்தரி இன பூக்களுக்கும் சென்று மகரந்த சேர்க்கையில் ஈடுபடும்.அவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகள், பிற கத்தரி இன பூக்களில் அமரும் போது, அந்த பூக்களும் மலடாகி காலப்போக்கில் கத்தரி இனமே முற்றிலும் அழிந்து விடும். மீண்டும் சாகுபடி செய்வதற்காக எடுத்து வைக்கும் விதையும் முளைக்காது.


எதிர்காலத்தில், ஒட்டுமொத்த விவசாயிகளும் பி.டி.,கத்தரி விதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.நாட்டின் ஒட்டுமொத்த காய்கறி உற்பத்தியும் ஒரு சில தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அவர்கள் எவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்தாலும், அந்த விலைக்கு விதைகளை வாங்கியே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். விவசாயிகளும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, இந்த ஆபத்தை தடுக்க முடியும்.இவ்வாறு நம்மாழ்வார் கூறினார்.

thanks to dinamalar