இந்திய மருத்துவக் கழகமும், சி.பி.ராமசாமி ஐயர் சுற்றுச்சூழல் பயிற்சி மையமும் இணைந்து மருத்துவக் கழிவுகளைக் கையாள்வது பற்றிய ஒரு பயிலரங்கத்தைக் கோவையில் சனிக்கிழமை நடத்தின. இதுபோன்ற பயிலரங்கங்களைத் தமிழக மாசுக் கட்டுப்பாடு வாரியமும் நடத்தி வருகிறது.
நாளும் பெருகிவரும் மருத்துவமனைகளும், ரத்தப் பரிசோதனைச் சாலைகளும் தொற்று நோய்களைப் பரவச் செய்யும் பல மருத்துவக் கழிவுகளையும், உயிரிக் கழிவுகளையும் அன்றாடம் வெளியேற்றுகின்றன. இவை தகுந்த முறையில் தரம் பிரிக்கப்பட்டு, அந்தந்தக் கழிவுகளின் தன்மைக்கேற்ப அழிக்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட சில மருத்துவமனைகள் தவிர பெரும்பாலான மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகள் முறையாகக் கையாளப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருவது தொடர்கிறது.
ஒரு மருத்துவமனையில் அன்றாடம் ஏற்படும் கழிவுகளில் 80 சதவிகிதம் குப்பை கூளங்களின் ரகத்தைச் சேர்ந்தவைதான். ஏனைய 20 சதவிகிதம் மிகவும் ஆபத்தான உயிரிக் கழிவுகள். இவை சரியான முறையில் கையாளப்பட்டு அழிக்கப்படாவிட்டால் அதன் நச்சுத்தன்மையும், கிருமித்தன்மையும் தொடர்விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையன. உதாரணத்துக்கு, பயன்பாடு முடிந்த ஊசிகளை எடுத்துக்கொண்டால் அவை முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டியவை. இப்போது மண்ணுக்குள் புதைப்பதுடன் நிறுத்தி விடுகிறோம்.
மருத்துவக் கழிவுகளை வெவ்வேறு வண்ணங்களைக் கொண்ட குப்பைத் தொட்டிகளில் போட்டு இனம் பிரிக்க வேண்டும் என்கிற இந்திய மருத்துவக் கழகத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது. இதை முறையாகச் செயல்படுத்த வேண்டிய கடமை செவிலியர்களைச் சாரும். பல்வேறு இக்கட்டான அவசர வேலைகளால் செவிலியர்கள் இந்த வரைமுறையைப் பின்பற்றுவதில்லை என்கிற குற்றச்சாட்டை அந்தப் பயிலரங்கத்தில் சிலர் முன்வைத்ததில் உண்மை இல்லாமல் இல்லை. பழக்கம் மட்டுமே இந்தக் குறைபாட்டை நீக்கவல்ல மருந்து.
மருத்துவக் கழிவுகள் என்பது மேலோட்டமாகப் பிரித்தால் மூன்று வகைப்படும். பேண்டேஜ், பஞ்சு, மருந்துக் குப்பிகள், அட்டைப் பெட்டிகள், பிளாஸ்டிக் சிரிஞ்சுகள், உபகரணங்கள் போன்ற திடப்பொருள்கள் ஒருவகை. திரவப் பொருள்கள் இன்னொரு வகை. இந்த இரண்டையும்விட ஆபத்தான மூன்றாவது வகையைச் சேர்ந்தவை, பரிசோதனைச் சாலை மற்றும் அறுவை சிகிச்சைகளால் ஏற்படும் கழிவுகள்.
இந்தியா முழுவதுமாக எடுத்துக் கொண்டால் நாளொன்றுக்கு சுமார் 408.60 டன் மருத்துவக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இந்தியாவின் மொத்த தினசரி மருத்துவக் கழிவுகளில் 294.75 டன்கள் மட்டுமே முறையாகவும் விஞ்ஞான ரீதியாகவும் அழிக்கப்படுகின்றன.
மருத்துவக் கழிவுகளைக் கையாள விஞ்ஞான ரீதியாக அமைந்த கழிவு அழிப்பு நிலையங்கள் இந்தியாவில் 50 மட்டுமே. தமிழகத்தில் 13. இந்த நிலையங்களின் எண்ணிக்கை குறைந்தது நான்கு மடங்காவது அதிகரிக்கப்படாவிட்டால், தொற்றுநோய்கள் பரவுவதையும், உயிரிக்கழிவின் நச்சு மண்ணில் கலப்பதையும் தடுத்து நிறுத்துவது கடினம். மருத்துவக் கழிவுகள் மண்ணில் கலப்பதும், ஓடைகள் மூலம் ஆறுகளில் கலப்பதும் நிலத்தடி நீரையும், குடிநீரையும் மாசுபடுத்துவதுடன் அபாயகரமான சுகாதாரச் சீர்கேடுகளை விளைவிக்கும் என்பதில் என்ன சந்தேகம்?
தமிழகத்தை எதிர்நோக்கும் இன்னொரு சவால், எல்லா மருத்துவமனைகளும், கழிவுகளை அகற்றுவதற்கு முன்னுரிமை கொடுக்காமல் இருப்பதுதான். வெவ்வேறு நிறத்திலான குப்பைத் தொட்டிகளில் இனம் பிரித்து மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, முறையான பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி இதற்காக அமைக்கப்பட்டுள்ள கழிவுகளைக் கையாளும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கவோ, புதைக்கவோ செய்வதுதான் மருத்துவக் கழக விதி. ஆனால், 30 சதவிகிதம் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அழிக்கப்படுவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
உலக வங்கி,மருத்துவக் கழிவுகளைச் சேகரித்து முறையாகக் கையாள்வதற்காகத் தமிழக அரசுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க இருப்பதாகத் தெரிகிறது. மருத்துவக் கழிவுகளைக் கையாள இப்போது இருக்கும் 13 நிலையங்கள் குறைந்தபட்சம் மாவட்டத்துக்கு ஒன்றாக அதிகரிக்கப்படுமா என்பது தெரியவில்லை.
அரசும் மருத்துவமனைகளும் இந்தப் பிரச்னையில் விழிப்பாக இருக்கிறதோ இல்லையோ பொதுமக்கள் விழிப்பாகச் செயல்பட்டு, மருத்துவக் கழிவுகள் சுற்றுச்சூழலைப் பாதித்து சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொண்டாக வேண்டும். நோய்கள் பரவினால் பாதிக்கப்படுவதும், அவதிப்படுவதும் நாம்தான். அரசுக்குத் தேவை கடமையுணர்வும், சுறுசுறுப்பும். பொதுமக்களுக்குத் தேவை அக்கறையும் விழிப்புணர்வும்!
thanks to dinamani
No comments:
Post a Comment