Wednesday, November 9, 2011

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையான, நிலையான பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்கின்ற மனவருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

அதாவது இத்திட்டங்கள் இனிமேல் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படும்.  வேலை உறுதியளிப்பு திட்டத்தின் அடிப்படையே, விவசாயப் பணிகள் இல்லாத வெற்று நாட்களில் விவசாயிகள் வேலையில்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், அத்தகைய காலகட்டங்களில் இவர்களுக்கு அதே பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காகத்தான்.  

இத்திட்டம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சுயநல விருப்பங்களுக்காக நடத்தப்படும் திட்டமாகவும், இதில் குறைந்தபட்சம் ரூ. 100 கூலியை முழுதாகத் தராமல், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் குறைந்தபட்சம் ரூ. 25 வரை பிடித்தம் செய்து பங்குபோட்டுக் கொள்கிறார்கள் என்றும் புகார்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. 

அறுவடை உள்ளிட்ட விவசாயப் பணிகள் நடைபெற வேண்டிய நாளில் இத்தகைய திட்டத்தை அரசு எடுத்துக்கொள்ளும்போது, விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்று இத்திட்டம் குறித்து பல இடங்களில் இருந்தும் பலவாறு புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.  உத்தரப்பிரதேசத்தில் 7 மாவட்டங்களில், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் நிதி முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்த, அதற்கு அம்மாநில முதல்வர் மாயாவதி மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். 

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மாயாவதி கூறினாலும், இந்த நிதியை எந்த மாநிலமும் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.  ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களுக்குத் தரப்படும் நிதிகள் தொடர்பான தணிக்கை இதுவரை மேற்கொள்ளப்பட்டதே இல்லை. இப்போதுதான் முதல்முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. 

அதுமட்டுமன்றி, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்துள்ள பாராட்டுக்குரிய நல்ல செயல், தனது அமைச்சகத்தின் மூலம் நிதி வழங்கப்படும் குடிநீர் மற்றும் கழிப்பறைத் திட்டங்கள் குறித்தும் தலைமை கணக்கு தணிக்கையாளர் துறை ஆய்வு செய்யும் என்று அறிவித்திருப்பதுதான்.  மாநில அரசும், கிராமப் பஞ்சாயத்தும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இந்த முறைகேடுகளிலிருந்து தப்பிவிட முடியாது. 

இத்திட்டங்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக நிதிஒதுக்கீடு பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அசாம், ஆந்திரப் பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், ஒரிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் தற்போது முதல்கட்டமாக சிஏஜி தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும் இருப்பதால், மாயாவதி அச்சம் தெரிவித்திருப்பதைப்போல, வெறுமனே அரசியல் பழிவாங்கும் எண்ணம் இருப்பதாகத் தோன்றவில்லை. 

 மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஊழல் நடைபெற முக்கிய காரணமே இதில் செய்யப்படும் பணிகள் நிரந்தரமானவை இல்லை என்பதுதான். 

ஏரி, குளத்தை ஆழப்படுத்தும் பணியும், கரைகளைப் பலப்படுத்தும் பணியும் நிரந்தரமானவையாகக் கருதப்பட முடியாத பணிகள். மழைக்காலத்தில் ஏரி, குளத்தின் கரைகள் கரைந்து போகும். ஆழப்படுத்தப்பட்ட ஏரிகள் மழையில் தூர்ந்துபோகும். ஆகவே, இத்திட்டத்தில் பொய்க்கணக்கு எழுதி சம்பாதிப்பது என்பது மிக எளிதாக இருக்கிறது. கிராமத்து ஆள்களைக் கூட்டி வந்து மதியச் சாப்பாடு போட்டு, கையில் ரூ.20, 30 கொடுத்து அனுப்பி விட்டு, 50 பேர் வந்த இடத்தில் 100 பேருக்குக் கணக்கு எழுதினாலும் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. 

 இவற்றையெல்லாம் எப்படி முறையான செலவுக்கணக்கில் கொண்டுவந்தால், இந்தத் தணிக்கையை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்காக சிஏஜி அதிகாரிகள் கலந்துபேசி வருகிறார்கள். விரைவில் ஒரு பொதுவான கணக்கீட்டு முறை, பணிகள் பதிவேடு ஆகியன இத் திட்டங்களுக்கு விரைவில் உருவாக்கப்படும்.  

அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வசதிகளை நவம்பர் 30-ம் தேதிக்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் உள்ளன. விதிவிலக்காக மிகச் சில பள்ளிகள் மட்டுமே இருக்க முடியும். இதற்குக் காரணம், தமிழக அரசு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியை முழுமையாகப் பெற்றுள்ளது என்பது ஒருபுறம் இருக்க, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டன. 

ஆனால், இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார் உள்ளது.  இந்திய ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையை நோக்கி நகரத் தொடங்கி இருப்பதன் அறிகுறிதான், மத்திய அமைச்சரே தனது துறையின் கீழுள்ள ஒரு திட்டத்தைத் தணிக்கை செய்யப் பரிந்துரைத்திருப்பது. 

திட்டம் எதுவாக இருந்தாலும், சட்டம் எப்படி இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் நிர்வாகத்தின் திறமை வெளிப்படுகிறது

No comments:

Post a Comment