Wednesday, September 16, 2009

வீணாகும் மக்கள் வரிப்பணம்

பருவமழை தவறியதால் நாட்டில் நிலவும் வறட்சியை எதிர்கொள்ள மத்திய அரசு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி இருக்கிறார். மத்திய அமைச்சர்கள் தங்களது பங்களிப்பாக ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டு, தங்களது துறையைச் சார்ந்த அலுவலர்களும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சிக்கன நடவடிக்கைகளுக்கு முன்மாதிரியாக நிதியமைச்சர் இனி தனது விமானப் பயணங்களில் முதல் வகுப்பில் பயணிப்பதைத் தவிர்த்து சாதாரண வகுப்பில் மட்டுமே பயணிக்கப் போவதாக அறிவித்தார். சொன்னதுடன் இல்லாமல் செயலிலும் இறங்கி கோல்கத்தாவுக்கும், நேற்று சென்னைக்கும்கூட சாதாரண வகுப்பில் பயணித்து அரசுக்கு ஒரு சில ஆயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்தி இருக்கிறார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் தனது பங்குக்கு சாதாரண வகுப்பில் பயணித்தார் என்பதுடன், அவரைப் பின்பற்றி ஏனைய மத்திய அமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர்களும் சாதாரண வகுப்பில் பயணிக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

சாதாரண வகுப்பில் பயணிப்பதால் அரசுக்கு அப்படி என்னதான் மிச்சம் ஏற்பட்டுவிடும் என்று கேட்டுவிடக் கூடாது. நமது மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு அரசு செலவழிக்கும் தொகையில் 75 சதவீதம் அவர்களது சுற்றுப்பயணச் செலவுக்காகத்தான் என்பது தெரியுமா?

விமானக் கட்டணம், அன்னியச் செலாவணி, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் கட்டணம், வெளிநாடு செல்லும்போது இவர்கள் அழைத்துச் செல்லும் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கான செலவு என்று ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வரிப்பணம் நமது அமைச்சர்களின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணத்துக்காகச் செலவாகிறது (வீணாகிறது!) என்பதுதான் உண்மை.



2007 - 2008-க்கான புள்ளிவிவரப்படி, மத்திய அமைச்சரவையிலுள்ள அமைச்சர்களுக்கான மொத்தச் செலவு ரூ. 182 கோடி. இதில் இவர்களது உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஆன செலவு எவ்வளவு தெரியுமா? ரூ. 138 கோடி. மொத்த அமைச்சரவையின் சம்பளம் மற்றும் படிகள் வெறும் ரூ. 1.75 கோடிதான். இவர்களது வீட்டுவசதி, மின்சாரம் மற்றும் தொலைபேசிச் செலவு, அலுவலகத் தனி உதவியாளர்கள், வீட்டுத் தோட்டப் பராமரிப்பு, வாகனச் செலவுகள் என்பன மீதியுள்ள செலவுகள்.

நமது மத்திய அமைச்சர் பெருமக்கள் தங்களது சுற்றுப்பயணச் செலவுகளில், சாதாரண வகுப்பில் பயணம் செய்வதன் மூலமும், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர்த்து, அரசின் அல்லது அரசு நிறுவனங்களின் விருந்தினர் மாளிகைகள் மற்றும் ஆளுநர் மாளிகைகளில் தங்குவதன் மூலம் 10 சதவீதம் மிச்சம் பிடித்தால், ஆண்டொன்றுக்கு ரூ. 18 கோடி மிச்சமாகுமே என்பது நிதியமைச்சரின் எதிர்பார்ப்பு.

ஆண்டொன்றுக்கு இந்திய அரசின் மொத்தச் செலவு, 2009-10-க்கான நிதிநிலை அறிக்கையின்படி ரூ. 10,20,838 கோடி. இதில் ரூ. 18 கோடி எத்தனை சதவீதம் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அமைச்சர்களின் செலவுகளால் ஆகும் வரிப்பண இழப்பைவிட, நமது உயர் அதிகாரிகளின் பயணச் செலவுகளால் ஆகும் இழப்புகள் பல நூறு மடங்கு அதிகம் என்பது நமது நிதியமைச்சருக்குத் தெரியாதா என்ன?

மைத்துனிக்குக் குழந்தை பிறந்தால், தில்லியிலிருந்து பெங்களூருக்கும், மைத்துனனுக்கு நிச்சயதார்த்தம் என்றால் தில்லியிலிருந்து புவனேஸ்வரத்துக்கும் ஏதாவது அலுவலக வேலையை உருவாக்கிக் கொண்டு அரசு செலவில் பறப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் உயர் அரசு அதிகாரிகளுக்கு யார் கடிவாளம் போடுவது?

தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் சுற்றுப்பயணம் செய்வதை நமது உயர் அதிகாரிகள் தவிர்த்தாலே ஆண்டொன்றுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் மிச்சமாகுமே! அரசின் பணிகள் திட்டமிட்டபடி முடியாமல் ஏற்படும் காலதாமதத்தால் ஆண்டுதோறும் வீணாகும் வரிப்பணம் ரூ. 1,000 கோடியைத் தாண்டுமே, அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லையே, ஏன்?

இந்தியாவில் ஓடும் மோட்டார் வாகனங்களில் 60 சதவீதம் அரசு வாகனங்கள்தான். இவை முறையாகப் பராமரிக்கப்படாததால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க, முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதால் ஏற்படும் நஷ்டம் எத்தனை ஆயிரம் கோடி? அதனால் வீணாக்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் மிச்சம் பிடிக்கப்பட்டாலே கணிசமான அன்னியச் செலாவணி மிச்சமாகுமே, அது ஏன் கவனிக்கப்படுவதில்லை?

பொருளாதாரத் தேக்கத்தால் அடுத்த நிதியாண்டில் அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் குறையும் வாய்ப்பு நிறையவே உண்டு. வறட்சியின் காரணமாக, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற இனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும் என்பதுதான் உண்மை.

ஏற்கெனவே பற்றாக்குறை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து வரும் மத்திய அரசு, மேலும் தள்ளாடும் என்பது நிஜம்.

இந்த நிலையில், நிர்வாக இயந்திரத்தின் திறனை அதிகரிப்பதன் மூலமும், திட்டமல்லாச் செலவை, அதாவது வட்டித்தொகை, பயணச் செலவு, அரசு விழாக்கள், திடீர் இலவச அறிவிப்புகள் போன்றவற்றைக் குறைப்பதன் மூலமும் மட்டுமே நிதிநிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

அமைச்சர்கள் சாதாரண வகுப்பில் பறப்பது போன்ற கண்துடைப்பு வேலைகள் இருக்கட்டும். கட்டுக்கடங்காமல் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்யும் சர்வ வியாபியாகிய அதிகார வர்க்கத்துக்குக் கடிவாளம் போடுவது யார்?
எப்படி? எப்போது?

தேங்க்ஸ் டு dinamani

Friday, September 11, 2009

விரியும் விற்பனை வாய்ப்பு

தமிழகத்தில் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவை எப்போதையும்விட இப்போது மேலதிகமாக இருக்கிறது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயன உரத்துக்கு மாறி, இரு தலைமுறைகள் கடந்துவிட்ட நிலையில், பாரம்பரிய அறிவை மீட்டெடுக்கவும் அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும் வேண்டிய கடமை தமிழக அரசுக்கும் இருக்கிறது.

ரசாயன உரத்துக்காக மத்திய அரசு சில ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் ஆலைகளுக்கு நேரடியாகப் போய்ச் சேருகிறதே தவிர, விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை.

இயற்கை வேளாண்மையில் அவரவர் பகுதியில் கிடைக்கும் மக்கும் பொருள்கள், தழை உரங்கள், பச்சிலை பூச்சிவிரட்டிகள், மண்புழு உரம் என்று தங்கள் சுற்றுவட்டாரத்தில் கிடைப்பதையே பயன்படுத்துகிறார்கள். சுற்றுச்சூழல் கெடுவதில்லை. உரத்தை இவர்கள் பயன்படுத்துவதே இல்லை என்பதால், இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மத்திய அரசிடமிருந்து மானியம் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளலாம்


.வேளாண்மை மன்றத்தில் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே விவசாயம் தொடர்பான ஆலோசனைகளைத் தரலாம்; மீறினால் தண்டனை என்று சட்டம் சொல்லுமேயானால், அந்தச் சட்டம் ஏதோ ஓர் அறிவை வளரக் கூடாது என்று தடுக்கிறது என்றுதான் பொருள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சக மாணவர்களுடன்கூட தாய்மொழியில் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும்; மீறினால் அபராதம் என்று சொல்வது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமோ அதேபோன்றதுதான் இச்சட்டமும். நல்லவேளையாக, தமிழக அரசு இதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது

.உலகம் முழுவதும் ஆரோக்கிய உணவு முறைக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரோக்கிய உணவு என்பது ரசாயன நஞ்சு கலவாத உணவு. "ஆர்கானிக் புராடக்ட்' "ஆர்கானிக் புட்' ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் 3 லட்சம் கோடி யூரோஸ் அளவுக்கு விற்பனையாகிறது. ஆண்டுதோறும் இந்த நுகர்வோர் சந்தை 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2010 ஜூலை 1-ம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும், இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள் அல்லது உணவு என்பதைக் குறிக்கும் இலச்சினை (லோகோ) அதன் மீது ஒட்டப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்துள்ளனர். இதற்கான இலச்சினை போட்டி (முதல் பரிசு ரூ. 6000 யூரோஸ்) அறிவித்துள்ளார்கள்.

இவ்வாறாக விரியும் விற்பனை வாய்ப்பு கைநழுவக் கூடாது என விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மிகக் குறைந்த செலவில் இயற்கை வேளாண்மையில் பொருள்களை விளைவித்து உலகச் சந்தையில் விற்று அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கின்றன.

இதைச் செய்து முடிக்கவும், இயற்கை வேளாண்மையைக் கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கவும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.ஒருவேளை, தமிழக அரசின் இந்தச் சட்டமே, அதாவது மன்றத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே என்ற நிபந்தனை, இந்த கண்காணி வேலையில் தற்போது இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் முக்கிய நபர்கள் நுழைந்துவிடாமல் ஒரு சிலர் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்வதற்குத்தானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.இந்நிலையில், தமிழக அரசு நமது விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை அறிவைக் கொண்டு சேர்த்து, மிகச் சிறிய அளவிலாகிலும் இயற்கை வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை அரசே உருவாக்கித் தந்தால் என்ன!



இயற்கை வேளாண்மை உணவுப் பொருள் ஏற்றுமதிக்கான ஆலோசனைகள், சந்தை வாய்ப்பு அறிமுகப்படுத்துதல் போன்ற உதவிகளை வழங்க அரசால் முடியும்.உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தை அமைத்த தமிழக அரசு, "உழவர் ஏற்றுமதி சந்தை'யையும் அமைத்தால் என்ன?

விவசாயிகளும்தான் கொஞ்சம் பணத்தைக் கண்ணால் பார்க்கட்டுமே!

தேங்க்ஸ் டு தினமணி

Thursday, September 10, 2009

எமர்ஜென்ஸி கான்ட்ராசெப்ஷன் (ஈ.ஸி.) மாத்திரைகள்

ஒரு தெலுங்குப் பத்திரிகையில் சில நாள்களுக்கு முன்பு வெளியான ஒரு சிறிய தகவலைச் சொல்லிவிட்டு, விவரத்தைச் சொன்னால்தான், இங்கு சொல்லப்போகும் விஷயத்தின் தீவிரம் புரியும்: "ஹைதராபாதில் எமர்ஜென்ஸி கான்ட்ராசெப்ஷன் (ஈ.ஸி.) மாத்திரைகள் விற்பனை ஒரு மாதத்திற்கு 40,000-க்கும் அதிகம். தில்லி, சென்னை, மும்பை பெருநகர்களில் இது மேலும் அதிக அளவில் இருக்கும்'.அதற்கென்ன? விற்கட்டுமே என்று நினைக்கத் தோன்றும்.

இந்த மாத்திரை பெண்களின் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பின்விளைவுகளைத் தரக்கூடியவை என்பதும், இதை எப்போதோ ஒருமுறை பயன்படுத்தினால் பரவாயில்லை என்பதற்குப் பதிலாக, எப்போதுமே பயன்படுத்தும் நிலைமை உருவாகி வருகிறது என்பதும்தான் நமது கவலைக்குக் காரணம்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், பாதுகாப்பற்ற கலவி நேர்ந்துவிட்டால், கலவிக்குப் பின்னர் 72 மணி நேரத்துக்குள் ஈ.ஸி. மாத்திரையைச் சாப்பிட்டு, கருவுறுதலைத் தடுத்துவிடலாம் என்ற நோக்கத்தில்தான் இந்த மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நடைமுறையில் இதன் பயன்பாடு பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை.

இந்த மாத்திரையை மூன்று நிறுவனங்கள் மூன்று பெயர்களில் வெளியிடுகின்றன. ஒரு மாத்திரை விலை ரூ. 60 முதல் ரூ. 100 வரை. இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த மாத்திரையை அறிமுகம் செய்தபோது நிர்ணயித்த விலை இதைவிடக் குறைவுதான். விற்பனை கூடக்கூட விலையையும் கூட்டுகிறார்கள்

.தற்போது நடைமுறையில் உள்ள பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள், தொடர்ச்சியாக நாள்தோறும் சாப்பிட வேண்டியதாக இருப்பதால், ஒரே ஒருமுறை மட்டுமே, அதுவும் கலவிக்குப் பின்பு, சாப்பிட்டால் போதும் என்கிற ஈ.ஸி. மாத்திரைக்கு பெண்கள் எளிதில் மாறிவிடுகிறார்கள்.இம் மாத்திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்த நேரிடும் பெண்ணுக்கு முதல் தொந்தரவு ஹார்மோன் சுரப்புகளில் பாதிப்பு. அதைத் தொடர்ந்து மாதவிலக்கு கோளாறுகளுக்கும் அது சார்ந்த உடல் வேதனைகளுக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

இந்த மாத்திரை மூலம் கருக்கலைப்பு சாத்தியமில்லை என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூறினாலும், இந்த மாத்திரையின் செயல்பாடு என்னவோ "மைக்ரோ-அபார்ஷன்' என்பதாகத்தான் இருக்கிறது.ஆணாதிக்க உலகம் தங்களுக்கான கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல், பெண்களை ஈ.ஸி. மாத்திரைகளைப் பயன்படுத்தும் கட்டாயத்தில் தள்ளும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கல்வி பயிலும் வளர்இளம் பெண்களுக்கு இந்த மாத்திரை கிடைப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதால், ஆபத்தின் வீச்சு கற்பனைக்கும் எட்டாதது.

இந்திய வாழ்வியல் சூழலில் மிகச்சிறந்த கருத்தடைச் சாதனம் ஆணுறை மட்டுமே. இதனால் கருவுறுதல் தடுக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, பால்வினை நோய்கள், எய்ட்ஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. தற்போது ஈ.ஸி. மாத்திரைகளின் பயன்பாடு அதிகரிக்குமானால், இத்தகைய பாதுகாப்பு இல்லாமல், நோய்க்குள்ளாவது பெண் சமூகம்தான்.


இந்த மாத்திரைக்கான விளம்பரங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் அதிகமாக இடம்பெறத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பட்டிதொட்டியில் உள்ள கிராமப்பெண்களும்கூட புரிந்துகொள்ளும் அளவுக்குத் தெளிவான தகவலை தருகின்றன இந்த விளம்பரங்கள். ""இந்த மாத்திரைகளை ""வழக்கமான கருத்தடைச் சாதனங்களுக்கு ஒரு மாற்று'' என்பதைப்போல விளம்பரக் காட்சி அமைப்பது கூடாது என்று தில்லியில் நடைபெற்ற ஈ.ஸி. மாத்திரைகளின் பயன்பாடு குறித்த மாநாட்டில் மருத்துவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதை யார் தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?


ஒரு பெண்ணுக்குக் கல்வியைக் கொடுத்தால் ஒரு குடும்பத்துக்கே கல்வி கொடுத்ததைப்போல என்று பேசுகிறோம். உடல் நலனைக் கெடுக்கும் மாத்திரைகளை எளிதாகக் கிடைக்கச்செய்து, கல்வியுடன் கலவியையும் பயிலட்டும் என்று அரசே வழிவகுத்தால் அதைவிட வெட்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது.

சந்தைப் பொருளாதாரத்தை அனுமதிக்கிறோம் என்கிற பெயரில் மக்கள் ஏமாற்றப்படுவதும், தவறான பாதைக்குத் திசைதிருப்பப்படுவதும் நல்லாட்சிக்கு அடையாளமல்ல!

கட்டுப்பாடற்ற சமுதாயம் வளர்ச்சியின் அடையாளமல்ல. காட்டுமிராண்டித்தனத்தின் நுழைவாயில்!

தேங்க்ஸ் டு dinamani

Tuesday, September 8, 2009

சிறப்புப் பொருளாதார மண்டல கொள்ளை

கூட்டணி ஆட்சியால் ஏற்படுகிற ஒரு முக்கியமான நன்மை, ஆளும் கட்சி தன்னிச்சையாக விவாதமோ, எதிர்ப்போ இல்லாமல் எல்லா முடிவுகளையும் எடுத்துவிட முடியாது என்பது. அதற்கு ஒரு சமீபத்திய உதாரணம், மத்திய அமைச்சரவை நிலம் கையகப்படுத்தும் மசோதாவை நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி இருப்பது. இதற்குக் காரணம் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவியும், மத்திய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜியின் எதிர்ப்பும் பிடிவாதமும்.

மம்தா பானர்ஜியின் எதிர்ப்புக்குக் காரணம் அரசியல்தான் என்றும், தீர்க்கதரிசனமான கண்ணோட்டம் அல்ல என்றும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சித்தாலும், அவரது வாதங்களில் இருக்கும் உண்மையும், நிலம் கையகப்படுத்தப்படும்போது விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும், விவசாயமும் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படுகின்றன என்பதும் மறுக்க இயலாத உண்மை.

வியாபார நோக்கிலும், தொழிற்சாலை அமைப்பதற்காகவும் விளைநிலங்களைக் கையகப்படுத்தும் செயலுக்கு அரசு துணை போகக்கூடாது என்கிற மம்தா பானர்ஜியின் கருத்தில் நியாயம் நிறையவே இருக்கிறது. சிங்கூரில் நடந்த போராட்டத்தால் டாடாவுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைவிட மேற்கு வங்கத்துக்குத்தான் அதிக நஷ்டம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்குபவர்கள், சிங்கூரில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் தனிமனிதர்களைப் பற்றிக் கவலைப்படத் தயாராக இல்லை.


அதேபோல, மகாராஷ்டிர மாநிலம் ராய்கட்டில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகப் பல நூறு ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்படுவது விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், 70 சதவீத நிலத்தைத் தனியார் விலைக்கு வாங்கி இருந்தால், மீதமுள்ள 30 சதவீத நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொடுக்க வழிசெய்யும் மசோதா ஒன்று மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு வந்தது. மேலே குறிப்பிட்ட 70 : 30 என்கிற விகிதாசாரம், தொழிலதிபர்களும், அரசு அதிகாரிகளும் கலந்துபேசி எடுத்த முடிவே தவிர, விவசாயிகளின் ஒப்புதலுடன் செய்யப்பட்டதல்ல என்பது மம்தாவின் வாதம்.

மேலும், ஒரு போகம் மட்டுமே விளையும் வானம் பார்த்த பூமியும், விவசாயத்துக்குப் பயன்படாத தரிசு நிலங்களும் மட்டுமே அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்குக் கையகப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மம்தாவின் கருத்து. எதற்காகக் கையகப்படுத்தப்படுகிறதோ, அந்தக் காரணத்துக்காக அல்லாமல் நிலம் வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்தப்படக் கூடாது என்றும், அப்படிப் பயன்படுத்தப்பட்டால், நில உரிமையாளருக்கு அந்த நிலம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும்கூட மம்தா பானர்ஜியின் கோரிக்கை.


சிறப்புப் பொருளாதார மண்டலம், தொழிற்சாலை என்கிற பெயரில் அதிக அளவு நிலம் கையகப்படுத்தப்பட்டு, பிறகு அதில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொள்ளை லாபம் சம்பாதிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. அரசின் வளர்ச்சித் திட்டங்களான சாலை அமைப்பது, புதிய குடியிருப்புப் பகுதிகளை ஏற்படுத்துவது, கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவை நிறுவுவது ஆகியவற்றுக்காக விவசாய நிலங்கள் தகுந்த நஷ்டஈடு தரப்பட்டுக் கையகப்படுத்தப்படுவதை யாருமே எதிர்க்கவில்லை.

ஆனால், விவசாயிகளிடமிருந்து அரசின் உதவியுடன் குறைந்த விலைக்கு நல்ல விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வணிக வளாகங்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கட்டி ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? விவசாயி தானாக நிலத்தை விற்கவில்லை. அரசின் உதவியுடன் வலுக்கட்டாயமாக நிலம் குறைந்த விலைக்குக் கையகப்படுத்தப்படுகிறது.

அப்படியானால், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த விவசாயிக்குக் கிடைக்க இருக்கும் அதிகரித்த விலை தரப்பட வேண்டியது நியாயம்தானே? விவசாயி தலைமுறை தலைமுறையாக அனுபவித்து வந்த தனது வாழ்வாதாரத்தை இழக்கிறார். அவருக்கு மாற்று வேலையும், மாற்று இருப்பிடமும், லாபத்தில் பங்கும் தரப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளில் என்ன தவறு? விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாகவும் வணிக வளாகங்களாகவும் மாறுவதில் இன்னோர் ஆபத்தும் இருக்கிறது. அந்த இடங்கள் மறுபடியும் விவசாயத்துக்குப் பயன்படாத நிலங்களாகி விடுகின்றன

. போதிய நீர்ப்பாசன வசதிகள் இல்லை என்கிற காரணம் காட்டி, விவசாயம் லாபகரமாக இல்லை என்கிற சாக்கில் நிலங்களைக் குறைந்த விலைக்குத் தனியாருக்காக அரசே முன்னின்று கையகப்படுத்தும்போது ஒரு விஷயம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. ஏற்கெனவே விவசாயம் லாபகரமாக இல்லை என்பதாலும், கடின உழைப்புக்கு நாம் தயாராக இல்லாததாலும் கிராமப்புறங்களில் விவசாயம் புறக்கணிக்கப்படுகிறது.


இதனால், உணவு உற்பத்தி கணிசமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், வரைமுறையே இல்லாமல் நிலங்களைக் கையகப்படுத்தித் தனியாருக்குத் தாரை வார்ப்பது தற்கொலை முயற்சி அல்லாமல் என்ன?

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. உலகில் உள்ள அத்தனை தட்பவெப்ப நிலைகளையும் உள்ளடக்கிய ஒரே நாடு இந்தியா மட்டுமே.

இங்கே விளையாத பொருள்களே கிடையாது. விவசாயத்தை லாபகரமாக்கவும், விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் வழி காண்பதை விட்டுவிட்டு, உணவுப் பொருள்களை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று கருதினால், விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்று பொருள். அது பாதுகாப்பு அச்சுறுத்தலாகிவிடும்...

தேங்க்ஸ் டு dinamani

Monday, September 7, 2009

3,300 கிராமங்களில்கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

பருவமழை பொய்ப்பதால் முதலில் பாதிக்கப்படுவது விவசாயம். அடுத்து உடனடியாக எதிர்கொள்ள வேண்டியபிரச்னை குடிநீர். கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டைநோக்கி தமிழகம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள 92,000 கிராமங்களில் 3,300 கிராமங்களில்கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதே நிலைமை 160 பேரூராட்சிகளிலும் 52 நகராட்சிகளிலும் உள்ளது.தமிழகத்தின் பல இடங்களில் கிராமப்புற மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபடுவதும், அதிகாரிகளை முற்றுகையிடுவதும் அதிக எண்ணிக்கையில் நடக்கத் தொடங்கிவிட்டன.நாளுக்கு நாள் இதன்பிடி கிராமப்புற மக்கள் வாழ்க்கையை முடக்கிப்போடுவதாக மாறிக்கொண்டிருக்கிறது

.நகராட்சி, மாநகராட்சிகளில் இத்தகைய குடிநீர்ப் போராட்டம் நடந்தால், இந்தப் போராட்டத்துக்கு அரசியல் மற்றும் அதிகார ஆதரவு கிடைக்கும். ஏனென்றால், இதைக் காரணம் காட்டி இரண்டு லாரிகளில் தண்ணீர் விநியோகம் என்று சொல்லி, ஒரு லாரியைஓட்டல்களுக்குத் திருப்பிவிட்டு நாள்தோறும் கணிசமான தொகையைப் பார்க்க முடியும். ஆனால் கிராம மக்களுக்காக குடிநீர் விநியோகம் என்பதை பேரூராட்சிகளால் செய்ய முடியாதே!


மேலும், கிராம மக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை. அந்தந்த ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள குடிநீர்க் கிணற்றிலிருந்து தண்ணீரை மேனிலைத்தொட்டிக்கு ஏற்றி, விநியோகம் செய்யப்படுகிறதே தவிர, இவைபல இடங்களில் சுத்திகரிக்கப்படுவதுகூட இல்லை. ஆனால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துகொண்டே போகிறது. கிணறுகள் வற்றிவிட்டன


.தமிழக அரசின் கொள்கைப்படி, ஒரு தனிமனிதனுக்கு நாளொன்றுக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு கிராமத்தில் 40 லிட்டர், பேரூராட்சியில் 70 லிட்டர், நகராட்சியில் 90 லிட்டர், மாநகராட்சியில் 135 லிட்டர். இத்தகைய மாறுபட்ட அளவீட்டு முறையே அநியாயமானது. ஒவ்வொரு மனிதனுக்கும் குடிநீர்த் தேவை என்னவோ ஒரே அளவுதான். நகர மக்கள் குளிக்க, துணி துவைக்க, தோட்டத்துக்கு நீர் பாய்ச்ச, கழிவறைக்குப் பயன்படுத்த என்று எல்லா பயன்பாட்டுக்கும் சேர்த்துத்தான் மாநகராட்சி மக்களுக்கு அதிகமான அளவும், கிராமத்து மனிதனுக்குக் குறைந்த அளவும் நிர்ணயிக்கிறார்கள். ஆனால் கிராமத்து மனிதனுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்சத் தேவைகூடப் பூர்த்தியாகவில்லை.

நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ளாட்சி வழங்கும் குடிநீரை 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் குடிப்பதற்குப் பயன்படுத்துவதே இல்லை. இவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்க் கேன்களை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறார்கள். உள்ளாட்சி விநியோகம்செய்யும் பெருமளவு குடிநீர், குளியல் மற்றும் நவீன கழிவறைக்கே செலவிடப்படுகிறது என்பது மற்றொரு கசப்பான உண்மை.


அண்மையில் கோவையில் ஒரு தனியார் கல்லூரி நடத்திய ஆய்வு, நீர்க் கசிவுகளும் குடிநீர் விநியோகத்தில் நடைபெறும் நீர்த் திருட்டும் மிக அதிகமாக இருப்பதால்தான் மக்களுக்குத் திட்டமிட்ட அளவில் குடிநீர் கிடைக்கவில்லை என்கிறது. நீர்த் திருட்டுஇழப்பும்கூட, இத்திட்டத்தில் பயன்பெறும் வழியோர கிராமங்களின் தலையில் விழுகிறது.கல்வியைத் தத்தெடுத்து வளர்க்கும் அரசியல்வாதிகள், குடிநீர் கேன் விநியோகத்தையும், அதற்கான ஆலைகளையும் தத்தெடுத்து சேவை செய்கிறார்கள். இவர்கள் உள்ளாட்சி விநியோகிக்கும் நீரை அப்படியே கேன்களில் பிடித்து, "பியூர் வாட்டர்' என்ற பெயரில்அடைத்து விற்கிறார்கள். "பியூரிபைடு ட்ரிங்கிங் வாட்டர்' என்று லேபிள் ஒட்டினால் சட்டப்படி குற்றம். ஆனால் "பியூர் வாட்டர்' என்பது திருட்டுக் குடிநீராக இருந்தாலும் தண்டனை இல்லை.


இதில் வேடிக்கையானதும் வேதனையானதும் என்னவென்றால், ஏரிகளையும் குளங்களையும் அழித்த நகர, மாநகரங்கள், தங்களுக்குத் தேவையான குடிநீரை, உலகத்தில் மழையே பெய்யாவிட்டாலும்கூட தங்களுக்கு மட்டும் கிடைக்கும்படி செய்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், ஆட்சியாளர்களின் இருப்பிடமாக நகரம் இருக்கிறது. ஆனால் கிராம மக்கள் அப்படியல்ல. அவர்களது ஏரி மற்றும் நிலத்தடி நீரை அண்டை நகரங்கள் உறிஞ்சுவதால்தான் அவர்கள் கிணறு வற்றிப்போகிறது. அதனால்தான் அவர்கள் தாகத்துக்குத்தண்ணீர் இன்றித் தவிக்கிறார்கள்.

தமிழக அரசு குடிநீர்ப் பிரச்னைக்காக மொத்தம் ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ. 21 கோடி வழங்கியுள்ளது. குறைந்த பட்சம், குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் நடவடிக்கைகளில்மட்டுமாவது நேர்மையாகவும் முறைகேடுகளால் நிதி ஒதுக்கீடு காணாமல் போகாதபடியும் அரசு பார்த்துக் கொள்ள வேண்டும்.நகர மக்கள் மீது மட்டுமே அக்கறை கொள்வதைச் சற்றே குறைத்துக்கொண்டு, கிராமங்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும்.

ஒரு லிட்டர் குடிநீரை ஒரு ரூபாய்க்கு வாங்கும் சக்தி நகர மக்களிடம் இருக்கலாம். கிராம மக்களிடம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்குகிற அளவுக்குத்தானே கிராமப்புறப் பொருளாதாரம்இருக்கிறது!

தேங்க்ஸ் டு dinamani