ஒரு தெலுங்குப் பத்திரிகையில் சில நாள்களுக்கு முன்பு வெளியான ஒரு சிறிய தகவலைச் சொல்லிவிட்டு, விவரத்தைச் சொன்னால்தான், இங்கு சொல்லப்போகும் விஷயத்தின் தீவிரம் புரியும்: "ஹைதராபாதில் எமர்ஜென்ஸி கான்ட்ராசெப்ஷன் (ஈ.ஸி.) மாத்திரைகள் விற்பனை ஒரு மாதத்திற்கு 40,000-க்கும் அதிகம். தில்லி, சென்னை, மும்பை பெருநகர்களில் இது மேலும் அதிக அளவில் இருக்கும்'.அதற்கென்ன? விற்கட்டுமே என்று நினைக்கத் தோன்றும்.
இந்த மாத்திரை பெண்களின் உடலுக்குக் கேடு விளைவிக்கும் பின்விளைவுகளைத் தரக்கூடியவை என்பதும், இதை எப்போதோ ஒருமுறை பயன்படுத்தினால் பரவாயில்லை என்பதற்குப் பதிலாக, எப்போதுமே பயன்படுத்தும் நிலைமை உருவாகி வருகிறது என்பதும்தான் நமது கவலைக்குக் காரணம்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், பாதுகாப்பற்ற கலவி நேர்ந்துவிட்டால், கலவிக்குப் பின்னர் 72 மணி நேரத்துக்குள் ஈ.ஸி. மாத்திரையைச் சாப்பிட்டு, கருவுறுதலைத் தடுத்துவிடலாம் என்ற நோக்கத்தில்தான் இந்த மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் நடைமுறையில் இதன் பயன்பாடு பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை.
இந்த மாத்திரையை மூன்று நிறுவனங்கள் மூன்று பெயர்களில் வெளியிடுகின்றன. ஒரு மாத்திரை விலை ரூ. 60 முதல் ரூ. 100 வரை. இதை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த மாத்திரையை அறிமுகம் செய்தபோது நிர்ணயித்த விலை இதைவிடக் குறைவுதான். விற்பனை கூடக்கூட விலையையும் கூட்டுகிறார்கள்
.தற்போது நடைமுறையில் உள்ள பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள், தொடர்ச்சியாக நாள்தோறும் சாப்பிட வேண்டியதாக இருப்பதால், ஒரே ஒருமுறை மட்டுமே, அதுவும் கலவிக்குப் பின்பு, சாப்பிட்டால் போதும் என்கிற ஈ.ஸி. மாத்திரைக்கு பெண்கள் எளிதில் மாறிவிடுகிறார்கள்.இம் மாத்திரைகளைத் தொடர்ந்து பயன்படுத்த நேரிடும் பெண்ணுக்கு முதல் தொந்தரவு ஹார்மோன் சுரப்புகளில் பாதிப்பு. அதைத் தொடர்ந்து மாதவிலக்கு கோளாறுகளுக்கும் அது சார்ந்த உடல் வேதனைகளுக்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
இந்த மாத்திரை மூலம் கருக்கலைப்பு சாத்தியமில்லை என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூறினாலும், இந்த மாத்திரையின் செயல்பாடு என்னவோ "மைக்ரோ-அபார்ஷன்' என்பதாகத்தான் இருக்கிறது.ஆணாதிக்க உலகம் தங்களுக்கான கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்தாமல், பெண்களை ஈ.ஸி. மாத்திரைகளைப் பயன்படுத்தும் கட்டாயத்தில் தள்ளும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கல்வி பயிலும் வளர்இளம் பெண்களுக்கு இந்த மாத்திரை கிடைப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதால், ஆபத்தின் வீச்சு கற்பனைக்கும் எட்டாதது.
இந்திய வாழ்வியல் சூழலில் மிகச்சிறந்த கருத்தடைச் சாதனம் ஆணுறை மட்டுமே. இதனால் கருவுறுதல் தடுக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல, பால்வினை நோய்கள், எய்ட்ஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. தற்போது ஈ.ஸி. மாத்திரைகளின் பயன்பாடு அதிகரிக்குமானால், இத்தகைய பாதுகாப்பு இல்லாமல், நோய்க்குள்ளாவது பெண் சமூகம்தான்.
இந்த மாத்திரைக்கான விளம்பரங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் அதிகமாக இடம்பெறத் தொடங்கிவிட்டன. இந்தியாவின் பட்டிதொட்டியில் உள்ள கிராமப்பெண்களும்கூட புரிந்துகொள்ளும் அளவுக்குத் தெளிவான தகவலை தருகின்றன இந்த விளம்பரங்கள். ""இந்த மாத்திரைகளை ""வழக்கமான கருத்தடைச் சாதனங்களுக்கு ஒரு மாற்று'' என்பதைப்போல விளம்பரக் காட்சி அமைப்பது கூடாது என்று தில்லியில் நடைபெற்ற ஈ.ஸி. மாத்திரைகளின் பயன்பாடு குறித்த மாநாட்டில் மருத்துவர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதை யார் தடுத்து நிறுத்தப் போகிறார்கள்?
ஒரு பெண்ணுக்குக் கல்வியைக் கொடுத்தால் ஒரு குடும்பத்துக்கே கல்வி கொடுத்ததைப்போல என்று பேசுகிறோம். உடல் நலனைக் கெடுக்கும் மாத்திரைகளை எளிதாகக் கிடைக்கச்செய்து, கல்வியுடன் கலவியையும் பயிலட்டும் என்று அரசே வழிவகுத்தால் அதைவிட வெட்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது.
சந்தைப் பொருளாதாரத்தை அனுமதிக்கிறோம் என்கிற பெயரில் மக்கள் ஏமாற்றப்படுவதும், தவறான பாதைக்குத் திசைதிருப்பப்படுவதும் நல்லாட்சிக்கு அடையாளமல்ல!
கட்டுப்பாடற்ற சமுதாயம் வளர்ச்சியின் அடையாளமல்ல. காட்டுமிராண்டித்தனத்தின் நுழைவாயில்!
தேங்க்ஸ் டு dinamani