Friday, September 11, 2009

விரியும் விற்பனை வாய்ப்பு

தமிழகத்தில் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டிய தேவை எப்போதையும்விட இப்போது மேலதிகமாக இருக்கிறது. பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயன உரத்துக்கு மாறி, இரு தலைமுறைகள் கடந்துவிட்ட நிலையில், பாரம்பரிய அறிவை மீட்டெடுக்கவும் அதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கவும் வேண்டிய கடமை தமிழக அரசுக்கும் இருக்கிறது.

ரசாயன உரத்துக்காக மத்திய அரசு சில ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. இந்த மானியம் ஆலைகளுக்கு நேரடியாகப் போய்ச் சேருகிறதே தவிர, விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை.

இயற்கை வேளாண்மையில் அவரவர் பகுதியில் கிடைக்கும் மக்கும் பொருள்கள், தழை உரங்கள், பச்சிலை பூச்சிவிரட்டிகள், மண்புழு உரம் என்று தங்கள் சுற்றுவட்டாரத்தில் கிடைப்பதையே பயன்படுத்துகிறார்கள். சுற்றுச்சூழல் கெடுவதில்லை. உரத்தை இவர்கள் பயன்படுத்துவதே இல்லை என்பதால், இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மத்திய அரசிடமிருந்து மானியம் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளலாம்


.வேளாண்மை மன்றத்தில் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே விவசாயம் தொடர்பான ஆலோசனைகளைத் தரலாம்; மீறினால் தண்டனை என்று சட்டம் சொல்லுமேயானால், அந்தச் சட்டம் ஏதோ ஓர் அறிவை வளரக் கூடாது என்று தடுக்கிறது என்றுதான் பொருள். மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் சக மாணவர்களுடன்கூட தாய்மொழியில் பேசக்கூடாது, ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும்; மீறினால் அபராதம் என்று சொல்வது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமோ அதேபோன்றதுதான் இச்சட்டமும். நல்லவேளையாக, தமிழக அரசு இதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது

.உலகம் முழுவதும் ஆரோக்கிய உணவு முறைக்கு மாறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரோக்கிய உணவு என்பது ரசாயன நஞ்சு கலவாத உணவு. "ஆர்கானிக் புராடக்ட்' "ஆர்கானிக் புட்' ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் மட்டும் 3 லட்சம் கோடி யூரோஸ் அளவுக்கு விற்பனையாகிறது. ஆண்டுதோறும் இந்த நுகர்வோர் சந்தை 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. 2010 ஜூலை 1-ம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதிலும், இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருள் அல்லது உணவு என்பதைக் குறிக்கும் இலச்சினை (லோகோ) அதன் மீது ஒட்டப்பட வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்துள்ளனர். இதற்கான இலச்சினை போட்டி (முதல் பரிசு ரூ. 6000 யூரோஸ்) அறிவித்துள்ளார்கள்.

இவ்வாறாக விரியும் விற்பனை வாய்ப்பு கைநழுவக் கூடாது என விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் மிகக் குறைந்த செலவில் இயற்கை வேளாண்மையில் பொருள்களை விளைவித்து உலகச் சந்தையில் விற்று அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கின்றன.

இதைச் செய்து முடிக்கவும், இயற்கை வேளாண்மையைக் கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கவும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.ஒருவேளை, தமிழக அரசின் இந்தச் சட்டமே, அதாவது மன்றத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே என்ற நிபந்தனை, இந்த கண்காணி வேலையில் தற்போது இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் முக்கிய நபர்கள் நுழைந்துவிடாமல் ஒரு சிலர் மட்டுமே ஆக்கிரமித்துக் கொள்வதற்குத்தானோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.இந்நிலையில், தமிழக அரசு நமது விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை அறிவைக் கொண்டு சேர்த்து, மிகச் சிறிய அளவிலாகிலும் இயற்கை வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்புகளை அரசே உருவாக்கித் தந்தால் என்ன!



இயற்கை வேளாண்மை உணவுப் பொருள் ஏற்றுமதிக்கான ஆலோசனைகள், சந்தை வாய்ப்பு அறிமுகப்படுத்துதல் போன்ற உதவிகளை வழங்க அரசால் முடியும்.உள்ளூர் விவசாயிகளுக்கு உழவர் சந்தை அமைத்த தமிழக அரசு, "உழவர் ஏற்றுமதி சந்தை'யையும் அமைத்தால் என்ன?

விவசாயிகளும்தான் கொஞ்சம் பணத்தைக் கண்ணால் பார்க்கட்டுமே!

தேங்க்ஸ் டு தினமணி