Tuesday, May 26, 2009

கர்ம யோகம்

பலனுக்காகத் தானே பாடுபடுகிறோம், ஒரு செயலைச் செய்ய முற்படுகிறோம். ஆனால் பலனையே எதிர்பாராது வேலை செய் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறாரே இது முரண்பாடாக இருக்கிறதே என்று பலரும் கர்மயோகத்தைக் குறை கூறுவது உண்டு. கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்று ரத்தினச் சுருக்கமாக கர்மயோகத்தைச் சொல்லும் போது இப்படித் தோன்றுவது தவறும் அல்ல. ஆனால் சற்று ஆழமாகப் பார்த்தால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மயோகம் முரண்பாடில்லாதது என்பதையும் அது ஒரு அருமையான செயல் மேம்பாட்டுத் தத்துவம் என்பதையும் நாம் உணர முடியும்.

செயலிலேயே விளைவும் இருக்கிறது, எனவே விளைவைப் பற்றிய கவலையோ, சந்தேகமோ தேவையில்லை என்பதையே பகவான் கூறுகிறார். ஒரு பென்சிலை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு நான் கீழே போடத் தயாராக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கைவிடுவதா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க மட்டுமே எனக்கு சுதந்திரம் உண்டு. கைவிட்டு விட்டால் அந்த செயலிலேயே அது கீழே விழும் என்ற இயற்கை விதியாகிய பலன் இருக்கிறது. அதை விட்ட பின் கீழே விழுமா என்ற சந்தேகமும்,
கீழே விழுந்து விட்டதே என்ற வருத்தமும் ஏற்பட்டால் அது முட்டாள்தனமே.

ஒரு ஊருக்குப் போகிற பாதையை வழிகாட்டிப் பலகை பார்த்து அந்தப் பாதையில் போகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நாம் நடக்க ஆரம்பித்தபின் ஊரின் தூரம் ஒவ்வொரு அடியாகக் குறைந்து கொண்டே வருகிறது இயற்கையே. நடக்கும் வேகத்திற்கேற்ப சீக்கிரமாகவோ, தாமதமாகவோ நாம் போய் சேர்வது உறுதி. ஊருக்குப் போய் சேர்வோமா என்ற சந்தேகமோ, பரபரப்போ தேவையில்லை.

எதை எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்து அதற்கேற்ற பலன் சரியான காலத்தில் தானாக வரும் என்பதால் பலனைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்கிறார் பரமாத்மா.

இதை சுவாமி சின்மயானந்தர் அழகாகச் சொல்வார். "In fact, the reward of an action, when we understand it properly, is not anything different from the action itself. An action in the PRESENT, when conditioned by a FUTURE time, appears as the fruit of action. In fact, the action ends or fulfils itself as reaction or fruit in future."

பலனில் பற்று வைப்பது என்பது தேவையில்லாத கனவுகளையும், கவலைகளையும், பயங்களையும், பரபரப்புகளையும் தூண்டி விடக் கூடியது. அது நிச்சயமாக நமது செயல் திறத்துக்கு குறுக்கீடுகளை ஏற்படுத்தும். சீரான மனநிலையில் சிந்தித்து தேவையானவற்றை சிறப்பாகச் செய்ய பற்று நம்மை அனுமதிப்பதில்லை. பல சமயங்களில் தலைக்கனம் ஏற்படுத்தி தொடர்ந்து செய்யும் காரியங்களில் அலட்சியத்தை ஏற்படுத்தி விடக் கூடியது. எனவே தான் பற்று இன்றி செயல்கள் புரிய கர்மயோகம் அறிவுறுத்துகிறது.

பலனில் பற்று என்பது வேறு வகைகளிலும் நம் செயல் திறனைக் குறைக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நல்ல செயல் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதனைப் பலரும் பாராட்டக் கூடும். நீங்கள் கைதட்டல் பெறக்கூடும். ஆனால் அடுத்து இதே போன்று இன்னொரு செயலை அருமையாகச் செய்யும் போது பாராட்டோ, கைதட்டல்களோ குறைந்து போனால் அது உங்களை வெகுவாக பாதிக்கும். அதன் விளைவு அடுத்த செயல்களிலும் தொடரும்; நமது செயல்திறன் குறையும்.

நம் திறமைக்கும் தனித்துவத்துக்கும் பாராட்டுகள் வாங்கியது போய் பாராட்டுக்கும் கைதட்டல்களுக்கும் வேண்டி நம் செயல்களையும் தனித்துவத்தையும் மாற்றிக் கொண்டு சோரம் போக வேண்டிய கட்டாயத்திற்கு நாம் ஆளாக நேரிடும். இதை இன்றைய காலகட்டத்தில் நாம் நிறையவே காண முடியும்.

உங்கள் திறமைகள் பலன் தராமல் இருக்கப் போவதில்லை. பூத்துக் குலுங்கும் மலர்கள் வண்டுக்கு சீட்டு எழுதி அனுப்பத் தேவையில்லை. ரமண மகரிஷி போன்ற ஞானிகள் சீடர்களையும் பக்தர்களையும் தேடிப் போனதில்லை. என்ன சொன்னால் பிரபலமாவோம் என்று கவலைப் பட்டதில்லை. ஏன் ஆரம்பத்தில் அதிகமாக ரமண மகரிஷி வாய் திறந்து கூடப் பேசியதில்லை. ஆனால் அவரிடம் இருந்த ஆன்மீக சக்தி காந்தமாக உலகை அவர் பக்கம் ஈர்த்தது.

கர்மயோகம் குறிக்கோளில்லாமல் இருக்கச் சொல்லவில்லை. அர்த்தமில்லாமல் செயல் புரியச் சொல்லவில்லை. செய்யும் செயலை விட்டேற்றியாகச் செய்யச் சொல்லவில்லை. சிறப்பாகச் செய்து முடித்த ஆத்மதிருப்தியை இழந்து விடச் சொல்லவில்லை. செயலில் கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை இழந்து விடச் சொல்லவில்லை.

மாறாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதிலும் எப்படிச் செய்ய வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கச் சொல்கிறது. நம்மை செய்யும் செயலில் முழுமையாக ஈடுபடச் சொல்கிறது. செயலில் கீழ், மேல் என்ற பாகுபாடுகள் இல்லை என்று சொல்கிறது. பலன், புகழ், கவலை, பயம் என்று நமது சக்திகளை வீணடிக்காமல் செய்யும் செயலில் கண்ணாயிருக்கச் சொல்கிறது. அப்படி முழுமையாகச் செய்த செயல்கள் என்றும் சிறக்காமல் போனதில்லை. காலத்தை வென்று நிற்கும் அத்தனை அற்புத சாதனைகளும் அப்படி செய்யப்பட்டவையே.

எனவே செயலையும் செயல்முறையயும் சிந்தித்துத் தேர்ந்தெடுங்கள். உற்சாகமாகச் செய்யுங்கள். செயலைச் செய்யும் போது உயிரோட்டத்துடன் இருங்கள். உங்கள் செயல் சிறப்பாக அமையும். பலனைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் செயலிலேயே பலனை விதைத்து விட்டீர்கள். தக்க காலத்தில் பலன் வந்தே தீரும். அது இயற்கையின் விதி. இதுவே கர்மயோகம்.

(மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கர்மயோகம் பற்றி விவரித்ததோடல்லாமல் மகாபாரதத்தில் அதை வாழ்ந்து காட்டியிருக்கிறார். பரம்பொருள் தேரோட்டியாக பணி புரிவதா என்று பின் வாங்கவில்லை. தேரோட்டி என்பது யுத்தம் ஆரம்பிக்கும் போது தயார் நிலையில் இருக்கும் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு வேலையைத் தொடங்குவது அல்ல. அதிகாலை எழுந்து குதிரையைக் குளிப்பாட்டி அதனுடன் அன்பான உறவை சாரதி வைத்துக் கொள்ள வேண்டும். இல்லா விட்டால் யுத்தகளத்தில் குதிரை சொன்னபடி இயங்கும் என்பது நிச்சயமில்லை. ஸ்ரீகிருஷ்ணர் குதிரைகளைக் குளிப்பாட்டும் அழகை வியாசர் மிக அழகாக மகாபாரதத்தில் விவரிக்கிறார்.

அதுமட்டுமல்ல தேரில் இருந்து போரிடும் வீரன் தேர் எந்தப் பக்கம் போக வேண்டும் என்பதை தன் காலால் தேரோட்டியின் தோளில் அழுத்தி சமிக்ஞை செய்வான். அதன்படி தான் சாரதி தேரை ஓட்ட வேண்டும். அப்படி அர்ஜுனனின் கால்மிதிகளை பதினெட்டு நாள் வாங்கிக்கொண்டு சாரதியாக இருந்திருக்கும் பகவான் கர்மயோகத்தை சொல்லால் மட்டுமல்ல செயலாலும் விளக்கி இருக்கிறார்.)


தேங்க்ஸ் -என்.கணேசன்

No comments:

Post a Comment