அதிக மதிப்பெண் பெற்றால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பது உண்மைதான். அதற்காக மாணவர்களைப் பந்தயக் குதிரைகள் போல தனியார் பள்ளிகள் நடத்துவதும் இதை கல்வித்துறை கண்டும் காணாமல் இருப்பதும் புரியாத புதிர்.
தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துகிறது. பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் சதம் அடித்துள்ளது. என்றாலும்கூட, தனியார் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ, மாணவியர் மட்டும் வழக்கம்போல பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் முற்பகல் மட்டும் இவர்களுக்காகச் செயல்படுகிறது.
பிளஸ்-2 தேர்வுக்குரிய பாடங்களை கோடை விடுமுறையிலேயே நடத்தி முடித்துவிடுகிறார்கள். சில தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் பிளஸ்-2 தொடங்கிவிடுகிறது. இந்த மாணவர்கள் ஜூன் மாதம் பிளஸ்-2 வகுப்புக்குச் சென்றவுடன் அவர்களுக்குத் தொடர்ந்து நாள்தோறும் தேர்வுகள் வைத்துப் பழக்குகிறார்கள். வினா வங்கி முழுவதற்கும் பதில் சொல்லும் யந்திரன் போல மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சி.
"அரசுப் பள்ளிகள்தான் நல்ல நாளிலேயே தில்லை நாயகமாக இருக்கின்றன; தனியார் பள்ளிகளிலாவது இத்தகைய நல்ல கல்வி கிடைக்கட்டுமே' என்ற தவறான கருத்தாக்கம் பொதுமக்களிடம் உள்ளது. மக்களிடம் ஏற்படும் இந்த நல்ல எண்ணம்தான் தனியார் பள்ளிகளுக்கு முதலீடு என்பதையும், மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாக வைத்து, பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதையும் பொதுமக்கள் அறிவதில்லை.
தங்கள் பள்ளி மாணவர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் என்றும், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் என்றும் தொடர்ந்து இத்தனையாவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி என்றும் தம்பட்டம் அடிக்கத்தான் இப்படியாக மாணவர்களை பிழிந்தெடுக்கிறார்கள். இந்த மாணவர்கள் எந்தெந்தக் கல்லூரியில் சேர்ந்தார்கள் என்ற பட்டியலைத் தயாரித்து அதையும் விளம்பரப்படுத்தி, பொதுமக்களின் நன்மதிப்புடன் கல்விக் கட்டணத்தை மேலும் மேலும் உயர்த்துகிறார்கள். சில தனியார் பள்ளிகள், அவர்தம் கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பணம் கொடுத்து (பங்குச் சந்தை போலவே) வாங்கி, கட்டணச் சலுகை தந்து, பிளஸ்-2 தேர்வில் அவர்கள் பெறும் சிறப்புகளைத் தங்களுடன் அடையாளப்படுத்தி கல்விக் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். பெற்றோரால் இந்தக் கல்விக் கட்டணத்தை மறுக்க முடியாத நிலைமையை உருவாக்குகிறார்கள்.
இந்த நடைமுறை மாணவர்களிடம் மிகப் பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்பதுடன் அகில இந்திய அளவில் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதிலும் தடையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.
இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வெறும் கேள்வி-பதிலை மட்டுமே மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெற்று பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரிகளில் சேரும்போது, அவர்கள் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மூளைத் திறன் மழுங்கடிக்கப்பட்டு விடுகிறது. மனவெறுமையை இட்டு நிரப்ப சிலர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். சிலர் இரக்கமற்ற முரடர்களாக ஆகிறார்கள். சிலர் படிப்பின் மீது வெறுப்புற்று உயர்கல்வியில் கரையும் நிழல்களாக மாறுகிறார்கள்.
இந்த நடைமுறையின் இன்னொரு பாதிப்பு தமிழகத்திற்கானது. அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்களால் தேர்ச்சி பெற முடிவதில்லை. காரணம், அங்கு கேட்கப்படும் கேள்விகள், அடிப்படை அறிவியலில் மூளையை சிந்திக்கத் தூண்டுபவை. ஆனால் இங்கோ வெறும் பல ஆயிரம் கேள்விக்கு உடனே பதில் எழுதும் பயிற்சி மட்டுமே தரப்படுகிறது. அரசுப் பள்ளிகளை மனதில் வைத்து, பாடத்திட்டங்களையும் குறைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு அவசியம் இல்லை என்றாகிவிட்டது. இதனால் சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிகிறது.
இந்தியா முழுவதும் திறந்து கிடக்கும், மிகக் குறைந்த கட்டணத்திலான உயர்கல்வி வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் இழந்து வருகிறார்கள்.
ஊதுகிற சங்கை ஊதுவோம் என்றும், இந்தக் கல்வி ஆண்டிலாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படாதா என்றும் ஆதங்கப்படுவதுதான் நமது தலைவிதி என்று நினைத்துவிட முடியாது. ஏமாற்றங்களால் துவண்டு விட்டால் மாற்றங்கள் ஏற்படாது!
தேங்க்ஸ் டு dinamani
No comments:
Post a Comment