Thursday, April 30, 2009

சுவிஸ் வங்கிப் பணம் இந்தியாவுக்கு வருமா? --- அர்ஜுன் சம்பத்

உலகத்திலேயே மிக வளம் பொருந்திய நாடாக இந்தியத் திருநாடு திகழ்ந்தது. 18-ஆம் நூற்றாண்டில் உலக வர்த்தகத்தில் 36% இந்தியாவின் கைகளில் இருந்தது. ஆங்கிலேயர்கள் நமது நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டு, அடிமைப்படுத்தி நமது நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தனர் என்பதை நாம் சரித்திரத்தில் படித்திருக்கிறோம். சுதந்திரத்துக்குப் பிறகு வெள்ளையர்கள் கொள்ளையடித்ததைவிட மிக அதிகமாக, நம்மவர்களே நமது நாட்டின் வளத்தை சுரண்ட ஆரம்பித்தனர். உலகின் வறுமைசூழ்ந்த நாடுகளில் ஒன்றாக நமது நாடு தற்போது மாறியுள்ளது. இந்தியாவின் பெரும்பான்மை ஏழை, எளிய மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். வறுமைக்கோடு என்றால், ஒருவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் இருப்பவர்கள். இன்னொருபுறத்தில் ஒரு சிறிய கூட்டம், இந்தியாவின் வளத்தின் பெரும்பகுதியை அனுபவித்து சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறது. இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட, ஊழல் மூலம் சுரண்டப்பட்ட கணக்கில் வராத பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் ஏராளமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சமீபகாலமாக பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.


இங்கிலாந்தில் நடைபெற்ற பொருளாதார வளம் பொருந்திய ஜி-20 நாடுகளின் மாநாட்டிலும் இதுகுறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது. தற்போது சர்வதேச அரங்கில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வளர்ந்த நாடுகள் என்று கருதப்படும் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. தங்களது நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை சரிக்கட்டுவதற்காக மேற்கண்ட நாடுகள் பெரும் முயற்சியை எடுத்து வருகின்றன. சுவிட்சர்லாந்து வங்கிகள் போன்ற பணம் பதுக்கும் வங்கிகளில் இந்திய நாட்டுப் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதுபோல, மேற்கண்ட நாடுகளின் பணமும் அங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகள், சுமார் 40-க்கும் மேலுள்ளன. சுவிட்சர்லாந்து, மலேசியாவை ஒட்டியுள்ள தீவுகளில் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகள் உள்ளன. இத்தகைய வங்கிகளில் கணக்கில் வராத கருப்புப் பணம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கொள்ளையடிக்கப்படுகின்ற பணமும் பதுக்கி வைக்கப்படுகின்றது.


இந்த வங்கிகளில் மூலதனம் செய்து வட்டி வருவாயை எதிர்பார்த்து யாரும் இங்கே கொண்டு போய் பணத்தைப் பதுக்குவதில்லை. இந்த வங்கிகள் கொடுக்கும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மட்டுமே, இங்கு பணத்தைப் பதுக்கி வருகிறார்கள். இந்த வங்கிகளுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? யார் மூலம் வருகிறது? எதனால் வருகிறது? என்பதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. பணம் கொடுத்தால், பதுக்கி வைத்து ரகசியத்தைக் காப்பாற்றி பணத்தைத் திருப்பிக் கொடுப்பார்கள். இதன் காரணமாக உலகின் பல பகுதிகளிலும் கொள்ளையடிப்பவர்களும், கொலை செய்பவர்களும், போதை மருந்து கடத்துபவர்களும், ஆயுத பேர ஊழல்கள் செய்பவர்களும் தங்களது ரத்தக் கறை படிந்த பாவப் பணத்தை இத்தகைய வங்கிகளில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதன் காரணமாக, உலக அளவில் பயங்கரவாதமும், வன்முறைச் செயல்களும், தேச விரோத நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அமெரிக்காவில் போதைப் பொருள் கடத்தல், பயங்கரவாதச் செயல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு இந்த வங்கிகள் பெரிதும் காரணமாக உள்ளன.



சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்கவும், பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கவும் பெருமுயற்சி எடுத்து வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, சுவிட்சர்லாந்து நாட்டிற்கு இது விஷயத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். தங்கள் நாட்டுக்குச் சொந்தமான பணம் சுவிஸ் வங்கிகளில் முடங்கிக்கிடப்பதை மீட்பதற்காக அமெரிக்காவில் போதிய சட்டத் திருத்தங்களைச் செய்து வருகிறார் ஒபாமா. சர்வதேச அளவிலும் உரிய சட்ட விதிமுறைகளின் மூலம் முயற்சி செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் சர்கோசியும் இது விஷயத்தில் சுவிட்சர்லாந்தின் மீதும் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து விவாதிப்பதற்காக மட்டுமே தாம் ஜி-20 மாநாடுகளில் பங்கேற்றிருப்பதாகவும் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஜெர்மனி புலனாய்வு அதிகாரிகள் இத்தகைய பணம் பதுக்கும் வங்கி ஒன்றிலிருந்து ரகசியக் கணக்கு வைத்திருப்போர் பட்டியலை சாமர்த்தியமாகப் பெற்றுள்ளனர். இதுகுறித்து அந்த நாட்டின் தினசரி ஒன்றில், நிதி அமைச்சரின் பேட்டி வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியர்கள் சிலர் இடம்பெற்றிருப்பதாகவும், இதுகுறித்த விவரங்களை இந்திய நாட்டுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் நமது நாட்டு ஆளுங்கட்சியினரும், பிரதம அமைச்சரும், நிதி அமைச்சரும் இதுகுறித்து மெüனம் சாதித்து வருகின்றனர். ஜி-20 மாநாட்டில் இதுபற்றி நமது நாட்டின் சார்பில் எந்தக் கேள்வியும் எழுப்பப்படவில்லை. ஜி-20 மாநாடுகளில் இதுகுறித்து விவாதிக்க முடியாது என்றும், சுவிட்சர்லாந்து நாட்டின் மீது பழிசுமத்துவதற்கான இடம் ஜி-20 மாநாடு அல்ல என்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் நிதி அமைச்சரும், தற்போதைய உள்துறை அமைச்சருமான சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங், சிதம்பரம் ஆகியோர் பெரும் பொருளாதார வல்லுநர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள். இந்தியாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளின் சிற்பிகள் என்று மார்தட்டிக் கொள்பவர்கள். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் நமது நாட்டுச் செல்வத்தை மீட்கும் நோக்கில் இல்லை. உலகிலுள்ள எல்லா நாடுகளும், பணம் பதுக்கும் இத்தகைய வங்கிகளிலுள்ள தங்கள் நாட்டுச் செல்வத்தை மீட்பதற்குரிய முயற்சிகளைச் செய்து வருகின்றன. தற்போது இது இந்தியாவின் பிரச்னை மட்டுமல்ல; உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

2006-ம் ஆண்டு முதல் தற்போதைய 2009-ம் ஆண்டு வரை உள்ள கணக்கின்படி, உத்தேசமாக 74 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களின் கருப்புப் பணம் சுவிஸ் வங்கியில் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதிலும் உள்ள பொருளாதார வல்லுநர்கள் இதுகுறித்து பெரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உலகளாவிய கருப்புப் பணத்தில், அதாவது பதுக்கப்பட்ட பணத்தில் 56% இந்தியர்களின் பணம் என்றும் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து இந்திய அரசு தொடர்பு கொண்டால் தங்கள் நாட்டு சட்டதிட்டங்களின்படி உரிய பதில் தருவோம் என்று சுவிட்சர்லாந்துக்கான நிதி அமைச்சர் கூறியிருக்கிறார்.

இந்தியாவிற்கான சுவிட்சர்லாந்தின் சிறப்புத் தூதரும் கருப்புப் பணம் நிறைய உள்ளது என்பது உண்மை என்று நமது தலைநகரிலேயே உறுதிப்படுத்தியுள்ளார். இது தேர்தல் நேரமாக இருக்கின்ற காரணத்தினால், தற்போது இந்தப் பிரச்னை மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் எல்.கே.அத்வானி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால், 100 நாளில் சுவிஸ் வங்கியில் முடங்கிக் கிடக்கும் பணத்தை மீட்கப் போவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விஷயம் இடம்பெற்றுள்ளது.

ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்டுகளும் சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை மீட்பதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தபோது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பதில் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக இதுகுறித்து கேள்வி எழுப்பினால், பதில் சொல்லும் நிலையில் சுவிஸ் நாடோ அல்லது இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகளோ இல்லை. இப்போது சர்வதேச அளவில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இத்தகைய பணம் பதுக்கும் வங்கிகளுக்கும் மிகப்பெரும் அரசியல் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இத்தகைய வங்கிகளின் செயல்பாடுகள் காரணமாக, உலகம் முழுவதும் பயங்கரவாதச் செயல்களும், சட்டவிரோதச் செயல்களும் பெருகி வருகின்றன. இதுகுறித்து உலக நாடுகள் அனைத்தும் பெரும் கவலை கொண்டுள்ளன. இந்தியாவைப்போல அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இந்தியாவில் உள்நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்காக ஆர். வெங்கட்ராமன் நிதி அமைச்சராக இருந்தபோது தானாக முன்வந்து கணக்குகளை ஒப்படைத்தால், அதை ஏற்றுக் கொண்டு கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு உரிய சட்டப் பாதுகாப்பை கொடுப்பதாக உறுதியளித்தார். அதன் காரணமாக ஒரு சிலர் குறைந்த அளவு கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வந்தனர்.

மேற்கண்ட நடவடிக்கைகளைப் போல தொடர்ந்து நாம் செயல்பட்டால், உள்நாட்டில் புழங்கும் கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதுபோல, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தையும் வெளியே கொண்டு வர முடியும். அதற்குரிய சட்ட நடவடிக்கைகளை புதிதாக அமைகின்ற ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். சுவிட்சர்லாந்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் பணத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதன் மூலம் இந்திய நாடு பெரும் வல்லரசாகவும், நல்லரசாகவும் உருவெடுக்க முடியும்.

தற்பொழுது இரண்டு காரணங்களுக்காக நாம் இந்த உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஒன்று, மேலும் கருப்புப் பணப் புழக்கமும், பயங்கரவாதிகளின் செயல்களும் ஊக்குவிக்கப்படாமல் இருக்க வேண்டும். இரண்டு, நமது தேசத்தின் வறுமை நீங்கி, வளம் பெருகிட வேண்டும். இத்தகைய நடவடிக்கையை நாம் எடுக்கவில்லையெனில் தொடர்ந்து குற்றச்செயல்கள் நடந்து கொண்டே இருக்கும். நமது தேசத்தின் முன்னேற்றம் தடைபடும். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களுக்கே நமது ஓட்டு என்பதையும் நம் மக்கள் உணர்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment