Wednesday, April 15, 2009

இந்தியா- உலக நாடுகளின் குப்பை தொட்டியா?

தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஐ.டி .சி. நிறுவனம் அமெரிக்காவிலிருந்து நகராட்சிக் கழிவுகளைத் தவறான தகவல் அளித்து இறக்குமதி செய்ய முற்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நமது துறைமுகப் பொறுப்புக் கழகங்களும், சுங்க இலாகா அதிகாரிகளும், மாசுக் கட்டுப்பாட்டுத் துறையும் கவனமாகவும் முனைப்பாகவும் செயல்படுவது பாராட்டுக்குரிய விஷயம். அவர்களது பார்வையில்படாமல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து கழிவுப் பொருள்கள் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

இரண்டு மாதங்களுக்கு முன்புகூட, சென்னைத் துறைமுகத்தில் பழைய பேப்பர் என்று தவறான தகவல் அளித்து சுமார் 150 டன்கள் ஆறு கன்டெய்னர்களில் வந்து இறங்கின. துறைமுக அதிகாரிகளுக்கும், சுங்க இலாகாவினருக்கும் சந்தேகம் ஏற்பட்டதால், மாசுக் கட்டுப்பாட்டுத் துறையினரின் உதவியை நாட, அந்த 150 டன்களில் சுமார் 40 சதவீதம் எலக்ட்ரானிக் கழிவுகளும், நகராட்சிக் குப்பைகளும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் திருப்பி அனுப்பப் பரிந்துரை செய்யப்பட்டு, இப்போதும் துறைமுகத்தில் அவை நாற்றமடித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதுபோன்ற கழிவுகள், பழைய காகிதம் என்கிற பெயரில்தான் அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது.

தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 100-க்கும் அதிகமான காகிதத் தொழிற்சாலைகள் உள்ளன. அவை சுமார் 20 லட்சம் டன் காகிதம் உற்பத்தி செய்கின்றன. அதில் 60 சதவீதம் இறக்குமதி செய்யப்பட்ட பழைய காகிதத்தில் இருந்துதான் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது. இதையே சாக்காக வைத்து பழைய காகிதத்துடன் நகராட்சிக் கழிவுகள் மற்றும் குப்பைகளையும் ஏற்றுமதி செய்துவிடுகின்றன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். இப்படிக் குப்பையுடன் இறக்குமதி செய்யும்போது குறைந்த விலைக்குப் பழைய காகிதம் கிடைக்கிறது. இதில் இடைத்தரகர்களும் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொழிக்கிறார்கள். இதுபோன்ற குப்பைகளை இறக்குமதி செய்பவர்கள், கண்டுபிடிக்கப்பட்டால் மாயமாக மறைந்து விடுவார்கள். இல்லையென்றால் நீதிமன்றத்தைத் துணைக்கு அழைத்துக்கொண்டு காலம் தாழ்த்தும் உத்தியில் ஈடுபடுவார்கள். இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் துறைமுக அதிகாரிகளுக்கோ, சுங்க இலாகாவினருக்கோ, மாசுக் கட்டுப்பாட்டுத் துறைக்கோ முறையாக வரையறுக்கப்படாமல் இருப்பதுதான் காரணம்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தையும் சோதனை இடும் வசதி நமது துறைமுகங்களில் இல்லை. சென்னை போன்ற பெரிய துறைமுகங்களில்கூட, கப்பலிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்யும் வசதி ஏற்படுத்தப்படாமல் இருக்கிறது. கப்பல் மூலம் இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் கழிவுகள் மட்டுமல்ல, நாட்டின் பாதுகாப்புக்கே ஆபத்தான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவை கடத்தப்படுவதுகூட சாத்தியம்தான். இறக்குமதியாளர்கள் தரும் தகவல் மற்றும் உத்தேசமான பரிசோதனை மூலம் மட்டும்தான் சுங்க இலாகாவினர் இறக்குமதி செய்யப்படும் சரக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது.

பயங்கரவாதிகளால் நமது நாடு பலமுறை தாக்கப்பட்ட பிறகும் நமது துறைமுகங்கள் தகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்கப்பட வேண்டும் என்கிற முனைப்பு நமது அரசிடம் ஏற்படாதது வியப்பாக இருக்கிறது. துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை "ஸ்கேன்' செய்யும் வசதிகள் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைக்கூட ஏன் அரசு உணரவில்லை என்பது தெரியவில்லை. அது ஒருபுறமிருக்க, வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து நகராட்சிக் குப்பைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்க ஏன் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பது அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. இப்படிக் குப்பைகளை இறக்குமதி செய்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், தண்டனை அளிக்கும் விதத்தில் சட்டங்களை நிறைவேற்றுவதிலும் மத்திய அரசு தயங்குகிறது. "காட்' ஒப்பந்தம், உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை என்றெல்லாம் கூறும் நமது ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் இதுபோல இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடுகள், தங்களது குப்பைத் தொட்டிகளாக உபயோகித்துக் கொள்ள மறைமுகமாக அனுமதிக்கிறார்களோ என்கிற சந்தேகம் கூட எழுகிறது. கேட்டால், இதைப் பற்றி நாம் அதிகம் பேசினால், அன்னிய முதலீடு குறைந்துவிடும் என்று பதிலளிக்கிறார்கள்.

இந்தியாவை உலக நாடுகளின் குப்பைத் தொட்டியாக்கி விட்டு அன்னிய முதலீடு பெறுவது என்பது கண்களை விற்றுச் சித்திரம் பெறுவது போன்றதல்லவா? எலக்ட்ரானிக் கழிவுகள் மூலம் ஏற்படும் கதிர் வீச்சும், நகராட்சிக் குப்பைகள் மூலம் பரவக்கூடிய விஷக்கிருமிகளும் பல தலைமுறைகளைப் பாதிக்கக் கூடும் என்பது தெரிந்தும் அதைத் தடுக்க நாம் தவறுகிறோமே, இதைத் தட்டிக் கேட்க இந்த நாட்டில் யாருமே இல்லையா?

No comments:

Post a Comment