Thursday, April 30, 2009

அழியும் விவசாயம்

"உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று வள்ளுவப் பேராசானும், "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்று மகாகவி பாரதியும் பாடிய நாட்டில் உழவுத் தொழில் என்பது அழிந்து வருவது வேதனையிலும் வேதனை. விவசாயக் குடும்பங்களில் இளைஞர்கள் கல்லூரிப் படிப்புக்குச் சென்றுவிட்டதால் நகரங்களில் குடியேறி கிராமங்களுக்கே திரும்பாத நிலையில், பல கிராமங்கள் வெறிச்சோடிக் கொண்டிருக்கின்றன.

போதாக்குறைக்கு, விவசாயம் என்பது லாபகரமல்லாத, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தொழிலாகிவிட்டது. அவ்வப்போது, விவசாயக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்குக் காப்பீடு என்று சில சலுகைகள் தரப்படுவதன்றி, பெரிய அளவில் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏதாவது செய்கிறதா என்றால் சந்தேகமே.

வேளாண் துறையினர் ஆயிரம் விளக்கங்கள் கூறலாம். பல்வேறு திட்டங்களைப் பட்டியலிடலாம். ஊருக்கு ஊர் வேளாண்துறையின் அலுவலகங்கள் செயல்படுகின்றன என்று கணக்குக் காட்டலாம். மாதிரிப் பண்ணைகள், இலவச மின்சாரம் மற்றும் விதைகள், செயல் பயிற்சிகள் எல்லாம் உங்கள் கண்ணில்படவில்லையா என்று கேட்கலாம். இத்தனை இருந்தும் விவசாயிகள் ஏன் விவசாயத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை கண்டுபிடித்துத் தீர்வு காணவில்லையே, ஏன்? அடிப்படைப் பிரச்னை விவசாயக் கூலி அதிகரித்துவிட்டது என்பதல்ல. விவசாயக் கூலிக்கு ஆள்கள் கிடைக்கவில்லை என்பதுதான் பிரச்னை. அப்படியே ஆள்கள் கிடைத்தால், அங்கே போதிய தண்ணீர் வசதி கிடையாது. தடையில்லாத மின்சாரம் கிடையாது. இதெல்லாம் இருந்து, வங்கிக் கடனும் கிடைத்துப் பயிரிட்டு, உரமிட்டு, அறுவடை செய்தால் விளைபொருளுக்குப் போதிய விலை கிடைப்பதில்லை. சந்தைப் பொருளாதாரம் என்கிற சாக்கில் இடைத்தரகர்கள் கொழிக்கிறார்களே தவிர பயிரிடும் விவசாயிக்கு எஞ்சுவதென்னவோ வறுமையும் கடனும்தான். நிலத்தை விற்கலாம் என்றால் வாங்க ஆள் கிடையாது. விளைநிலத்தை வீட்டு மனையாக்க முனைவோரும் சரி, அடிமாட்டு விலைக்கல்லவா விவசாயிகளை ஏமாற்றி விடுகிறார்கள். பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளில்கூட விவசாயத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நாம் இங்கே பங்குச் சந்தையையும் சென்செக்ûஸயும் மட்டுமே முன்னிறுத்தி நமது திட்டங்களையும், செயல்பாடுகளையும் வகுக்கிறோமே, அவர்கள் அப்படிச் செய்வதில்லை.


அமெரிக்கப் பொருளாதாரம் முன் எப்போதும் இல்லாத சரிவைச் சந்தித்து வரும் இந்த வேளையில்கூட, விவசாயிகளுக்கான சலுகைகள் எதுவுமே குறைக்கப்படவில்லை. சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறார்கள். புதிய தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்துவது, இளைஞர்களைப் பெரிய அளவில் விவசாயத்தில் ஈடுபடத் தூண்டுவது, கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க ஊக்கமளிப்பது, பாசன வசதிகளை அதிகரிப்பது, விளைபொருள்களுக்கு அதிக விலை கொடுத்து விவசாயிகள் தொழிலை விட்டுவிடாமல் ஊக்கப்படுத்துவது என்று இந்தப் பிரச்னையை அரசு அணுக வேண்டாமா? அறுவடைக்குப் பிறகு, சேமிப்பு மற்றும் விற்பனை வரை விவசாயிக்கல்லவா முன்னுரிமை தந்து திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்? விளைநிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இருப்பதுபோல ஒரு நரக வேதனை எதுவும் கிடையாது என்பது விவசாயம் செய்தவர்களுக்குத்தான் தெரியும். உழுது பயிரிட்டு, பாதுகாத்து அறுவடை செய்து ஆனந்தப்பட்ட ஒரு விவசாயிக்கு வேறு வேலைக்கோ, தொழிலுக்கோ போக மனம் ஒப்பாது. விவசாயம் பண்ண முடியவில்லை என்கிற இயலாமைதான் பலரை தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தள்ளுகிறது.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கோரியிருப்பதைப்போல, விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதற்கு அரசு வழிசெய்தாக வேண்டும். மத்திய அரசின் சம்பளக் கமிஷன்போல, திட்டக் கமிஷன்போல, வேளாண்மைக்கும் ஒரு கமிஷன் ஏற்படுத்தி விவசாயிகளின் நலன் பேணப்பட்டால் மட்டும்தான் இந்தியாவின் உணவு உற்பத்தித் தன்னிறைவு என்பது உறுதி செய்யப்படும். அது உறுதி செய்யப்பட்டால்தான் இந்தியாவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். நகர்ப்புறங்களிலிருந்து மீண்டும் மக்களைக் கிராமப்புறங்களுக்குத் திரும்பும்படி செய்ய வேண்டும். அதற்கு ஒரே வழி, விவசாயத்துக்கு முன்னுரிமை அளிப்பதும், அதிகாரிகளைப்போல விவசாயிகள் வாழ வழி வகுப்பதும்தான். உழுது, விதைத்தறுப்பாருக்கு உணவில்லை என்கிற நிலைமை மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும்!

No comments:

Post a Comment