""பி.டி., கத்தரி சாகுபடி செய்யும் பட்சத்தில், கத்தரி இனத்தை சேர்ந்த தூதுவளை, சுண்டக்காய், கண்டகத்தரி, மணத்தக்காளி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் அழிந்து விடும்,'' என இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.கோவை வேளாண் பல்கலை மற்றும் அமெரிக்கா விதை நிறுவனமான மான்சான்டோவின் இந்திய பங்குதாரர் "மஹிகோ' நிறுவனமும் காய்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் மரபணு மாற்றம் செய்த பி.டி., கத்தரிக்காயை உற்பத்தி செய்துள்ளது.
பி.டி.,கத்தரிக்காய்க்கு, இந்திய உயர் தொழில் நுட்பவியல் ஒழுங்குமுறை அமைப்பு, மத்திய அமைச்சகத்துடன் இணைந்த ஜெனிடிக் இன்ஜினியரிங் ஒப்புதல் கமிட்டியும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இந்தியாவில் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, காய்கறி உற்பத்தியை பெருக்குவதற்காக, தட்ப வெப்ப நிலைக்கு தாக்கு பிடித்து, அதிக அளவில் காய்க்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்க, மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.பி.டி., கத்தரியை சாகுபடி செய்வது தொடர்பாக, விவசாயிகளின் கருத்து கேட்க, மத்திய அரசு இம்மாதம் நாடு முழுவதும் ஆறு மாநில தலைநகரங்களில் கூட்டம் நடத்தவுள்ளது.
பி.டி., கத்தரி தொடர்பாக அகில இந்திய இயற்கை உழவர் இயக்க தலைவரும், இயற்கை விஞ்ஞானியுமான நம்மாழ்வார் கூறியதாவது:விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பின்னர் பி.டி., கத்தரி சாகுபடி செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கினாலும் ஆச்சரியமில்லை. ஆனால், தமிழகத்தில் பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், விவசாயிகளிடம் நேரில் சென்று பி.டி., கத்தரியால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.தற்போது பி.டி., கத்தரிக்கு அனுமதி வழங்கினால், படிப்படியாக, அனைத்து காய்கனிகளும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விடும். பி.டி., கத்தரி குறித்து ஆராய்ச்சி செய்யும் இந்திய மாணவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் உதவித் தொகை வழங்குகிறது. அதனால்தான் பி.டி., கத்தரி எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என, அவர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால், பி.டி., கத்தரி சாப்பிட்டால் புற்றுநோய், மலட்டுதன்மை, அலர்ஜி போன்ற நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
தூதுவாளை, கண்டங்கத்தரி, மணதக்காளி, சுண்டக்காய் என, கத்தரி இனத்தில் 500க்கும் மேற்பட்ட பாரம்பரிய ரகங்கள் நாட்டில் இருந்தது. இவற்றில் பெரும்பாலான ரகங்கள் காலப்போக்கில் அழிந்து விட்டன.பி.டி., கத்தரி சாகுபடி செய்தால், அதன் விதையை எடுத்து மீண்டும் உபயோகப்படுத்த முடியாது. பதிலாக, அதனை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் இருந்து தான், ஒவ்வொரு முறையும் விதைகள் வாங்கியாக வேண்டும். பி.டி.,கத்தரி சாகுபடி செய்யும் போது, அந்த பூக்களில் அமரும் பூச்சிகள்தான், பிற கத்தரி இன பூக்களுக்கும் சென்று மகரந்த சேர்க்கையில் ஈடுபடும்.அவ்வாறு மகரந்த சேர்க்கையில் ஈடுபடும் பூச்சிகள், பிற கத்தரி இன பூக்களில் அமரும் போது, அந்த பூக்களும் மலடாகி காலப்போக்கில் கத்தரி இனமே முற்றிலும் அழிந்து விடும். மீண்டும் சாகுபடி செய்வதற்காக எடுத்து வைக்கும் விதையும் முளைக்காது.
எதிர்காலத்தில், ஒட்டுமொத்த விவசாயிகளும் பி.டி.,கத்தரி விதை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை நம்பியே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.நாட்டின் ஒட்டுமொத்த காய்கறி உற்பத்தியும் ஒரு சில தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அவர்கள் எவ்வளவு அதிக விலை நிர்ணயம் செய்தாலும், அந்த விலைக்கு விதைகளை வாங்கியே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். விவசாயிகளும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, இந்த ஆபத்தை தடுக்க முடியும்.இவ்வாறு நம்மாழ்வார் கூறினார்.
thanks to dinamalar
No comments:
Post a Comment