Wednesday, August 12, 2009

அதிகரித்து வரும் வறுமையும், அதிகரிக்காத உணவு உற்பத்தியும்

சமீபத்தில் மத்தியப் பிரதேசத்தைப் பற்றிய ஒரு செய்திக் குறிப்பு, விவரம் அறிந்த பலரையும் திடுக்கிட வைத்தது. மத்தியப் பிரதேச மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் ஊட்டச்சத்துக் குறைவின் காரணமாகக் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 450 குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துப் பிரச்னையில் மத்தியப் பிரதேசம் மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்த சாதனையே வேதனைக்குரியதாகத்தான் தொடர்கிறது. ஐந்து வயதுக்குக் குறைந்தவர்களில் 38 விழுக்காடு குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாதவர்களாகவும், 15 விழுக்காடு குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம், உடல் வளர்ச்சி இல்லாமலும் இந்தியாவில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. மொத்தத்தில் எடுத்துக்கொண்டால், இந்தியாவில் 43 விழுக்காடு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் போதிய எடை இல்லாமல் இருப்பதாகவும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.


சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்ட வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குறிப்பிட்டிருக்கும் சில கருத்துகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை. அதிகரித்து வரும் வறுமையும், அதிகரிக்காத உணவு உற்பத்தியும் வர இருக்கும் மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறிகள் என்று சுட்டிக்காட்டி இருக்கும் எம்.எஸ். சுவாமிநாதன், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்பதால், இவற்றை ஒட்டுமொத்தமாகக் கருதித்தான் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்கிறார். ""நீர்மூழ்கிக் கப்பல்களும், விண்கலன்களும் செய்து நம்மால் சாதனை படைக்க முடியுமானால், உணவுப் பாதுகாப்பை மட்டும் ஏன் உறுதி செய்ய முடியவில்லை?'' என்பது அவரது நியாயமான கேள்வி.


வேளாண் விஞ்ஞானி மட்டுமல்ல, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமார்த்தியா சென்னும் இந்தப் பிரச்னையை இன்னொரு கோணத்தில் அணுகுகிறார். ""ஊட்டச்சத்துக் குறைவை எதிர்கொள்ள வேண்டுமானால், உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் பெண்கள் பிரச்னைகள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதை நாம் உணர வேண்டும். இந்தியாவில் புறக்கணிக்கப்படும் இரண்டு முக்கிய விஷயங்கள், ஊட்டச்சத்துக் குறைவும், அனைவருக்கும் உணவு முறையாகக் கிடைக்க வழி செய்யாமல் இருப்பதும்தான்'' என்பது அமார்த்தியா சென்னின் கருத்து. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் உணவு என்பது கல்வி மற்றும் வேலையைப்போல ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமையாக்கப்படுகிறது. இதன்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு கிலோ ரூ. 3 வீதம் மாதமொன்றுக்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை தரப்படுகிறது. சட்டம் இயற்றினால் மட்டும் போதுமா? ஒருசில மாநிலங்கள் தவிர, இந்தியாவில் முறையாகப் பொது விநியோக முறையே நடைமுறைப்படுத்தப்படாதபோது, இப்படி ஒரு சட்டத்தால் என்ன பயன்? வறுமைக்கோட்டுக்குக் கீழே என்று சொல்லப்படும் விதிமுறையின்கீழ், வீடும், விலாசமும் இருப்பவர்கள்தானே வரமுடியும்? வீதியில் வாழ்வோர் இந்திய மக்கள்தொகையில் 20 விழுக்காட்டுக்கும் மேல் என்பதைப் பற்றியோ, அவர்கள் உண்ண உணவும், உடுக்க உடையும், செய்யத் தொழிலும் இல்லாமல், தெருவோரச் சிறார்களை உருவாக்கும் உன்னதப் பணியில் மட்டுமே ஈடுபட்டிருப்பதைப் பற்றியோ, ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தானே கவலைப்படுகின்றன!


காமராஜ் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டமும், எம்.ஜி.ஆர். ஆட்சியில் அறிமுகப்படுத்தி இன்றுவரை தொடர்ந்து நடைபெறும் சத்துணவுத் திட்டமும் தமிழகத்தில் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைவதற்கு வழிகோலின. தமிழகத்தைப் பார்த்து முந்தைய வாஜ்பாய் அரசு, இந்தத் திட்டத்தை தேசிய அளவில் நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது, பல மாநிலங்களில் இப்போது இந்தத் திட்டம் செயல்படுகிறது என்பது ஆறுதலான விஷயம்.


அதேபோல, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தின்கீழ், தாய்மை அடையும் மகளிருக்கு மாதமொன்றுக்கு ரூ. 1,000 வீதம் ஆறு மாதங்கள் உதவித்தொகை அளிப்பது என்கிற அற்புதமான திட்டத்தை இப்போதைய தமிழக அரசு அறிவித்துச் செயல்படுத்தவும் செய்கிறது. அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தனியார்மயப்படுத்துவதில் காட்டும் ஆர்வத்தைத் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி திட்டத்தில் காட்டுவதில்லை என்கிற சந்தேகம் சமீபகாலமாக எழுந்திருக்கிறது. கர்ப்பமடைந்து ஆறாவது மாதத்திலிருந்து மாதந்தோறும் தரப்பட வேண்டிய ஆயிரம் ரூபாய் பலருக்கும் குழந்தை பிறந்து ஓராண்டான பிறகுதான் பல்வேறு சிக்கல்களுக்கிடையில் தரப்படுகிறது என்று கேள்வி. தாயாருக்கு ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள் எப்படி ஊட்டமாக பிறக்கும்?


நமது மூதாதையர்கள், புண்ணியம் என்ற பெயரிலும், மதத்தின் கோட்பாடு என்றும் வசதி படைத்தவர்களை ஆங்காங்கு அன்னசத்திரங்கள் கட்டி வைக்கச் சொன்னதன் காரணம் இப்போதல்லவா புரிகிறது!

தேங்க்ஸ் டு தினமணி

No comments:

Post a Comment