"கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி; கிலோ ரூ.40-க்கு விற்ற கத்தரிக்காய் கிலோ ரூ.2.50க்கு விற்கப்பட்டதால் விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம்' என்ற செய்தியைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஓர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதலீடு செய்து, போட்ட முதல்கூட கிடைக்கவில்லை என்றால் அந்த விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகிவிடும்.
இப்போதே இந்த நிலைமை என்றால், மரபீனி மாற்றப்பட்ட பி.டி. கத்தரிக்காய் சந்தைக்கு வந்து குவியும்வேளையில் இந்த விவசாயிகள் நிலை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.
இந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி, உழவர் திருநாளில், மரபீனி மாற்றப்பட்ட பி.டி.கத்தரிக்காயின் வணிக உற்பத்திக்கு அனுமதி வழங்கியது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். இந்த அனுமதியைப் பெற்றிருப்பது மைக்கோ நிறுவனம். இது மாண்சான்டோ நிறுவனத்தின் ஏஜன்ஸி.
உலகில் மனிதர்கள் உண்ணும் உணவுப்பயிரில் இத்தகைய மரபீனி மாற்றப்பட்ட கத்தரிக்காய் அனுமதிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதில் முந்திக்கொண்டிருக்கிறது இந்தியா. அமெரிக்காவில் மரபீனி மாற்றப்பட்ட மக்காச்சோளம், சோயா ஆகியன கால்நடைத் தீவனப் பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை பகுக்கப்பட்ட உணவாக (புராஸஸ்டு புட்) வரும்போது மரபீனியின் தாக்கம் சிதைந்த நிலையில் மனிதர்கள் உண்ணலாம் என அனுமதிக்கப்பட்டாலும் அங்கே அதை உண்பார் யாருமில்லை.
உலகில் உற்பத்தியாகும் கத்தரிக்காயில் 26 சதவீதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் சுமார் 5 லட்சம் ஹெக்டேரில் கத்தரிக்காய் சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்கின்றனர். பாரம்பரிய கத்தரிக்காய் சாகுபடியில் 50 சதவீதம் உற்பத்தி பூச்சிகளால் பாதிக்கப்படுவதாகவும், இதனால் தேசிய இழப்பு ஆண்டுக்கு ரூ. 1000 கோடி என்றும் கூறுகின்ற மைக்கோ நிறுவனம், பி.டி. கத்தரிக்காயை சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ஒரு ஹெக்டேரில் குறைந்தது ரூ. 16,000 சம்பாதிக்க முடியும் என்று கருத்துரு அளித்து, முதலில் தங்கள் சோதனைப் பயிரிடல் அனுமதியைப் பெற்றனர். இப்போது பி.டி. கத்தரிக்காயால் மனிதருக்கு பாதிப்பு இல்லை என்று சொல்லி, வணிக உற்பத்திக்கும் அனுமதி பெற்றுள்ளனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கண்காணிப்பில் அகில இந்திய ஒருங்கிணைந்த காய்கறி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட சோதனைச் சாகுபடி முடிந்து, ஆய்வுகள் செய்யப்பட்ட பிறகுதான் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், பல உண்மைகள் அரசு அதிகாரிகள் துணையுடன் மறைக்கப்பட்டுவிட்டன என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது. இதுவரை இதற்கு அரசு பதில் தரவில்லை.
பி.டி. கத்தரிக்காயை உண்பதால் ஏற்படக்கூடிய ஒவ்வாமை, நச்சுப்பொருள் ஆகியன குறித்து எலிகளிடம் ஆராய்ந்து பார்த்ததில், பாதகமான அம்சங்கள் ஏதுமில்லை என்று மைக்கோ தெரிவித்தாலும், இந்த பி.டி. கத்தரிக்காயை சமைக்கும்போது அதில் மரபீனி எத்தகைய மாற்றம் கொள்கிறது, அவை உண்ணுகிற மனிதரை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்ற முழுஆய்வு விவரங்களை மைக்கோ மறைத்துவிட்டது என்று குறைகூறப்படுக்கிறது.
பி.டி. கத்தரிக்காய் சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு சாகுபடிச் செலவு மிகவும் குறைவாகும், உற்பத்தி அதிகரிப்பால் லாபம் அதிகம் கிடைக்கும் என்று சொன்னாலும், இந்த விதைகளை என்ன விலைக்கு விற்கத் தீர்மானித்திருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிட மறுக்கிறது மைக்கோ நிறுவனம். இந்த விதைகள்தான் இந்த நிறுவனத்துக்கு லாபம் தரும் என்பதை மத்திய அரசு உணர்ந்திருந்தாலும், விதைகளின் விலையைத் தீர்மானிப்பதில் எந்த உரிமையையும் எடுத்துக்கொள்ளவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
இதுஒருபக்கம் இருக்கட்டும். இந்த பி.டி. கத்தரிக்காய் சந்தைக்கு வரும்போது, அதன்மீது லேபிள் ஒட்டும் நிபந்தனைகள் எதையும் இந்திய அரசு விதிக்கவில்லை. ஆகவே இது பாரம்பரிய கத்தரிக்காயா அல்லது பி.டி. கத்தரிக்காயா என்று திண்டாடப்போவது மக்கள்தான்.
மேலை நாடுகளில் மரபீனி மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பு இல்லை என்பதுடன் எதிர்ப்பும் அதிகம் என்பதால், இந்தியா பக்கம் கண் வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் இன்னும் 41 உணவு உற்பத்திப் பொருள்களுக்கு சோதனை சாகுபடிக்கான அனுமதியையும் மைக்கோ பெற்றுள்ளது.
ஏற்கெனவே பி.டி. பருத்தி வெளியாகி அதன் பாதகங்கள் குறித்து நிறைய செய்திகள் வந்தாகிவிட்டன. இப்போது உணவுப்பொருளான கத்தரிக்காயில் நுழைந்திருக்கிறார்கள். உலக நாடுகள் எதுவுமே அனுமதி அளிக்காத பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி அளிக்க இந்தியாவுக்கு மட்டும் என்ன அப்படியொரு அவசரம், அல்லது அவசியம்? எதற்காக இப்படி வரிந்துகட்டிக்கொண்டு ஆதரிக்கிறது இந்தியா?
கத்தரிக்காய் காய்த்தால் கடைத்தெருவுக்கு வந்தாக வேண்டும் என்பது பழமொழி.
தேங்க்ஸ் டு dinamani
No comments:
Post a Comment