இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் என்பது இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் பிரிவு என்று சொன்னால் அது மிகையல்ல. ஆராய்ச்சியாளர்கள், இந்திய அறிவுசார் வல்லுநர்கள் மட்டுமே இதில் இடம்பெற்று, அறிவியல் கண்டுபிடிப்பின் அனைத்து நன்மைகளையும் இந்திய மக்களுக்கு அளித்து வருகிறார்கள் என்பதுதான் இதுவரைக்கும் நம் அனைவருக்கும் இருந்த கருத்து.
இவர்கள் ஏவும் செயற்கைக்கோள் பாதியில் வெடித்துச் சிதறினாலும், பழுதானாலும், பாதைவிலகி பயனற்றுப் போனாலும்கூட இந்த ஆராய்ச்சியாளர்களை யாரும் குறை சொன்னதில்லை. தவறுகளைத் திருத்தி இன்னும் நன்றாக மீண்டும் செயற்கைக்கோள் செலுத்துங்கள் என்றுதான் அரசும் மக்கள் அமைப்புகளும் ஊக்கப்படுத்தின. தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதலில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதற்கான துறைவாரி குழு அமைத்து விசாரித்தபோதும்கூட யாரும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.
ஆனால் அத்தனை நம்பிக்கையையும் சிதைத்துவிட்டது, அரசுக்கே தெரியாது நடைபெற்றுள்ள ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் மல்டிமீடியா ஒப்பந்தம்.
பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் விண்வெளித் துறைக்குத் தகவல் தெரிவிக்காமலேயே, இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்டிரிக்ஸ், தனியார் நிறுவனமாகிய தேவாஸ் மல்டிமீடியாவுடன் 2005-ல் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவர்களுக்கென்று, அவர்களுக்கு வசதிப்படும் தொழில்நுட்பங்களுடன் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கும், எஸ்-பாண்டில் 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தவும் ஒப்பந்தம் போட்டுள்ளது.
அது மட்டுமா? தேவாஸ் மல்டிமீடியா தனது உரிமைகளை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்கிறது அந்த ஒப்பந்தம். வெறுமனே 60 நாள்களுக்கு முன்பாகத் தகவல் தெரிவித்தால் போதும் (அனுமதி பெறவேண்டியதில்லை) என்று அந்த ஒப்பந்தம் அனுமதித்திருப்பதையும், மக்கள் பணம் ரூ.2,000 கோடியில் இரண்டு செயற்கைக்கோள் ஏவ முன்வந்திருப்பதையும் பிரதமர் அலுவலகத்துக்குத் தெரிவிக்காமல் இருப்பதென்றால், இதைவிட ஒரு தேசத் துரோகம் என்னவாக இருக்க முடியும்?
எஸ்-பாண்டு அலைக்கற்றை மூலம், கைப்பேசி சேவையையும் தற்போது டாடா ஸ்கை, டிஷ்டிவி போல வீட்டுக்கு ஒளிபரப்பை நேரடியாகக் கொண்டு வருவது மட்டுமன்றி, இந்தியாவின் கனிமவளம், நீராதாரம், மழை, ராணுவச் செயல்பாடுகள் ஆகியவற்றையும்கூட கண்காணிக்க முடியும் என்கிறபோது, பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியாமல் இப்படியான ஒப்பந்தம் போடவும், யாருக்கு வேண்டுமானாலும் உரிமையை மாற்றலாம், விற்கலாம் என்பதும் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
ஒரு சாதாரணப் பாமரனுக்கு ஏற்படும் கலக்கம்கூட விஞ்ஞானிகளான படித்தமேதைகளுக்கு இல்லாமல் போனது எப்படி? இவர்கள் தெரிந்தே தவறு செய்திருக்கிறார்கள். அமைச்சர்களுக்கும் பெருந்தொழில் அதிபர்களுக்கும் சொல்லிக் கொடுத்து, திட்டம் தீட்டிக்கொடுப்பவர்களே அதிகாரிகள்தான் என்பது அண்மைக்காலமாக வெளியாகும் அனைத்து ஊழல்களிலும் அம்பலமாகிறது. இப்போது விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.
இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன், இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். 2010 ஜூலை மாதம் உள்ளாய்வுக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டு, இது தொடர்பாக அரசிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்கிறார். ஒப்பந்தம் போட்டபோது தகவல்கூடத் தெரிவிக்கவில்லை. ரத்துசெய்ய மட்டும் அரசின் ஆலோசனையா? வேடிக்கையாக இல்லையா இந்தக் காதில் பூச்சுற்றும் வேலை?
ஒப்பந்தம் ரத்து காரணமாக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்கு நஷ்டஈடு தரும் அவசியமில்லாதபடி செய்வோம் என்கிறார். ஏன் மற்ற நிறுவனங்களையும் அழைத்து விலைகோரவில்லை என்ற கேள்விக்கு, தேவாஸ் மல்டிமீடியா உருவாக்கியது வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அறிவியல் பயன்பாடு ஆகும் (!) என்கிறார். எல்லாவற்றுக்கும் இப்படி ஏடாகூடமான ஏதாவது ஒரு பதில் அவர்களிடம் இருக்கிறது.
"இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை என்பதால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு என்று சொல்வது தவறு' என்று பிரதமர் அலுவலகம் சொல்கிறது. மிகச் சரி. பத்திரிகைகளில் அம்பலமான பிறகுதானே இதை ரத்துசெய்ய முடிவு செய்திருந்தோம் என்கிறீர்கள். ஏன் ஒப்பந்தம் செய்ததை 5 ஆண்டு காலம் மறைத்தீர்கள்? 2010 ஜூலை மாதத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஊழலை எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள் என்பதால்தான், இஸ்ரோ உள்ளாய்வுக் குழு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்ற முடிவுக்கே வந்தது என்பதுதானே பச்சையான உண்மை. இப்போது பிரதமர் அலுவலகம் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தில் யாரெல்லாம் தொடர்பு உடையவர்கள், இதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்பதையெல்லாம் துருவிப் பார்த்தால்தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியும் உண்மைகளும் தெரியவரும். இஸ்ரோ அதிகாரிகள், பெருந்தொழில் அதிபர்கள், சில அரசியல்வாதிகள் கூட்டணியில்தான் இந்த ஒப்பந்தம் சாத்தியம். வேறு எந்தக் குப்பனும் சுப்பனும் இந்த ஒப்பந்தத்தைப் போட முடியாது. இதில் குற்றத்தின் பங்கு அதிகாரிகளுக்கே அதிகமாக இருக்கும். ஆனால், அரசியல்வாதிகளும் சம்பந்தப்படாமலா இருப்பார்கள்?
இஸ்ரோவில் அறிவியல் செயலராகப் பணியில் இருக்கும்போதே அனைத்து ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செய்துவிட்டு, அரசு ஓய்வூதியப் பலன்களை அனுபவித்தபடி, தேவாஸ் மல்டிமீடியாவுக்குத் தலைமை ஏற்க முடியும் என்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில், முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றும்போதே, உரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தனியார் பள்ளித் தாளாளர் ஆக முடியும்; கல்வி அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கல்லூரிகள் தொடங்க முடியும்; உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் முன்பாகவே மருமகன்களை கோடீஸ்வரர்களாக்க முடியும் என்கிற நிலைமை எல்லாத் துறைகளையும் சீரழிக்கும் புற்றுநோயாகப் பரவிவிட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் ஓய்வுபெறும் உயர் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் பொறுப்பேற்கவும், ஆலோசகர்களாக இருக்கவும் முடிகிறது. தான் சீரழிந்ததோடு நில்லாமல், அந்தப் பிரதமர் க்கு உயர்ந்துள்ள தனது ஜூனியரையும் வûளைத்துப்போட இவர்கள் பேருதவியாக இருக்கிறார்கள். காட்டு யானைகளை வழிக்குக் கொண்டுவரப் பயன்படுத்தும் யானைகளுக்கு "கும்கி' என்று பெயர். அரசு அதிகாரிகள் அளவிலும் இத்தகைய "கும்கி'கள் பெருகிக்கிடப்பதுதான் மலிந்துவிட்ட ஊழலுக்கே ஓர் அடிப்படைக் காரணம்.
விஞ்ஞான பூர்வமான ஊழலை அரசியல்வாதிகள் செய்யும்போது, விஞ்ஞானிகள் அதைவிடத் துல்லியமாகவும், சிறப்பாகவும் செய்துவிட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் "இஸ்ரோ' விஞ்ஞானிகள்.
பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் தெரியாமல் என்னவெல்லாமோ நடக்கிறது என்று சொன்னால், பிறகு அந்தப் பிரதமர் பதவியில் இருந்தென்ன, இல்லாமல் போனால்தான் என்ன?
No comments:
Post a Comment