Tuesday, February 28, 2012

அன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன நிகழ்ச்சி மஹா பெரியவர் (தொகுப்பு - ஸ்ரீ எஸ். ரமணி அண்ணா)



அன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை

பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ! ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் கொண்டே வினவினார்.


உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி' க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வர்றது பெரியவா !

வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா....தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்.

அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...அது சரி. இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா ?" என்று கவலையுடன் விசாரித்தார்.


உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்.

இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!

ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார், தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியயூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.


அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.


ஒரு பக்தர், ஸ்வாமிகளைப் பார்த்துக் கேட்டார்: "அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மகிமை இருக்கா ஸ்வாமி ?"


உடனே ஸ்வாமிகள், "ஆமாமா! மோட்ஷத்துக்கே அழச்சுண்டு போகக் கூடிய மகா புண்ணிய தர்மம் அது ! ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணி இருக்கு ! இத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள் கிட்டே கேட்டாத் தான் சொல்லுவா. அப்பேற்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!" என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.


ஒரு பக்தர் எழுந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டுப் பவ்யமாக, "எம் பேரு ராமசேது. திருவண்ணாமலை சொந்த ஊர். ஆச்சார்யாளை நாங்க அத்தனை பேருமா சேர்ந்து பிரார்த்தனை பண்ணறோம்...இந்த அதிதி போஜன மகிமையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விஸ்தாரமா...நாங்கெல்லாம் நன்னா புரிஞ்சுக்கறாப்லே கேக்க ஆசைப்படறோம். பெரியவா கிருபை பண்ணனும் !" என்றார்.


அவரை அமரச் சொன்னார் ஸ்வாமிகள். பக்தர் அமர்ந்தார். அனைவரும் அமைதியுடன் அந்த நடமாடும் தெய்வத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த பரப்பிரம்மம் பேச ஆரம்பித்தது:


"ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதெட்டு..முப்பத்தொம்போதாம்
வருஷம்னு ஞாபகம். ஸ்ரீ சங்கர மடம் கும்மாணத்லே (கும்பகோணம்) நிர்வாகம் பண்ணிண்டிருந்தது. அப்போ நடந்த ஒரு சம்பவந்தான் இப்போ நா சொல்லப் போறேன். அத நீங்கள்ளாம் சிரத்தையா கேட்டுட்டாலே இதுல இருக்கிற மகிமை நன்னா புரியும் ! சொல்லறேன், கேளுங்கோ. " - சற்று நிறுத்தி விட்டு மீண்டும் தொடர்ந்தார் ஸ்வாமிகள்:
கும்மாணம் மாமாங்கக் குளத்தின் மேலண்டக் கரைலே ஒரு பெரிய வீடு உண்டு. அதுலே குமரேசன் செட்டியார்னு பலசரக்குக் கடை வியாபாரி ஒருத்தர் குடியிருந்தார். நேக்கு நன்னா ஞாபகமிருக்கு...அவரோட தர்ம பத்தினி பேரு சிவகாமி ஆச்சி ! அவா காரைக்குடி பக்கத்துலே பள்ளத்துரச் சேர்ந்தவா. அந்தத் தம்பதிக்கு கொழந்த குட்டி கெடையாது. கடைத்தெரு மளிகைக் கடைய பாத்துக்கறதுக்கு அவா ஊர்லேர்ந்தே நம்பகமா ஒரு செட்டியார் பையனை அழச்சுண்டு வந்து வீட்டோட வெச்சுண்டிருந்தா.

குமரேசன் செட்டியாருக்கு அப்போ, அம்பது, அம்பத்தஞ்சு வயசு இருக்கலாம்........அந்த ஆச்சிக்கு அம்பதுக்குள்ளதான் இருக்கும். சதா சர்வ காலமும் அவா ரெண்டு பேரோட வாய்லேர்ந்தும் "சிவ சிவ சிவ சிவ" ங்கற நாமஸ்மரணம் தான் வந்துண்டு இருக்கும். வேற பேச்சே கெடையாது ! செட்டியார் வீட்ல ஒரு ஒத்தை மாட்டுவண்டி இருந்துது. அதுல ஆச்சிய ஒக்கார வெச்சுண்டு செட்டியாரே ஒட்டிண்டு போவார் ! நித்யம் காலங்கார்த்தால ரெண்டு பேரும் வண்டில காவிரிக்கு ஸ்நானம் பண்ண வருவா....ஸ்நானத்த முடிச்சுண்டு அப்டியே நம்ம மடத்துக்கும் வந்து நமஸ்காரம் பண்ணிப்ட்டு ஆசீர்வாதம் வாங்கிண்டு போவா . அப்பிடி ஒரு அன்யோன்ய தம்பதியா அவா இருந்தா. அவாளப் பத்தி, இதையெல்லாம் விட தூக்கியடிக்கக் கூடிய ஒரு சமாச்சாரம் சொல்லப் போறேன், பாருங்கோ..."


- சொல்லி விட்டு சஸ்பென்சாக கொஞ்ச நாழிகை மௌனம் மேற்கொண்டார் ஸ்வாமிகள்.


சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்கள், ஸ்வாமிகள் என்ன சொல்லப் போகிறாரோ என ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆச்சார்யாள் மீண்டும் பேசத் தொடங்கினார்: "பல வருஷங்களா அந்தத் தம்பதி என்ன காரியம் பண்ணிண்டு வந்திருக்கா தெரியுமா ? அதிதிகளுக்கு உபச்சாரம் பண்றது! ஆச்சர்யப்படாதீங்கோ ! அந்த தம்பதிகள் பல வருஷங்களா அதிதி போஜனம் பண்ணிண்டு இருந்தா ! பிரதி தினமும் மத்தியானம் எத்தனை சிவனடியார்கள் வந்தாலும், அவாளுக்கு எல்லாம் முகம் கோணாம வீட்டுக் கூடத்திலே ஒக்காத்தி வெச்சு போஜனம் பண்ணி வெப்பா. சிவனடியார்களை வாசத் திண்ணையில் ஒக்கார வெச்சு ரெண்டு பெறுமா சேர்ந்து கை கால் அலம்பி விட்டு, வஸ்திரத்தாலே தொடச்சு விட்டு...சந்தனம் - குங்குமம் இட்டு கூடத்துக்கு அழச்சுண்டு போய் ஒக்காத்துவா.

அவா க்ருஹத்திலே சமையல்காரா ஒத்தரையும் வெச்சுக்கலே ! எத்தனை அதிதி வந்தாலும் அந்தம்மாவே தன் கையாலே சமைச்சுப் போடுவா! அதுலேயும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னு கேட்டேள்னா, வந்துருக்கற சிவனடியார்களுக்கு என்னென்ன காய்கறிகள், பதார்த்தங்கள் புடிக்குமோ அதை அவா கிட்டேயே கேட்டுண்டு போய், வாங்கிண்டு வந்து பண்ணிப் போடுவா ! அப்டி ஒரு ஒசந்த மனசு! இதெல்லாம் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும்னு யோசிக்கறேளா...அது வேற ஒரு ரகசியமும் இல்லே. மடத்துக்கு ரொம்ப வேண்டிய சுந்தரமைய்யர்ங்கறவர் குமரேசன் செட்டியாரோட கணக்கு வழக்குகளைப் பார்த்துண்டு இருந்தார். அவர் தான் சாவகசமா இருக்கறச்சே இதை எல்லாம் வந்து சொல்லுவார்! இப்ப புரிஞ்சுதா? "

சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார், ஆச்சார்யாள். அமர்ந்திருந்த ஒருவரும் இப்படி அப்படி அசையவில்லை. மஹா ஸ்வாமிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நடமாடும் தெய்வம் தொடர்ந்தது: " ஒரு நாள் நல்ல மழை பேஞ்சுண்டிருந்தது. உச்சி வேளை. ஒரு அதிதியக் கூடக் காணோம்! கொடையப் புடிச்சுண்டு மஹாமகப் கொளத்துப் படிகள்ளே எறங்கிப் பார்த்தார் செட்டியார். அங்க ஒரு சின்ன மண்டபத்துலே சிவனடியார் ஒருத்தர் ஸ்நானமெல்லாம் பண்ணி விபூதி எல்லாம் பூசிண்டு ஒக்காந்திருந்தார். அவரைப் பிரார்த்திச்சு போஜனத்துக்கு அழைச்சுண்டு வந்தார் செட்டியார். அவர் கொஞ்சம் நன்னா வாசிச்ச சிவனடியார் போலிருக்கு. தேவாரமெல்லாம் பாடிண்டே வந்தார். கால் அலம்பி விட்டுக் கூடத்துக்கு அவரை அழைச்சுண்டு போய் ஒக்கார வெச்சார் செட்டியார். சிவனடியாரை நமஸ்காரம் பண்ணியது அந்தத் தம்பதி. செட்டியாரின் தர்ம பத்தினி சிவனடியார் கிட்டே போய், "ஸ்வாமிக்கு என்ன காய்கறி புடிக்கும் ? சொல்லுங்கோ. கடைக்குப் போய் வாங்கிண்டு வந்து சமைச்சுப் போட்டுடறேன்' என்று கேட்டார்.


சிவனடியார்க்கோ நல்ல பசி போல. அவர் எழுந்திருந்து கொல்லப் பக்கம் போய்ப் பார்த்தார். கொள்ளையிலே நிறைய முளைக் கீரை மொளைச்சிருந்ததைப் பார்த்தார். உள்ளே வந்தார். அந்த அம்மாவைக் கூப்பிட்டு, தனக்கு 'வேற ஒண்ணும் வேண்டாம். மொளக்கீர கூட்டும், கீரத் தண்டு சாம்பாரும் பண்ணாப் போறும்' னார். கைல ஒரு மூங்கில் தட்டோட கீரை பறிக்கப் போனார் செட்டியார். அப்போ மழையும் விட்டுடுத்து. நாழி ஆயிண்டே போச்சு. சிவனடியார்க்கோ நல்ல பசி. கீரைய நாமும் சேர்ந்து பறிச்சா சீக்கிரமா முடியுமேங்கற எண்ணத்துலே, தானும் ஒரு மூங்கில் தட்ட வாங்கிண்டு கீரை பறிக்கப் போனார் சிவனடியார்.

இவா ரெண்டு பேரும் கீரை பறிக்கறத சிவகாமி ஆச்சி கொல்லை வாசப்படியிலே நின்னு பாத்துண்டிருந்தா. பறிச்சப்பறம் ரெண்டு பேரும் கீரைத் தட்டைக் கொண்டு வந்து உள்ளே வந்து வெச்சா ! அந்தம்மா ஒடனே என்ன பண்ணா தெரியுமா ? ரெண்டு தட்டுக் கீரையையும் தனித்தனியா அலம்பினா. ரெண்டு அடுப்பைத் தனித்தனியா மூட்டினா. ரெண்டு தனித்தனி வாணலியிலே கீரையைப் போட்டு...அடுப்புலே ஏத்தி சமைக்க ஆரம்பிச்சா. அதைப் பார்த்துண்டிருந்த சிவனடியார்க்கு ரொம்ப ஆச்சர்யம் ! 'என்னடா இது..ரெண்டும் ஒரே மொளக் கீரை தானே. ஒரே பாத்திரத்துலே போட்டு சமைக்காம இப்படி தனித் தனியா அடுப்பு மூட்டி இந்தம்மா பண்றாளே' னு கொழம்பினார்.

சித்த நாழி கழிச்சு, கீர வாணலி இரண்டையும் கீழே எறக்கி வெச்ச அந்தம்மா, சிவனடியாரோட கீரைய மாத்திரம் தனியா எடுத்துண்டு போய் பூஜை 'ரூம்'லே ஸ்வாமிக்கு நிவேதனம் பண்ணினா. இதைப் பார்த்துண்டு இருந்த சிவனடியாருக்கு பெருமை பிடிபடல்லே ! அவர் என்ன நெனச்சுண்டுண்டார் தெரியுமா ?' நாம ஒரு பெரிய சிவ பக்தன்...சந்யாசி. அதனாலே நாம பறிச்ச கீரையைத் தான் சிவபெருமான் ஏத்துப்பார்' ங்கறதை இந்தம்மா புரிஞ்சுண்டு, நிவேதனம் பண்ணறா' னு தீர்மானிச்சுண்டுட்டார். இருந்தாலும் போஜனம் பண்ணப்றம் இந்த நிவேதன விஷயத்தை அந்தம்மாகிட்டவே கேட்டுடணம்னு தீர்மானம் பண்ணிண்டார்."


- இங்கு சற்று நிறுத்தி எதிரில் இருந்த பக்தர்களைப் பார்த்தார் ஸ்வாமிகள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்தார்: "போஜனம் முடிஞ்சு வந்து ஒக்காந்த சிவனடியார் தன் சந்தேகத்தை அந்த அந்த ஆச்சிகிட்டே கேட்டுட்டார். ஆச்சி என்ன பதில் சொன்னா தெரியுமா ? 'ஐயா கொல்லைல கீரை பறிக்கறச்சே நா பாத்துண்டே இருக்கேன். என் பர்த்தா 'சிவ..சிவ' னு சிவ நாமத்தை சொல்லிண்டே பறிச்சார். அது, அப்பவே சிவார்ப்பணம் ஆயிடுத்து.

திரும்ப நிவேதிக்க வேண்டிய அவசியம் இல்லே. நீங்க ஒண்ணுமே சொல்லாம பறிச்சேள். அதனாலே தான் தனியா அடுப்பு மூட்டி ஒங்க கீரையை மட்டும் கொண்டு வெச்சு ஸ்வாமிக்கு அர்ப்பணம் பண்ணினேன்' னு சொன்னா. இதை கேட்ட ஒடனே அந்த சிவனடியாருக்கு என்னமோ மாதிரி ஆயிடுத்து. ரொம்ப சங்கோஜப் பட்டுண்டார். தம்பதி ரெண்டு பேரும் சிவனடியாரை நமஸ்காரம் பண்ணினா. ஆசீர்வாதம் பண்ணிப்டு, அந்த ஆச்சியோட பக்தியையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டிப் புறப்பட்டார்! அப்டி அன்னம் (சாப்பாடு) போட்ட ஒரு தம்பதி அவா..."

நிறுத்தினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் பிரமிப்புடன் அமர்ந்திருந்தது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஸ்வாமிகள் தொடர்ந்தார்: "இப்படி விடாம அதிதி போஜனத்தை பிரதி தினமும் பண்ணி வெச்சுண்டிருந்த அவாளுக்கு கெடச்ச 'பல ப்ராப்தி' (பிரயோஜனம்) என்ன தெரியுமா ? சில வருஷங்கள் கழிச்சு 'சஷ்டியப்த பூர்த்தி' (60 வயது பூர்த்தி) எல்லாம் அவா பண்ணிண்டா. ஒரு மஹா சிவராத்திரி அன்னிக்கு கும்பேஸ்வர ஸ்வாமி கோயில்லே நாலு கால பூஜைல ஒக்காந்து தரிசனம் பண்ணா. வீட்டுக்குத் திரும்பின அந்த அம்மா தனக்கு 'ஓச்சலா இருக்கு' னு சொல்லிப்டு பூஜை ரூம்லே ஒக்காந்தவ அப்படியே கீழே சாஞ்சுட்டா. பதறிப் போய்...சிவகாமினு கத்திண்டே உள்ளே போன செட்டியாரும், அந்தம்மா பக்கத்துலேயே சாஞ்சுட்டார். அவ்வளவு தான். அந்த மஹா சிவராத்திரி அன்னிக்கே ரெண்டு பேரும் ஜோடியா 'சிவ சாயுஜ்ய' த்த அடஞ்சுட்டா. அதிதி போஜனம் விடாம பண்ணி வெச்சதுக்கு அந்த தம்பதிக்குக் கெடச்ச 'பதவி' யப் பார்த்தேளா ? இப்பவும் ஒவ்வொரு மஹா சிவராத்ரி அன்னிக்கும் அந்த தம்பதிய நெனச்சுப்பேன். அப்படி அன்னம் போட்ட ஒரு தம்பதி அவா..."


முடித்தார் ஆச்சார்யாள்! கேட்டுக் கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் நீர் கசிந்தது. இடத்தை விட்டு எழுந்த அந்த நடமாடும் தெய்வம், "மணி கிட்டதிட்ட ரெண்டு ஆயிடுத்து போலிருக்கு. எல்லோருக்கும் பசிக்கும். போங்கோ...உள்ளே போய் நன்னா சாப்பிடுங்கோ" எனக் கருணையுடன் அனுப்பி வைத்தது.
 
பக்தி என்பது, பண்டம் மாற்றுவது போல் ஏதோ ஒன்றுக்கு ஒன்று கொடுப்பது போல் ஆகக் கூடாது. நாம் எதையும் கிஞ்சித்தும் கருதாமல், சர்வசதா காலம் அவனிடம் போய் சேருவது ஒன்றையே நினைத்து நினைத்துத் தன்னையும் அறியாது ஓடுகிற சித்தவிருத்தி இருக்கிறதே அதற்குத் தான் பக்தி என்று பெயர்.

Sunday, February 26, 2012

ஸ்ரீ சக்கரத்தம்மாள்.

எண்ணற்ற மகான்களால் புனிதமடைந்த பாரத பூமியில், ’ஆன்மாவிற்கு ஆண், பெண் பேதம் என்பது கிடையாது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இறைவனை அடைவதற்கு அது ஒருதடையாக இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீ சக்கரத்தம்மாள். தியாகமும், யோகமும் இணைந்த ஒன்றாக அவரது வரலாறு விளங்குகிறது.

ஸ்ரீ சக்கரத்தம்மாளின் இயற்பெயர் அனந்தாம்பாள். பொது சகாப்தம் 1854ம் ஆண்டில், வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தை ஆலய அர்ச்சகர். தேவி உபாசனையில் தேர்ந்தவர். தாயாரோ அனுதினமும் சிவனைத் தவறாது பூஜித்து வந்தவர். இவர்களது குழந்தை என்பதால் சிறுவயதிலேயே அதற்கு இறை அனுபூதி வாய்த்திருந்தது. குழந்தை ஞானச் செறிவுடன் வளர்ந்து வரும் வேலையில் திடீரென்று தாயார் காலமானார். தந்தை அக்கால வழக்கப்படி மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையின் கவனிப்பில் குழந்தை வளர்ந்தது. 

லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீஸ்துதி போன்றவற்றை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டு தினமும் ஓதி வந்தாள் சிறுமி அனந்தாம்பாள். கோயிலின் மேல்நிலைக்குச் சென்று தனியாக அமர்ந்து தியானம் செய்வது அவளுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. சக குழந்தைகளுடன் விளையாடுவதை விட, தந்தையுடன் சென்று ஆலயப் பணிகளில் ஈடுபடுவதே அவளுக்குப் பிடித்திருந்தது. 

திடீரென சிறுமிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எழும்பூரில் இருந்த கோமளீஸ்வரர் மடத்தின் அதிபதியான சாம்பசிவனுடன் திருமணம் நடந்தது. அப்போது அனந்தாம்பாளுக்கு வயது எட்டு. சாம்பசிவனுக்கோ இருபத்துமூன்று. அவருக்கு அது இரண்டாவது திருமணமும் கூட. பால்ய விவாகம் சகஜமாக இருந்ததால் அக்காலத்தில் திருமணத்திற்கு எதிர்ப்புகள் ஏதும் இல்லை.

மணமாகிச் சென்னைக்கு வந்தாள் அனந்தாம்பாள். சிறுமியான அவள் திருமண வாழ்க்கை பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. நாளடைவில் தன் பொறுப்புக்களையும், கடமைகளையும் உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து கொண்டாள். ஆனால் கணவன் சாம்பசிவனோ, மனைவி ஒரு சிறுமி என்பதால் மதிக்காமல் தன் இஷ்டம்போல் வாழ்க்கை நடத்தினார். அவர் தீய நடத்தை உடையவராகவும் இருந்தார். அனந்தாம்பாளுக்குத் திருமண வாழ்க்கை ஒரு கொடிய நரக வாழ்க்கையாக அமைந்தது. 

அனந்தாம்பாள் வளர்ந்தார். குமரியானார். ஆனால் அப்போதும் சாம்பசிவன் தனது தீய நடவடிக்கைகளை நிறுத்தவில்லை. அனந்தாம்பாளை உளரீதியாகப் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாக்கினார். மிகக் கொடிய துன்பத்தை அவர் அனுபவிக்க நேர்ந்தது. ஆனாலும் தனது இல்லறக் கடமைகளைக் கைவிடவில்லை. 

அதேசமயம் அவரது ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணம் இருந்தது. தினந்தோறும் அருகில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். தியானத்தில் ஈடுபடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லுவார். இறைவனை வேண்டி, உளம் உருக வழிபட்டு வருவார். 

நாளடைவில் தீயசெயல்களின் விளைவால் படுத்த படுக்கையானார் சாம்பசிவன். அப்போதும் அவருக்கான கடமைகளைச் செய்து வந்ததுடன், தினம்தோறும் ஆலயம் சென்று கணவருக்காகப் பிரார்த்தித்து வரலானார் அனந்தாம்பாள்.

ஒருநாள் கணவர் இறந்து விட்டார். அனந்தாம்பாளுக்கு மொட்டை அடிக்கப்பட்டதுடன், காவி வஸ்திரமும் அணிவிக்கப்பட்டது. அதுமுதல் யாருடனும் எதுவும் பேசாமல், தன் வீட்டின் மொட்டை மாடியில் தனித்தமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார். அப்போது அவருக்கு வயது 20. 

கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள், தன் முப்பதாவது வயது வரையில், அவரது அந்த மௌனத் தவம் தொடர்ந்தது. தவத்தின் முடிவில் அந்த ஒளிக்கெல்லாம் ஒளியான பேரொளியைக் கண்டார் அம்மா.

 அதுமுதல் சதா ஆனந்த நிலையில் இருப்பதே அவர் வழக்கமாயிற்று. ’யான் எனதென்பது அறியேன், பகலிரவாவது அறியேன்’ என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருந்ததுடன், பரிபூரண ஆனந்த பிரம்ம நிலையிலேயே திளைத்திருந்தார். சதா ஆனந்த நிலையில் இருப்பதால் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பது அவர் வழக்கமானது.

கோமளீசுவரன் ஆலய வாசலில் அமர்ந்திருப்பார். யாரைப் பார்த்தாலும் பெருங்குரலெடுத்துச் சிரிப்பார். அவரைக் கண்ட பலரும் ஆரம்பத்தில் பைத்தியம் என்று கருதி விலகிச் சென்றனர். 

பின்னரே அவர் ’ஞான சொருபிணி’ என்பதும், ’பிரம்ம யோகினி’ என்பதும் தெரிய வந்தது. அம்மாவின் ஞான நிலையை உணர்ந்த சண்முக முதலியார் என்பவர் முதல் சீடரானார். தொடர்ந்து பலரும் அம்மாவை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவராக விளங்கியவர் டாக்டர் நஞ்சுண்டராவ்.

டாக்டர் நஞ்சுண்டராவ், சென்ற நூற்றாண்டின் பிரபலமான 
மருத்துவர்களுள் ஒருவர். கர்னல் ஆல்காட், கிருஷ்ணசுவாமி அய்யர், பி. ஆர். சுந்தரமையர், காட்டுப் புத்தூர் ஜமீன்தார் என பலருக்கும் அவர்தான் குடும்ப டாக்டர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். 

விவேகானந்தர், நஞ்சுண்டராவின் ஆன்மீக வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அமெரிக்காவிலிருந்தும் மற்ற வெளிநாடுகளிலிருந்து விவேகானந்தர் நஞ்சுண்டராவிற்கு எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ்பெற்றவை. “எனக்கு சென்னையைப் பற்றி மிகப் பெரிய நம்பிக்கை உள்ளது. 

சென்னையிலிருந்து ஒரு மிகப்பெரிய ஆன்மீக அலை உருவாகப் போகிறது. அது இந்தியாவெங்கும் பரவி ஒளி வீசப் போகிறது. இதில் எனக்கு பெருத்த நம்பிக்கை இருக்கிறது” என்று டாக்டர் நஞ்சுண்டராவுக்கு எழுதிய கடிதத்தில்தான் விவேகானந்தர் தெரிவித்திருந்தார். 

ஆன்மீகத்தில் அளவற்ற நாட்டம் கொண்டிருந்த நஞ்சுண்டராவின் உள்ளம் ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தது. அந்நிலையில் தான் அவருக்கு அம்மாவின் தரிசனம் கிடைத்தது. அம்மாவை ஆரம்பத்தில் ஒரு சாதாரணப் பெண்மணியாகவே அவர் கருதினார். பின்னரே அவரது தவநிலையை உணர்ந்து கொண்டு அம்மாவின் சீடரானார். அம்மாவைத் தங்கள் குடும்பத்துள் ஒருவராகவே கருதியவர் அவருடன் காசி உட்பட பல இடங்களுக்கும் தல யாத்திரை சென்று வந்தார். 

பின் அம்மாவுடன் திருவண்ணாமலை சென்ற டாக்டர் நஞ்சுண்ட ராவ், அப்போது விருபாக்ஷி குகையில் தங்கியிருந்த பகவான் ரமணரையும் தரிசித்து ஆசி பெற்றார். (தேவராஜ முதலியாரின் ‘அனுதினமும் பகவானுடன்’ / 17-03-1946 நாட்குறிப்பு)  அம்மா அனுதினமும் சிவ பூஜையும் ஸ்ரீ சக்ர பூஜையும் செய்து வந்தார். அதனால் அவரது இயற்பெயரான அனந்தாம்பாள் என்பது மறைந்து ’அம்மா’ என்றும் சக்கரத்தம்மாள் என்றும் அன்புடன் அழைக்கப்படலானார்.

 தம்மை நாடி வந்தவர்களுக்கு அன்பு, அடக்கம், கருணை, இரக்கம், பக்தி ஆகியவற்றை உபதேசித்தார். “பிரம்மம் ஒன்றே சத்தியம். அந்த பிரம்மத்தை உணர்வதே ஆனந்தம். எல்லாம் அகண்ட பரிபூரண சச்சிதானந்த பரபிரம்மத்தின் ஸ்வரூபமே. நமக்கு அந்நியமாய் எதுவுமே இல்லை. எல்லாம் இறைவனே! அவனே நம்மை ஆட்டுவிக்கிறான். பக்தியுடன் அவன் தாள் பணிவதே மனிதப் பிறவியின் பயன்பாடு” என்றெல்லாம் அவர் உபதேசித்ததைக் கேட்ட மக்கள் பலரும் அவரை நாடி வந்து பணிந்தனர். 

பரிபூரண ஞானநிலை அடைந்த அம்மா, அவ்வப்பொழுது நீடித்த யோக சமாதியில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. அன்பர்கள் காரணம் கேட்டால், தாம் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷிளோடு உரையாடி விட்டு வந்ததாகவும், சேஷாத்ரி சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு வந்ததாகவும் கூறுவார். அதுதவிரப் பல்வேறு சித்துக்களும் அம்மா கைவரப் பெற்றிருந்தார்.
அம்மாவின் சித்தாற்றல் பற்றி தனது ’உள்ளொளி’ (மணிவாசகர் பதிப்பகம், தமிழ் மண் பதிப்பகம்) என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.

“சென்னை கோமளீசுவரன் பேட்டையில் ஓர் அம்மையார் இருந்தார். அவர் காலஞ்சென்ற டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்று உலகம் சொல்லும். அவ்வம்மையார் பறவையைப் போல வானத்தில் பறப்பர். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் மேல்மாடியில் பறந்துவந்து நின்றனர். மானுடம் பறக்கிறதெனில் உலகம் அதை எப்படி வியக்குமென்று சொல்ல வேண்டுவதில்லை. அக்காலத்தில் சென்னையில் வதிந்த விஞ்ஞானியர் பலர் சூழ்ந்து சூழ்ந்து அம்மையார் நிலையை ஆராய்வர். அப்பொழுது சென்னை மியூஸியத் தலைவராயிருந்த ஓர் ஐரோப்பியரால் பறவையார் நிலை பெரிதும் ஆராயப்பட்டது. அம்மையார் பறவை இனத்தைச் சேர்ந்தவரென்றும், அவரிடம் பறவைக்குரிய கருவி கரண அமைப்புகள் சில உள்ளன என்றும், கூர்தல் (Evolution) அறப்படி அத்தகையப் பிறவி இயற்கையில் அமைதல் கூடும் என்றும் அவரால் விளக்கப்பட்டன. அவர் விளக்கம் மற்றவரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. யான் ‘தேசபக்தன்’ ஆசிரியனாகியபோது டாக்டர் நஞ்சுண்டராவிடம் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. பறவையாரைப் பற்றி அவரை நான் விசாரித்தேன். அவர், ‘அம்மையார் சித்தரினத்தில் சேர்ந்தவர்’ என்று கூறினர். பறவை நாயகியார் நிலை மனோதத்துவத்துக்கு எட்டுவதா? உன்னிப் பாருங்கள்”.

பரிபக்குவம் பெற்ற ஞானிகள், சித்தர்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியும். அந்த வகையில் தான் பெற்ற ‘இலகிமா’ என்ற சித்தின் மூலம், தனது உடல் எடையைக் காற்றை விட எடைகுறைந்ததாய் மாற்றிக் கொண்டு, வானத்தில் பறந்திருக்கிறார் அம்மா என்றே நாம் அனுமானிக்க முடிகிறது.

ஞானிகளாகவும், மகான்களாகவும் இருப்பவர்கள் காலம், இடம், தூரம் போன்ற எல்லா எல்லைகளையும், நான், எனது போன்ற குறுகிய நோக்கங்களையும் கடந்தவர்கள். எல்லாம் பிரம்மத்தின் சொரூபமே; எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் அவர்கள். ஆனால் அப்படிப்பட்ட மகான்களின் ஆற்றல்களையும், அருள் உபதேசங்களையும் புரிந்து கொள்ள இயலாதவர்கள் அவற்றைப் பொய் என்றும், மூட நம்பிக்கை என்றும் புறந்தள்ளி விடுகின்றனர். 

பகுத்தறிவால் நம்ப முடியாத எதுவும், விஞ்ஞான அளவுகோலுக்கு மாறான எதுவும் கற்பனையானதாகவும், நம்ப முடியாத ஒன்றாகவும் கருதப்படுகிறது. ஆனால் தனது அறிவிற்கு அப்பாற்பட்ட எதுவுமே இருக்க முடியாது என்று எண்ணுவதே உண்மையில் அறியாமையும் மூடநம்பிக்கையுமாகும். ’தான், தனது’ என்ற அகந்தை இருக்கும்வரை மெய்ஞ்ஞானம் சித்திக்காது. உண்மையை அறிந்து கொள்ளவும் இயலாது.

இவ்வாறு பல்வேறு ஆற்றல்கள் பெற்றிருந்த அம்மா, 1901ம் ஆண்டு, பிப்ரவரி 28ம் நாள், இறை ஜோதியில் ஐக்கியமானார். சீடர் நஞ்சுண்டராவால் சென்னை திருவான்மியூரில், கலாக்ஷேத்ரா அருகே அம்மாவுக்கு ஓர் அழகிய சமாதி ஆலயம் எழுப்பப்பட்டது. 

ஒருமுறை தம்மைச் சந்தித்த நஞ்சுண்டராவிடம் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள், அம்மாவின் சமாதி ஆலயம் ஒரு மகத்தான் சக்தி பீடம் என்றும், தவறாமல் பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

அதன்படி டாக்டர் நஞ்சுண்டராவ் அமைத்த டிரஸ்டின் மூலம் சிறப்பான முறையில் இங்கு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மாசி மாதத் திருவாதிரை தினத்தன்று அம்மாவின் குருபூஜை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

பெண்கள் மெய்ஞ்ஞானம் பெறத் தகுதியானவர்களே என்று வாழ்ந்து காட்டிய மகா தபஸ்வினி ஸ்ரீ சக்கரத்தம்மாளின் ஞான வாழ்க்கை புனிதமானது. என்றும் நினைந்து போற்றத்தக்கது.

நன்றி : திரு . பி. எஸ். ரமணன்.