Tuesday, November 15, 2011

யோகி ராம்சுரத்குமார் - என் அப்பன் உங்களை ஆசீர்வதிக்கிறார்..!

மகான் யோகி ராம் சுரத்குமாரைப் பற்றிய அறிமுகம் , நமது வாசகர்களுக்கு தேவைப் படாது என்று நினைக்கிறேன். எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் , தனது குருவைப் பற்றி எழுதிய ஒரு சிறிய கட்டுரையை , நம் வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.

படிக்கும்போதே சில வரிகளில் உங்களுக்கு , சில உயர்ந்த விஷயங்கள் புரிபடும்... படித்துப் பாருங்கள்...!




திருவண்ணாமலை வந்த காசி மகான்!
கங்கைக் கரையோரம் இருந்தது, அந்தப் பையனின் வீடு. பள்ளி நேரம் போக மீதி நேரங்களில், அந்தப் பையன் கங்கைக் கரையோரம் நடக்கின்ற சாதுக்களுக்குப் பின்னே ஓடுவான். அவர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசுகிற போது, அவர்கள் பேசுவதைக் கேட்பான். இரவு முழுவதும் அவர்கள் கடவுளைப் பற்றிய விஷயங்களை விவாதம் செய்வார்கள்.
விளைவு- மிகச் சிறு வயதிலேயே அந்தப் பையனின் உள்ளத்தில் கடவுள் தேடுதல் என்ற விதை விழுந்தது. அந்தப் பையன் வீரிய வித்தாக இருந்தான். வளர்ந்து மிகப் பெரிய ஆலமரமானான். அந்த ஆலமரத்துக்கு ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று பின்னால் பெயர் வந்தது.


இயற்பெயர் ராம்சுரத்குன்வர். பள்ளிப் படிப்பில் படுகெட்டி. அவரது குடும்பம், ஒரு விவசாயக் குடும்பம். கங்கைக் கரையோரம் நல்ல விளை நிலங்கள் சொந்தமாக இருந்தன. விவசாய வேலைகள் அதிகம். ஆண்களும் பெண்களும் சேர்ந்து பாடுபட்டால்தான், அதில் லாபம் என்பது சிறிதளவு கிடைக்கும். எனவே, உழைப்புக்கு அஞ்சாத குடும்பமாக இருந்தது.ஆனால், ராம்சுரத்குன்வருக்கு படித்து பட்டம் பெறுவதில்தான் ஆர்வம். அந்தக் குடும்பத்தில் வேறு எவரும் அப்படி ஈடுபாட்டுடன் இல்லாததால், குடும்பத்தினர் ராம்சுரத்குன்வரை உற்சாகப் படுத்தினர்.

அந்த கிராமத்திலேயே மகான் ஒருவர், தனியே வசித்து, கடவுள் சிந்தனையாக இருந்தார். கிராமத்தினர் அவரிடம் நல்லது கெட்டதுக்குப் போய் பேசிவிட்டு வருவர். ராம்சுரத்குன்வரும், கடவுளைப் பற்றிய கேள்விகளை அவரிடம் வைக்க… ‘இதற்கு நான் பதில் சொல்வதைவிட, நீ காசி- விஸ்வநாதரை தரிசனம் செய்து வா, அப்போது புரியும்’ என்றார்.

காசிக்கு பயணப்பட்டார் ராம்சுரத்குன்வர். விஸ்வநாதர் கோயிலை அடைந்து கை கூப்பினார். எத்தனை மகான்கள் தரிசித்த சிவலிங்கம். எத்தனை பேர் தொட்டு பூஜித்த இறைவடிவம். எத்தனை அரசர்களும், சக்ரவர்த்திகளும், அவதார புருஷர்களும் இங்கே நுழைந்திருக்கிறார்கள்; மண்டியிட்டு தொழுதிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட புனித மான இடம்… அவருக்கு மெய்சிலிர்த்தது.

இந்தப் புண்ணிய பூமியில் நானும் கால் வைத்திருக்கிறேன். நானும் இந்த சிவலிங்கத்தைத் தொடப் போகிறேன். எனக்குள்ளே இருக்கிற இந்த மனமானது, முழுக்க இந்த சிவலிங்கத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அம்மா சொல்கின்ற அத்தனை கதைகளும் இங்கே நடந்திருக்கின்றன. இந்த இடத்திலே பல அவதார புருஷர்கள் நின்றிருக்கிறார்கள் என்ற தவிப்புடன் அந்த சிவ லிங்கத்தைத் தொட, அதிர்ச்சியாக மிகப் பெரிய மாறுதல் ஒன்று ஏற்பட்டது.
இறை தரிசனம் என்பது கடுமையான உழைப்பில், மும்முரமான முனைப்பில் வருவது அல்ல. ‘அது’வே தன்னைக் காட்டினால் ஒழிய அதைப் புரிந்து கொள்ள முடியாது. இறையே விரும்பித் தொட்டால் ஒழிய, இறை எது என்பதை அறிய முடியாது. அந்த இளம் வயதில் ராம்சுரத்குன்வருக்கு, அற்புதமான இறை தரிசனம், அவர் கேட்காமல் இறைவனால் அவருக்குத் தரப்பட்டது.

இது என்ன… இந்த அதிர்ச்சி, உள்ளுக்குள்ளே தெரிந்த வெளி, இந்த மயக்கம்… இந்தத் தவிப்பு… இந்த ஆனந்தம் என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவற்றை வார்த்தையாக்கி வேறு எவருடனும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. இங்கே… இந்த அற்புதமான கோயிலில் அந்த மூர்த்தியைத் தொட்டபோது ஒரு மிகப் பெரிய மாறுதல் ஏற்பட்டதே. அப்படி மற்ற இடங்களிலுள்ள மூர்த்திகளைத் தொடும் போதும் ஏற்படுமோ..? உள்ளுக்குள் கேள்வி எழ, ஊர் சுற்றிப் பார்க்க ஆவல் ஏற்பட்டது. ஆனால், வீட்டார் அவரை வேறுவிதமாக வளைத்தார்கள். திருமணத்துக்கு வற்புறுத்தினார்கள். கடைசியில், அவரால் மறுக்க முடியாமல் போனது.
மனைவியின் பிறந்த வீடு சுபிட்சமாக இருந்தது. எனவே, படிக்க ஆசைப்பட்ட ராம்சுரத்குன்வருக்கு மனமுவந்து உதவி செய்தது. ராம்சுரத்குன்வர் காசி சர்வ கலாசாலையில் தொடர்ந்தார். பட்டப் படிப்பு முடித்தார். படித்த ஆங்கில இலக்கியமும், அவருக்குக் கடவுள் தேடலில் அதிகம் உதவி செய்தது.

அதற்குள் சில குழந்தைகளுக்கு அவர் தந்தையானார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கவும் மனைவிக்கு உதவி செய்யவுமே வாழ்க்கையின் பெரும் பகுதி போயிற்று. ஆனால், அடி மனதில் இடையறாது காசி தேசத்தில் ஏற்பட்ட அந்த அதிர்ச்சியும், அதுபோல வேண்டுமென்ற ஆவலும், அதைத் தேடுகின்ற குணமும் இருந்தன. இன்னும் சற்று வயதான பிறகு, கடவுள் தேடலை வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வந்தது. கூடவே, கடவுள் தேடலை கடைசி வரை செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற கவலையும் இருந்தது. உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.

கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும். குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும். நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது. சரியான உறக்கத்தைக் கொடுக்காது; திடுக்கிட்டு எழ வைக்கும்; உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இதுதான்! அவர் இவை இரண்டுக்குமான வேதனையில் தவித்தார். பிரியமான மனைவி; அற்புதமான குழந்தைகள்; நல்ல மாமனார் வீடு; சுகமான தாய்- தந்தை. ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக அவருக்குத் தோன்றியது.

பட்டப் படிப்பு முடித்த ராம்சுரத்குன்வருக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. பழைய பள்ளிக் கூடம் ஒன்றை, முழுவதுமாகத் தூக்கி நிறுத்த வேண்டிய சந்தர்ப்பம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு அடிப்படையான வசதிகள் எதுவும் இல்லை. கரும்பலகையோ, மேஜையோ, நாற்காலியோ, மாணவர்கள் உட்கார்ந்து படிக்க காற்றோட்டமான இடமோ எதுவுமில்லை. விரிசல் விட்ட சுவர்கள், ஒழுகும் ஓடுகள் என்று சிதிலமாக இருந்தது. அவர் நிர்வாகத்திடம் முறையிட, ‘இது போதும்’ என்று நிர்வாகம் அலட்சியப்படுத்த, அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவித்து பையன்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார். பள்ளிக்கூடம் சரியாகும் வரை வரத் தேவையில்லை என்று கட்டளையிட்டார்.
நிர்வாகம் எகிறியது. ஆனால், இவர் விடாப்பிடியாக நின்றார். ஊர்மக்கள் ஒன்றுகூடி நிர்வாகத்திடம் பேச, ஊரும் நிர்வாகமும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடத்தை நிமிர்த்தியது. ராம்சுரத்குன்வர் போராடி வெற்றி பெற்றார். இந்த விஷயம் அவரை உற்சாகப்படுத்தியது. எந்த ஒரு விஷயத்தை வெற்றி கொள்ள வேண்டுமென்றாலும் அதை நோக்கி முனைப்பாகவும், வேகமாகவும், விடாப்பிடியாகவும், உண்மையோடும், உறுதியோடும் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. இதைத்தான் கடவுள் தேடலிலும் கைக்கொள்ள வேண்டும் என்று அவர் புரிந்து கொண்டார்.

பள்ளிக்கூடம் நடக்கத் துவங் கியது. சிறிய வருமானம்; ஆனாலும், வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. சிறிது காசு சேர்த்தால், கோடை விடுமுறையில் ஊர் சுற்றலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது.

தெற்கே சாதுக்களும், மகான்களும் அதிகம்… அப்படிப் போவதுதான் நல்லது என்று உணர்த்தப்பட்டது. திருவண்ணாமலை… பகவான் ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீஅரவிந்தர் என்ற பெயர்கள் அவருக்குச் சொல்லப்பட்டன. அவ்வாறே, தெற்கே போக ரயில் ஏறினார். டிக்கெட்டையும் பணப்பையையும் பத்திரமாக வைத்துக் கொண்டார். ஆனால், மூன்று ரயில் நிலையங்கள் தாண்டுவதற்குள் டிக்கெட்டும் பணப்பையும் காணாமல் போயின! பதறிப் போய் நான்காவது ரயில் நிலையத்தில் கீழிறங்கினார்.

என்ன செய்வது? ரமண மகரிஷியைத் தேடிப் போவதா… அரவிந்தரை நோக்கிப் போவதா… மௌனமாக வீடு திரும்புவதா? ஆரம்பித்த காரியம் சுணங்குகிறதே. ஏன் இப்படி? கடவுள் தேடலை கடவுளே விரும்பவில்லையோ..?
தயங்கினார்; குழம்பினார்.

எது தடுத்தாலும், எவர் தடுத்தாலும் ஸ்ரீரமணரை நோக்கிப் போவேன் என்ற பிடிவாதம், வைராக்கியம் உள்ளே ஏற்பட்டது. ஆனால், டிக்கெட் இல்லாமல் பயணிக்க விரும்பவில்லை. அங்கு உள்ள பள்ளிக்கூடத்துக்குப் போய், ஆசிரியரிடம் கை கூப்பினார். தனது நிலைமையைச் சொன்னார்.
ஆசிரியர் அவரை மாணவர் களுக்கு அறிமுகப்படுத்த, அந்த மாணவர்கள் எதிரே ஆசிரியர் ராம்சுரத்குன்வர் கைகூப்பி, தன் நிலையைச் சொல்லி, பள்ளி மாணவர்கள் உதவினால் அதை வைத்து, பயணச்சீட்டு வாங்கி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். மாணவர்கள் காலணா, அரையணா, இரண்டணா கொடுத்து அவரை ரயிலேற்றி அனுப்பினார்கள்.
யார் கையேந்திக் கேட்கிறார்களோ, அவர்களுக்கே கடவுள் தன்மை இடப்படும். எனவே, கையேந்திக் கேட்கின்ற பணிவை முதலில் கொள்ள வேண்டும். தான் ‘ஆசிரியர்’ என்ற அகந்தையைத் தூக்கி எறிந்து, அந்த மாணவர்களிடம் மெள்ள கை கூப்பிக் கெஞ்சிய ராம்சுரத்குன்வருக்கு புதிய பாதை திறந்தது.

கடவுள் தேடுதலுக்கு முதல் படியான கர்வம் அழித்தல் அங்கே தானாக, இயல்பாக நடந்தது. ஆசிரியர் என்ற அலட்டலில் இருந்து விடுபட்டு, யாரிடம் அவர் அதிகாரம் செலுத்த முடியுமோ அந்த மாணவர்கள் கொடுத்த காசைக் கொண்டே தன் கடவுள் தேடலைத் தொடர்ந்தார். ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது…

ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக அமைந்தது. இவரே! இவரே! இவரே என் குரு என்ற மிகப் பெரிய கேவல் எழுந்தது. அதே நேரம் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச் சேரியை நோக்கி பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார்.
ஊருக்குப் போக எண்ணம் எழுந்தது. மறுபடியும் ரயில் ஏறினார். மீண்டும் இல் வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கிறதே என்ற கலக்கம். கடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போக முடியும். வெளியே கடவுள் இல்லை; உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப் பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார். அதே நேரம் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்; பாண்டிச்சேரியில் அரவிந்தர் மறைந்தார் என்பது தெரிய வர, இடிந்து போனார். அற்புதமான இரண்டு ஞானிகளுடன் நெருங்கி இல்லாமல், மறுபடியும் குடும்ப பாரம் இழுக்க வந்தேனே… என்று கவலைப்பட்டார்.
அப்போது பப்பா ராம்தாஸ் என்ற பெயர் காதில் விழுந்தது. மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு என்ற இடத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவரை இழக்க விரும்பவில்லை. எனவே ராமதாஸை நோக்கி விடுமுறையில் பயணம் துவங்கினார். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா ராமதாஸ் அவருக்கு ராம நாமம் உபதேசித்தார். ”இடையறாது ராம நாமம் சொல்” என்றார். ராம்சுரத்குன்வர் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம் அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி விகசித்துப் பொங்கியது. உடுப்பதும் உண்பதும்கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக இருந்தது.

உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட முடியவில்லை; எதுவும்புலப்பட வில்லை. அவர் தன்வசம் இழந்தவராக, சின்மயமான வராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது வாழ்க்கையில் இந்த நிலை பித்து என்று வர்ணிக்கப்படும். பைத்தியக்காரன் என்ற பட்டப்பெயர் கிடைக்கும். ராம்சுரத்குன்வருக்கும் இப்படி பட்டப்பெயர் கிடைத்தது. அதனால், ராம்சுரத்குன்வர் ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக வெளியேற்றப்பட்டார்.

உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாகப் பார்த்தது. மனைவி கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் உன்மத்தம் அதிகமானது. கிராமத்தின் மரத்தடி களில் அமர்ந்து வேலைக்கு போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமமே சொல்லிக் கொண்டிருந்தார். தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.

உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் விஷயம். தன்னை உணர முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற நினைப்பு இல்லை. இந்த உலகாயத மான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர் தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப் பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த ‘தான்’ என்பதை அனுபவிக்கிற போது வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை. இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது. மிகப் பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தை விட்டு மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.

திருவண்ணாமலைக்கு வந்து இறங்கினார். அங்கு ஒரு புன்னை மரத்தடியில் இடையறாது இறை நாமம் சொல்லி வந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை நோக்கிப் போகவே இல்லை. கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு உறுதியாயிற்று.

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைந்து திரிந்து, வருவோர் போவோரிடம் யாசகம் கேட்டு உணவருந்தி ஒன்றுமில்லாத போது பட்டினி கிடந்து, வெயிலிலும் மழையிலும் நனைந்து, திருவண்ணாமலையையே வியப்புறப் பார்த்து ஞானியாக வாழ்ந்து வந்தார் ராம்சுரத்குன்வர். அவருடைய உள்ளளி மேலும் மேலும் பெருகி கடவுளின் அண்மை அவருக்குள் ஏற்பட்டது. கடவுள் தன்மை அவருக்குள் இறங்கியது. ராம்சுரத்குன்வர் திருவண்ணாமலையில் யோகி ராம்சுரத்குமார் என்று மாறினார்.

தங்க நாணய மயமான சிரிப்பு… தன்னைத் தெரிந்த ஒருவருக்கே அப்படி ஒரு கிண்கிணியாய் சிரிக்க முடியும். புரிந்து கொண்டு சில நண்பர்கள் அவரை தினசரி தரிசித்தார்கள். ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும், திருவண்ணாமலை வலம் வரும்போது அவரை யதேச்சையாக சந்தித்து அந்தக் கண்களுடைய தீட்சண்யத்தைக் கண்டு வியந்து, அவர் கால் பற்றி அவரைப் பின்தொடர்ந்தார்கள். கடவுளைப் பற்றி விவாதித்தார்கள். வாழ்க்கையைப் பற்றி யோசித்தார்கள். மேலைநாட்டினர் அதிகம் வந்ததால் அவரைப் பற்றிய விவரங்கள் உள்ளூரில் தெரிய வந்தன.

புன்னை மரத்துக்கருகே ஒரு கிணறு. அதில் இரவில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை விழுந்துவிட்டது. மேலே ஏற பலத்த முயற்சிகள் செய்தது. அருகே போய் அதை கயிறு கட்டித் தூக்கிவிட எவராலும் இயலவில்லை. யோகி ராம்சுரத்குமார் சிறிது நேரம் காத்திருந்தார்.

பிறகு எல்லோரையும் விலகிப் போகச் சொன்னார். குதிரையை உற்றுப் பார்த்தார். குதிரை அவரைப் பார்த்தது. குதிரையின் உள்ளுக்குள் தன் கவனத்தை செலுத்தினார். குதிரையின் உடம்புக்குள் சக்தி ஏறியது. தாண்டுவதற்குண்டான உத்வேகத்தை தன் மனதின் மூலமாக குதிரையின் மனதுக்குள் செலுத்தினார். குதிரை தயாராக இருந்தது. ‘ஜெய் ராம்’ என்று ஒரு முறை உரக்கக் கத்தினார். குதிரை ஒரே துள்ளலில் கரையேறி ஓடிப் போயிற்று. அருகிலிருந்தவர்கள் வியந்தார்கள்.

இது எப்படி சாத்தியம்..? கேட்டார்கள். ”இந்தப் பெயரைச் சொன்னால் போதும்… எல்லாவற்றையும் கரையேற்றும்” என்றார். அன்று முதல் ராமநாமம் சொல்கிறவராக, ராமநாமத்தைப் பரப்புகின்றவராக அவர் அறியப்பட்டார்.
அவர் கையில் எப்போதும் வெப்பத்தை தணிக்க ஒரு விசிறி. உணவு வாங்க ஒரு கொட்டாங்கச்சி. கையிலே சிறு கோல். இவற்றை வைத்து, அவருக்கு ‘விசிறி சாமியார்’ என்ற பெயரும் கிடைத்தது. ஆனால், அவர் தன்னை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று கூப்பிடுவதையே விரும்பினார். ‘ஏன்?’ என்று கேட்டபோது ”கடவுள் உலகத்துக்கு அளித்த கொடை ‘யோகி ராம்சுரத்குமார்’ என்ற பெயர். இந்தப் பெயரை எவர் உச்சரிக்கிறாரோ, எவர் மனதார சொல்கிறாரோ, அவருக்கு என் தகப்பன், அதாவது கடவுள் உதவி செய்கிறார்” என்பார்.

இது எவ்வளவு உண்மை என்பது, பலரது அனுபவத்திலிருந்து தெரிந்தது.
கணவன் – மனைவிக்குள் சண்டை! மனைவியைக் கண்டபடி கணவன் ஏச, மனைவி ‘உங்களோடு வாழ்வதற்குப் பதிலாக செத்துப் போகலாம்’ என்றார்! ‘ரொம்ப நல்லது. செத்துப் போ. நானே உனக்கு விஷம் கொடுக்கிறேன்’ என்று, ஒரு குப்பி நிறைய விஷம் கொடுத்தான் கணவன்.

அந்த விஷத்தை ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’, ‘யோகி ராம்சுரத்குமார்’ என்று மூன்று முறை சொல்லி, மட மடவென்று அவள் குடித்தாள்.
என்னாயிற்று..? எதுவும் ஆகவில்லை. விஷம் வேலை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து யோகியிடம் வந்தாள் அந்தப் பெண்மணி…

”பகவான்… உங்கள் பெயரைச் சொல்லி விஷம் குடித்தேன். வேலை செய்யவில்லை. மாறாக, என் கணவர் தன் மீது கொலைப் பழி விழுந்து விடுமோ என்று பயந்தார். நான் உங்கள் பெயரைச் சொல்லி விஷம் குடித்ததும், விஷம் வேலை செய்யாததும் கண்டு திகைத்து மன்னிப்பு கேட்டார். அவரும் வந்திருக்கிறார்- உங்களுடைய பக்தராக!” என்றாள். அந்தக் குடும்பம் அதற்குப் பிறகு வெகு சௌக்கியமாக வாழ்ந்தது.

பக்தர்கள் சேர்ந்து திருவண்ணாமலை சந்நிதித் தெருவில் யோகிக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுத்தார்கள். திருவண்ணாமலை சுற்றியுள்ள வியாபாரிகள் அவரை நேசித்தார்கள். இரண்டு பழம் அவருக்குக் கொடுத்தால் போதும்… வாங்கிய பழம் எல்லாம் விற்றுப் போகும். அவருக்கு இரண்டு பன்னும், ஒரு கப் டீயும் கொடுத்தால் போதும்… அங்கே வியாபாரம் அமோகமாக நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கிரிவலம் வரும் போது, ‘வந்தே மாதரம்’ என்றும், ‘பாரத் மாதா கி ஜேய்’ என்றும், ‘ராம ராம ராம’ என்றும், ‘ஓம் ஸ்ரீராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்’ என்றும் முழக்கங்கள் செய்து கொண்டிருப்பார்.

ஒரு நண்பர், திருப்பதிக்குப் போகும் வழியில் திருவண்ணாமலை திரும்பி, ‘யோகி ராம்சுரத்குமாரை தரிசித்துவிட்டுப் போகலாம்’ என்று வந்தார். தான் திருப்பதிக்குப் போகின்ற விஷயத்தை அவரிடம் சொன்னார். ‘திருப்பதிக்குப் போக வேண்டுமா..? இங்கேயே இருக்கலாமே’ என்று பகவான் சொல்ல, அவர் மறுத்து, ஏற்பாடுகள் செய்து விட்டதாகவும், போயே ஆக வேண்டும் என்றும் விளக்கினார். பகவான் ‘சரி’யென்று சொல்லி, ”வேங்கடாசலபதியைப் பார்க்கிறபோது, ‘இந்தப் பிச்சைக்காரன் யார்’ என்பதைக் கேளுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். அந்த அன்பரும், திருமலைக்குப் போனார். பெருமாளை தரிசித்ததும், யோகி ராம்சுரத்குமார் கேட்டது ஞாபகம் வந்தது.

”பெருமாளே… திருவண்ணாமலையில் இருக்கும் யோகி ராம்சுரத்குமார் யார்?” என்று உரக்க வினவினார்.
”நேனே” என்று கருவறையிலிருந்து பதில் வந்தது. மறுபடியும் கேட்க, மறுபடியும் அதே பதில். திருவண்ணாமலைக்கு வந்து, பகவானிடம் இந்த விஷயத்தைச் சொல்ல, பகவான் தங்க நாணயங்கள் இறைத்தது போல உரக்கச் சிரித்தார். கடவுளும், எல்லாம் கடந்த ஞானியும் ஒன்று என்பது தெளிவாகப் புரிந்தது.

இந்தக் கட்டுரையாளனுக்கு யோகி ராம்சுரத்குமாரை சந்திக்கின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டபோது… தான் எழுத்தாளன் என்றும், பல நாவல்கள் எழுதியிருப்பதாகவும், தனக்கு நல்ல வாசகர் வட்டம் இருப்பதாகவும் சொல்லிக்கொள்ள ஆசை. ஒரு டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம் பார்த்ததால் ஏதேனும் கொடுத்து ஏதேனும் வாங்குகின்ற புத்தி. பரிசுப் பொருட்களை அள்ளிக் கொண்டு போய் கொடுத்தால் அவர் மகிழ்ந்துபோய் தன்னிடம் பேசுவார் என்ற ஒரு கணக்கு…
அவன் பலதும் வாங்கிக் கொண்டு, அங்கே அவற்றைப் பரப்பினான். அவை மறுபடியும் அவன் பையிற்கே போயின. முதல் சந்திப்பில் தன்னை முன்னிலைப்படுத்த முயன்றபோது, இந்தக் கட்டுரையாளன் புறக்கணிக்கப்பட்டு பின்னே தள்ளப்பட்டான். வீடு வந்த பிறகே, தான் விழுந்து வணங்கக்கூட இல்லை என்பது இவனுக்குப் புரிந்தது.

வணக்கமற்ற மனிதரிடத்தில் குரு மீது அன்பிருக்காது. தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்ற மனிதரிடத்தில் மற்றவருக்கு மரியாதை செய்யும் குணம் இருக்காது. பரிசுப் பொருட்களைக் கொடுத்து, வேண்டியதை வாங்கிவிடலாம் என்கிற தந்திரம் இருப்பின் ஞானியிடமிருந்து எதுவும் கிடைக்காது. இது புரிந்தவுடனே அந்த எழுத்தாளன் மாறிப் போனான்.

மறுபடியும் அவரை சந்திக்கும் போது, முற்றிலும் ஒரு புது மனிதனாக, ”யோக்யதை இருந்தால் கூப்பிடுங்கள். எனக்கு யோக்யதை இருந்தால் பேசுங்கள். எனக்கு யோக்யதை இருந்தால் கற்றுக் கொடுங்கள்” என்று உள்ளுக்குள் நினைத்தபடி கை கூப்ப, அந்தக் கதவு திறந்தது.

‘உனக்கு என்ன வேண்டும்..?’
‘என் நண்பர்கள் பலருக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், அடிமனதில் கடவுள் இருக்கிறாரோ என்ற எண்ணம் இருக்கிறது. எனக்கோ கடவுள் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், கடவுள் இல்லையோ என்ற சந்தேகம் இருக்கிறது. தயவுசெய்து கடவுள் இருக்கிறாரா இல்லையா? கடவுளை எனக்கு காட்டினீர்களானால் நலமாக இருக்கும்’ என்றான் பணிவாக!


அவர் பதறினார். ‘இந்த நண்பர் கடவுளைக் காட்டும்படி கேட்கிறார். இந்தப் பிச்சைக்காரனால் முடியுமா!’ என்று சொல்லி, அந்த எழுத்தாளனுடைய முதுகைத் தடவி, பிடரியைத் தடவி அணைத்துக் கொண்டார்.
எழுத்தாளனுக்குள் படர்ந்திருந்த அன்பு இறுக்கமாயிற்று. முதுகிலிருந்து பீறிட்டு எழுந்த ஒரு சக்தி அவன் நெஞ்சைத் தாக்கியது.

வலது கையை உயர விரித்து, இடது கையை தாமரையாக்கி நெஞ்சுக்கருகே வைத்து, மிகப் பெரிய குரலெடுத்துக் கதறினான். உள்ளுக்குள் பெரும் மாற்றங்கள். அறுகோண முக்கோணங்கள் தெரிந்தன. எழுத்துகள் தோன்றின. அதைப் பிளந்து இன்னும் முன்னேறி நீலமயமாக மாறியது. நீலமயத்திலிருந்து வேறு இடத்தை நோக்கி அவன் வெகு வேகமாகப் பயணப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் உடம்பு ஆடாமல் இருந்தது. உள்ளுக்குள்ளே இருக்கின்ற ஒரு மனம் வேகமாகப் பயணப்பட்டது. ஆக, உடம்பு வேறு, உள்ளுக்குள் இருப்பது வேறு என்பது அந்த எழுத்தாளனுக்குப் புரிந்தது.

ஞானியிடம் என்ன கேட்பது..? நம் எல்லோரிடமும் மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், அந்தப் பட்டியல் முக்கியமல்ல. உன்னைத் தெரிந்து கொள்வதே, உன்னை அறிவதே, கடவுளைத் தெரிவதே முக்கியம் என்பதை அந்த எழுத்தாளனுக்கு மிக சூட்சுமமாக விளக்கினார். எழுத்தாளன் புரிந்து கொண்டதும் அவன் உள்ளளியைப் பெருக்கி, இறை தரிசனமும் காட்டினார்.
யோகி ராம்சுரத்குமார்… 20 பிப்ரவரி 2001-ல் முக்தி அடைந்தார். ஆனாலும், அவர் திருவண்ணாமலையில் இருந்தபடி உலகமெங்கிலுமுள்ள பக்தர்களின் உள்ளத்தில் வீற்றிருந்தபடி இடையறாது இடையறாது நற்செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார். நல்லவர்களை வாழ்த்திக் கொண்டிருக்கிறார். தன்னை அண்டியவருக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.

திருவண்ணாமலை செங்கம் ரோடில் ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடு அற்புதமாக நடக்கிறது.

‘யோகி ராம்சுரத்குமார்! யோகி ராம்சுரத்குமார்! யோகி ராம்சுரத்குமார் என்று மூன்று முறை அழைத்தால் போதும். இந்தப் பிச்சைக்காரன் நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்னை இருந்தாலும் நிச்சயமாக வந்து உதவி செய்வான்’ என்று அந்த மகான் சத்தியம் செய்திருக்கிறார். அது இன்றளவும் அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.
நீங்களும் மனம் ஒருமித்து அவர் பெயரைக் கூப்பிடுங்கள்; உங்களுக்கும் நல்லது நடக்கும்!

Wednesday, November 9, 2011

சர்க்கரை நோய்--இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது

புதிய மருத்துவ வணிகத்துக்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது சர்க்கரை நோய்! 

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகமும் இந்தியா டயாபெடிக்ஸ் அமைப்பும் இணைந்து நடத்திய மாதிரி ஆய்வின்படி இந்தியாவில் நிகழாண்டில் 6.2 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். அடுத்து சர்க்கரை நோய்க்கு இலக்காகக்கூடிய எல்லைக்கோட்டில் நிற்போர் 7.7 கோடி பேர்.உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி உலகம் முழுவதும் 220 மில்லியன் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.

இவர்களில் 50.8 மில்லியன் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.இந்தப் புள்ளிவிவரங்கள் முழுமையானவை அல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் எடுத்த மாதிரிச் சான்றுகள் அடிப்படையில் மொத்த மக்கள்தொகைக்கும் பொருத்திப் பார்க்கும் முறையைக் கொண்டவை. இதில் மிகைப்படுத்தல் தவிர்க்க முடியாதது. அதற்காக இவை முழுக்க முழுக்கப் பொய்யான தகவல் என்று ஒதுக்கிவிடவும் முடியாது. 

இந்தியா என்றாலே மக்கள் தொகை அதிகம், விழிப்புணர்வு குறைவு என்பதால், கொஞ்சம் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்வதென்பது, இத்தகைய ஆய்வுகளில் அவர்களாகவே அனுமதி எடுத்துக்கொள்கிற விஷயமாக இருக்கின்றது. இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் இவற்றின் தாக்கம் மிக வேகமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது உண்மை. 

இதற்கு அடிப்படைக் காரணம் இந்தியர்களின் வாழ்க்கை முறை மாறிவிட்டது. உணவுப்பழக்கம் முன்புபோல இல்லை. மனஅழுத்தமும், மனச்சோர்வும் நடுத்தர மக்களிடம் குடிகொண்டுவிட்ட நோய்களாகவே மாறிவிட்டன. 

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாகப் பெருகி வருவதைப் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருத்துவமனைகள் வரிந்துகட்டி நிற்கும் அதேநேரத்தில், வெளிநாட்டு மருத்துவமனைகளும் இந்திய மருத்துவமனைகளோடு இணைந்து சிறப்பு சர்க்கரை நோய் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மையங்களைத் திறக்கத் தொடங்கிவிட்டன. 

ஆனால், மத்திய அரசு இன்னும் விழித்துக்கொண்டு இதற்கான நடவடிக்கைகளில் வேகமாக இறங்கவில்லையே என்பதுதான் வருத்தமளிக்கிறது.இந்தியாவில் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகமாகியிருப்பதால் மேலதிகமாக பாதிக்கப்படப்போவது யார் என்றால், முதியோர்களும் பெண்களும் மட்டுமே. இந்தியாவில் சர்க்கரை நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 10.07 லட்சம் பேர்களாக இருந்தால், இதில் 5.81 லட்சம் பேர் பெண்களாக இருக்கிறார்கள். 

சர்க்கரை நோயாளிகளில் 60 விழுக்காட்டினர் தங்களுக்கான மருத்துவச் செலவை தங்கள் வருங்காலச் சேமிப்புத் தொகையிலிருந்துதான் செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு வேறு வருவாயோ அல்லது மருத்துவக் காப்பீடோ இல்லை. இதிலும் பெண்கள்தான் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.அரசின் கணக்கெடுப்பின்படி சர்க்கரை நோயாளி ஓர் ஆண்டுக்கு சுமார் ரூ. 26,000 மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்காக செலவிடுகிறார். அதாவது மாதம் குறைந்தபட்சம் ரூ. 2,000 செலவிட வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு முதியவருக்கு இந்த அளவுக்கான பணம் ஓய்வூதியத்தில் பெரும் பகுதி என்பதும், இதன் பிறகு அவர் எந்தத் தொகையை வைத்து வாழ்க்கை நடத்துவார் என்பதும் நினைத்துப் பார்க்கவே சங்கடமானது.

இதையும்விட சங்கடமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோயாளிகளுக்குத் தொடர் நோய்களாக விழித்திரை பாதிப்பால் பார்வை பறிபோதல், கால் நரம்புகள் செயலிழப்பதால் கால்கள் வெட்டியெடுக்கப்படுதல், ரத்தத்தின் மிகை சர்க்கரையைத் தொடர்ச்சியாக வெளியேற்றும் சிறுநீரகம் விரைந்து கெட்டுப்போதல் என்று பல பிரச்னைகளை முதியோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இத்தகைய மோசமான சூழ்நிலை ஏற்படாமல் சற்று தணிவான சூழலை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு மத்திய அரசு செய்ய வேண்டியது, இலவச சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்கள், இலவச ஆய்வுக்கூட வசதி ஆகியவற்றை முதற்கட்டமாக நாடு முழுவதும் அறிமுகம் செய்ய வேண்டியது இன்றியமையாதது.

அண்மையில், இந்திய மருத்துவ ஆய்வுக் குழுமத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், சர்க்கரை நோய் பரிசோதனை அட்டைகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார். சர்க்கரை அளவைப் பரிசோதிக்கும் அட்டைகள் தயாரிப்பில் பல்வேறு பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றின் விலை அதிகம். 

சிறுநீரில் சர்க்கரை அளவை நோயாளிகளே கணக்கிடுவதற்கும், ரத்தத் துளியை அட்டையில் தடவியதும் சர்க்கரை அளவை அறியும் கருவிகளும் பல்வேறு நிறுவனங்களால் அறிமுகம் செய்யப்பட்டாலும் இவற்றின் விலை அதிகமாகவே உள்ளது. மிக மலிவான விலையில், தரமான அட்டைகளை இந்திய நிறுவனங்களே உருவாக்கும் சூழ்நிலை ஏற்படுமானால் சர்க்கரை நோயாளிகளின் மருத்துவச் செலவு பாதியாகக் குறையும் என்பது உறுதி.

எளிய மூலிகைகளால் ஒருவர் தன் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது என்றால் அதை ஊக்கப்படுத்தவும், சர்க்கரை அளவை அறியும் கருவிகள் பயன்பாட்டுக்கு மட்டும் ஆங்கில முறையைப் பயன்படுத்திக்கொள்ளச் செய்வதும் ஒரு நோயாளிக்குச் செய்யும் பேருதவி.

சில நோய்களுக்கு சித்த, ஆயுர்வேத மருந்துகளுடன், அலோபதி மருத்துவ ஆய்வுக்கருவிகள் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை உள்ளது.எந்தவகை மருத்துவம் என்பதல்ல முக்கியம். நோய்க்கு மருந்து எது என்பதுதான் விடையாக இருக்க முடியும். இந்தப் பிரச்னையில் அரசு மெத்தனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையான, நிலையான பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்கின்ற மனவருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

அதாவது இத்திட்டங்கள் இனிமேல் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படும்.  வேலை உறுதியளிப்பு திட்டத்தின் அடிப்படையே, விவசாயப் பணிகள் இல்லாத வெற்று நாட்களில் விவசாயிகள் வேலையில்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், அத்தகைய காலகட்டங்களில் இவர்களுக்கு அதே பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காகத்தான்.  

இத்திட்டம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சுயநல விருப்பங்களுக்காக நடத்தப்படும் திட்டமாகவும், இதில் குறைந்தபட்சம் ரூ. 100 கூலியை முழுதாகத் தராமல், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் குறைந்தபட்சம் ரூ. 25 வரை பிடித்தம் செய்து பங்குபோட்டுக் கொள்கிறார்கள் என்றும் புகார்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. 

அறுவடை உள்ளிட்ட விவசாயப் பணிகள் நடைபெற வேண்டிய நாளில் இத்தகைய திட்டத்தை அரசு எடுத்துக்கொள்ளும்போது, விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்று இத்திட்டம் குறித்து பல இடங்களில் இருந்தும் பலவாறு புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.  உத்தரப்பிரதேசத்தில் 7 மாவட்டங்களில், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் நிதி முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்த, அதற்கு அம்மாநில முதல்வர் மாயாவதி மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். 

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மாயாவதி கூறினாலும், இந்த நிதியை எந்த மாநிலமும் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.  ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களுக்குத் தரப்படும் நிதிகள் தொடர்பான தணிக்கை இதுவரை மேற்கொள்ளப்பட்டதே இல்லை. இப்போதுதான் முதல்முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. 

அதுமட்டுமன்றி, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்துள்ள பாராட்டுக்குரிய நல்ல செயல், தனது அமைச்சகத்தின் மூலம் நிதி வழங்கப்படும் குடிநீர் மற்றும் கழிப்பறைத் திட்டங்கள் குறித்தும் தலைமை கணக்கு தணிக்கையாளர் துறை ஆய்வு செய்யும் என்று அறிவித்திருப்பதுதான்.  மாநில அரசும், கிராமப் பஞ்சாயத்தும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இந்த முறைகேடுகளிலிருந்து தப்பிவிட முடியாது. 

இத்திட்டங்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக நிதிஒதுக்கீடு பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அசாம், ஆந்திரப் பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், ஒரிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் தற்போது முதல்கட்டமாக சிஏஜி தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும் இருப்பதால், மாயாவதி அச்சம் தெரிவித்திருப்பதைப்போல, வெறுமனே அரசியல் பழிவாங்கும் எண்ணம் இருப்பதாகத் தோன்றவில்லை. 

 மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஊழல் நடைபெற முக்கிய காரணமே இதில் செய்யப்படும் பணிகள் நிரந்தரமானவை இல்லை என்பதுதான். 

ஏரி, குளத்தை ஆழப்படுத்தும் பணியும், கரைகளைப் பலப்படுத்தும் பணியும் நிரந்தரமானவையாகக் கருதப்பட முடியாத பணிகள். மழைக்காலத்தில் ஏரி, குளத்தின் கரைகள் கரைந்து போகும். ஆழப்படுத்தப்பட்ட ஏரிகள் மழையில் தூர்ந்துபோகும். ஆகவே, இத்திட்டத்தில் பொய்க்கணக்கு எழுதி சம்பாதிப்பது என்பது மிக எளிதாக இருக்கிறது. கிராமத்து ஆள்களைக் கூட்டி வந்து மதியச் சாப்பாடு போட்டு, கையில் ரூ.20, 30 கொடுத்து அனுப்பி விட்டு, 50 பேர் வந்த இடத்தில் 100 பேருக்குக் கணக்கு எழுதினாலும் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. 

 இவற்றையெல்லாம் எப்படி முறையான செலவுக்கணக்கில் கொண்டுவந்தால், இந்தத் தணிக்கையை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்காக சிஏஜி அதிகாரிகள் கலந்துபேசி வருகிறார்கள். விரைவில் ஒரு பொதுவான கணக்கீட்டு முறை, பணிகள் பதிவேடு ஆகியன இத் திட்டங்களுக்கு விரைவில் உருவாக்கப்படும்.  

அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வசதிகளை நவம்பர் 30-ம் தேதிக்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் உள்ளன. விதிவிலக்காக மிகச் சில பள்ளிகள் மட்டுமே இருக்க முடியும். இதற்குக் காரணம், தமிழக அரசு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியை முழுமையாகப் பெற்றுள்ளது என்பது ஒருபுறம் இருக்க, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டன. 

ஆனால், இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார் உள்ளது.  இந்திய ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையை நோக்கி நகரத் தொடங்கி இருப்பதன் அறிகுறிதான், மத்திய அமைச்சரே தனது துறையின் கீழுள்ள ஒரு திட்டத்தைத் தணிக்கை செய்யப் பரிந்துரைத்திருப்பது. 

திட்டம் எதுவாக இருந்தாலும், சட்டம் எப்படி இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் நிர்வாகத்தின் திறமை வெளிப்படுகிறது

Saturday, November 5, 2011

கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால் கவலைப்பட வேண்டியது யார்?

கவலைக்கிடமான நிலையில் ஒரு தலைவரோ, கலைஞரோ இருந்தால் நாடே கவலைப்படுகிறது. ஆனால் கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால் கவலைப்பட வேண்டியது யார்?  அப்படி கவலைக்கிடமாக இருப்பதுகூட பரவாயில்லை, அப்படி இருக்கிறோம் என்கிற உணர்வுகூட அந்த நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தால் எப்படி?

 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானபோது மிகவும் அகமகிழ்ந்தோம். மிகச் சிறந்த நிர்வாகி, நேர்மையாளர், நடுநிலையாளர், அரசியல் கறை படாதவர் என்றெல்லாம் ஆலவட்டம் சுழற்றினோம். 
ஆட்சி நிர்வாகத்தை அவரும் கட்சி நிர்வாகத்தை சோனியாவும் பார்த்துக் கொள்ள இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து எல்லோரும் கூடிக் குலவையிட்டோம். 

 இன்றைக்கு நிலவரம் என்ன? 

காய்கறி, அரிசி, பருப்பு போன்ற அன்றாட உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் நடுத்தர, அடித்தட்டு மக்களின் விழி பிதுங்குகிறது. விலைவாசி கழுத்தை நெரிக்கிறது.  சமையல் கேஸ், டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு கூட அல்ல, பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயிக்கும் நிலைமை. வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்கிற நிலைமை மாறி, மாதாமாதம் பெட்ரோல் விலை உயர்கிறது. 

இப்படியே போனால், பங்குச் சந்தையைப்போல, தங்கம், வெள்ளி விலை நிலவரம்போல பத்திரிகைகளில் பெட்ரோல், டீசலின் அன்றாட விலையைப் போட வேண்டிய துர்பாக்கியம்கூட ஏற்படலாம்.  

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதுதான் என்று வாரத்துக்கு ஒரு முறை அறிவித்துக்கொண்டிருக்கும் சீனா நம்முடைய காஷ்மீர மாநிலத்துக்கு உள்ளேயே வந்து நம்முடைய ராணுவத்தினர் பயன்படுத்தி குளிர்காலம் என்பதால் விட்டுவிட்டு வந்த பதுங்கு குழிகளையே அழித்துவிட்டுப் போகிறது. 

 வான் எல்லை மீறி எங்கள் நாட்டுக்குள் வந்துவிட்டீர்கள் என்று கூறி நம்முடைய தரைப்படை வீரர்கள் சென்ற ஹெலிகாப்டரை பாகிஸ்தான் வான்படை வழிமறித்து அழைத்துச் செல்கிறது. இதைப்பற்றி எல்லாம் மத்திய அரசு கவலைப்பட்டு சுறுசுறுப்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?  

ஊழல் அதிகரித்து வருவது குறித்து அண்ணா ஹசாரே போன்றோர் கவலைப்படுகின்றனர்.

விலைவாசி உயர்வு குறித்து நடுத்தர மக்களும் இல்லத்தரசிகளும் கவலைப்படுகின்றனர். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து நாட்டுப் பற்றாளர்களும் மூத்த குடிமக்களும் கவலைப்படுகின்றனர். 

 தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, நிரந்தர வேலைவாய்ப்பு முறை மறைந்து ஒப்பந்தத் தொழிலாளர் முறை நிலைபெற்று வருகிறதே, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கவலைப்படுகின்றனர். 

 கிராமப்பகுதிகளில் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் விவசாய வேலைக்குப் பண்ணையாள் கிடைப்பதில்லையே என்று விவசாயிகள் கவலைப்படுகின்றனர். 

அணைகள் கட்டுதல், பாசன வாய்க்கால்கள் அமைத்தல் போன்ற பணிகளை அரசு குறைத்துக் கொண்டுவிட்டதே, குடிமராமத்தே நின்றுபோய் வெறும் கணக்கெழுதி அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் சாப்பிடும் நிலைமை வழக்கமாகிவிட்டதே என்று வேளாண் குடிகள் கவலைப்படுகின்றனர். 


 ரூபாயின் மாற்று மதிப்பு குறைந்து வருவதால் சீனா போன்ற நாடுகள் சர்வதேசச் சந்தையில் குறைந்த விலையில் பொருள்களைக் குவிப்பதால் நம்மால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லையே என்று ஏற்றுமதியாளர்கள் கவலைப்படுகின்றனர். 

 நம்முடைய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடகு வைக்கும் வகையில் அணுமின் சக்தி திட்டங்களுக்காக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமை சாசனம் எழுதித்தர வேண்டுமா என்று சுயராஜ்ய சிந்தனை உள்ளவர்கள் கவலைப்படுகின்றனர்.  

மின்னுற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகிறது, நிலக்கரி கையிருப்பும் குறைந்து வருகிறது, அணு மின்சக்தி திட்டத்தின் பின்விளைவுகள் பற்றிய அச்சத்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லையே என்று தொழில்முனைவோர் கவலைப்படுகின்றனர்.  

கல்வி நிலையங்களின் தரம் குறைந்து வருகிறது, உயர் கல்வி பெற விரும்பும் அனைவருக்கும் வாய்ப்பு தர முடியாமல் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.  

சுகாதார வசதியில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்; அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், பணியாளர்கள், டாக்டர்கள் இல்லாமல் பிறந்த குழந்தைகள்கூட உயிரிழக்கும் ஆபத்து நேரிட்டுவிட்டதே என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர். 

 வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உலக பணக்காரர்களில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்தும் வரி ஏய்ப்பு செய்தும்தான் இதில் இடம் பெற்றனர் என்ற அவமானம் என்று எத்தனையோ விஷயங்கள் கவலைக்கிடமாக இருக்கின்றன. 

 இந்த நிலையில் குப்பம்பட்டி வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா, யார் வேட்பாளர் என்று கேட்டால் கூட மத்தியக் கட்சித் தலைமையின் முடிவுக்கே விடும் காங்கிரஸ் தலைவர்களுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால், இந்த நிலைமை எப்போது மாறும் என்கிற கவலை நம்மைத் தொற்றிக் கொள்கிறது. 

 இந்த நாட்டின் தலைமை சரியில்லை, முடிவெடுக்க முடியாமல் திணறும் போக்கு நல்லதல்ல என்று விப்ரோ நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் அசீம் பிரேம்ஜி, பெங்களூருவில் கவலை தெரிவித்திருப்பது நூறு சதவீதம் நியாயமே என்று வழிமொழியத்தானே தோன்றுகிறது.

thanks - dinamani

Tuesday, November 1, 2011