Tuesday, October 25, 2011

லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது என்று அன்றாடம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்கின்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்படுவதே இல்லை. ஒரு அதிகாரி குறித்து புகார் வந்தால், அதை மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்துகிறது. 

அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், அவர் பணியாற்றும் துறையோ கடுமையான நடவடிக்கையை எடுக்காமல், ஏதோ ஒப்புக்கு நடவடிக்கை எடுக்கிறது என்பதுதான் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை தற்போது தெரிவித்துள்ள புகார்.

ஹரியாணா வனத்துறை அதிகாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து வனவிலங்குகள் சரணாலயத்துக்கு பாதகம் ஏற்படும் வகையில் தனியார் பண்ணைகளை மேம்படுத்த அனுமதி அளித்து அதன் மூலம் பல கோடி ரூபாய் பலன் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகார் குறித்து அமைச்சர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கிறார். அமைச்சரவை இலாகா மாற்றத்துக்குப் பிறகு இன்னொருவர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகிறார். அதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் அமைச்சகத் துறையிலிருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு கடிதம் வருகிறது. என்னவென்று? விசாரணை தேவையில்லை. அந்தக் கோப்புகளை முடித்துக்கொள்ளலாம் என்று.

ஜூலை மாதம் வரையிலும் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை அளித்துள்ளது. ""சில அரசுத் துறைகள் தங்கள் ஊழியர் மீது, குறிப்பாக அதிகாரிகள் மீது நாங்கள் பரிந்துரைக்கும் கடுமையான நடவடிக்கையை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றன.

சாதாரண எளிய தண்டனையாக மாற்றிவிடுகின்றன'' என்பதுதான் இந்த அறிக்கையில் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ள கசப்பான கருத்து.அதுமட்டுமல்ல, 2010-ம் ஆண்டில் 2,982 அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை தண்டித்துள்ளது. இவர்களில் 99 பேர் மட்டுமே வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது கட்டாய ஓய்வில் செல்லுமாறு துறையால் பணிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் பணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஊதிய உயர்வு ரத்து, அல்லது சில மாதங்கள் இடைநீக்கம் என்று இவர்கள் சிறு தண்டனை பெற்று மீண்டும் பணிக்கு வந்துவிடுகிறார்கள். நடப்பாண்டில் ஜூலை 2011 வரை மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திய லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடு தொடர்பான 1,681 புகார்களில் 1,263 புகார்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து அந்தந்த துறைகளுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால், தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது நீர்த்துப்போகுமா என்பது, அந்த அதிகாரி அத்துறையில் பெற்றிருக்கும் செல்வாக்கைப் பொறுத்தது அல்லது அவருக்கு மாநில, மத்திய ஆட்சியாளர்களிடம் இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்தது.

இந்த ஆண்டு அதிக தண்டனை பெற்றவர்களில் 165 பேர் ரயில்வே துறையைச் சேர்ந்தவர்கள். சுமார் 45 பேர் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்தவர்கள். 9 பேர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரசுத் துறைகளில் கைது செய்யப்பட்டோர் என்னவாகிறார்கள்? இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதே இல்லையா என்கின்ற கேள்வி எழுகிறது.ஊழியர் அமைப்புகள் கண்ணை மூடிக்கொண்டு தவறு செய்த ஊழியர்களைப் பாதுகாக்க வருவதுதான் இன்று ஊழல் அலுவலர்களை, முறைகேடு செய்வோரை, வேலையை ஒழுங்காகச் செய்யாத ஊழியரை அம்பலப்படுத்த பெரும் தடையாக இருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை. 

ஊழியர்களின் நலனைப் பேணவும் உரிமைகளைப் பாதுகாக்கவும் குரலெழுப்ப வேண்டிய ஊழியர் அமைப்புகள், தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்டு நிர்வாகம் முறையாக நடைபெற உதவவேண்டிய ஊழியர் அமைப்புகள் குற்றவாளிகளின் ஏவலாளிகளாக, ஊழல் பேர்வழிகளின் பாதுகாவலர்களாகச் செயல்படுகின்றன என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. 

இதற்கு ஒரு சிறிய உதாரணம்: அரக்கோணம் ரயில் விபத்தில், டிரைவர் செல்போனில் பேசினார் என்று கூறப்பட்டபோது, எடுத்த எடுப்பில் இப்படியொரு கருத்தைச் சொல்லக்கூடாது என்று கூறியது ஊழியர் அமைப்புதான். அவர் பேசினார் என்பது உறுதியானதுமே, அதிகாரிகள்தான் செல்போனில் எங்களைப் பணிநேரத்தில் அழைக்கிறார்கள் என்று கூறப்பட்டது. 

இப்போது, அந்த நேரத்தில் வந்த அழைப்புகள் அனைத்தும் டிரைவரின் நண்பர்களிடமிருந்துதான் என்பது உறுதியான பிறகு பேச்சே இல்லை. ரயில்வேக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, 11 பேர் இறந்துபோன சம்பவத்தின் தீவிரத்தைவிட, சக தொழிலாளியைக் காக்க வேண்டும் என்கின்ற தீவிரம்தான் இன்று இந்தியா முழுவதிலும் லஞ்சமும் முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டாலும், களையெடுக்கப்படாமலும் இருப்பதற்குக் காரணம்.

நீதிமன்றங்களால் கண்டிக்கப்பட்ட காவல்துறையினருக்கு மாநில அரசுகள் பதவி உயர்வும், விருதும் அளித்துக் கௌரவிக்கின்றனவே, இது நீதிமன்ற அவமரியாதை இல்லையா? குற்றவாளிகளுக்குக் குடை பிடிக்கும் செயல் அல்லவா? ஆட்சியாளர்களின் ஏவலாளர்களாக இருப்பதற்குத் தரப்படும் மரியாதையாக விருதுகள் மாறி விட்டிருக்கின்றனவே, இதுவேகூட ஊழலுக்கு உரமிடும் செயல்பாடு அல்லவா?

மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை அறிவிக்கும் தண்டனையை அளிக்காமல் அதை நீர்த்துப் போகச் செய்தால், அதற்காக அந்தத் துறைத் தலைவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் தள்ளக்கூடாது?ஊழலை ஒழிப்பதில் நமது ஆட்சியாளர்களுக்கு உதட்டளவு அக்கறைதான் இருக்கிறது என்பது புரிகிறது. 

ஆனால், ஊழல் பெருச்சாளிகள் என்று தெரிந்தும் அவர்களுக்கு மக்கள் மீண்டும் மீண்டும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்களே அதுதான் ஏன் என்று புரியவில்லை!
thanks - dinamani