கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடிநீர்த் தட்டுப்பாடு பற்றிய ஒரு கேள்விக்கு அரசுத் தரப்பிலிருந்து தரப்பட்ட பதிலில் ஒரு புள்ளிவிவரம் கிடைக்கிறது. அதன்படி, இந்தியாவிலுள்ள 6 லட்சம் கிராமங்களில் 1.80 லட்சம் கிராமங்களில் மிகவும் தரம் குறைந்த, உபயோகத்துக்கே தகுதியற்ற குடிநீர்தான் கிடைப்பதாக அரசே ஒத்துக் கொள்கிறது. சொல்லப்போனால், இந்தக் கிராம மக்கள் குடிநீர் என்கிற பெயரில் மெல்லக் கொல்லும் விஷத்தை அருந்துகிறார்கள்.
நாடாளுமன்றத்தில், அமைச்சர் சாதுர்யமாகச் சொல்லாமல் விட்ட தகவல் ஒன்று உண்டு. இந்தியாவின் எல்லா முக்கியமான நதிகளின் கிளை நதிகளும், பல்வேறு தொழிற்சாலைகளின், நகரங்களின் கழிவுநீர் ஓடைகளாக மாறி விட்டிருக்கின்றன என்கிற உண்மைதான் அது. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக்கழிவுகள் கலப்பதால் மாசுபடுத்தப்பட்ட இந்த ஆறுகளின் தண்ணீர், அதன் இரு கரைகளிலும் வசிக்கும் கிராம மக்களின் வறண்ட தொண்டையின் தாகத்தைத் தணிக்கும் குடிநீரா இல்லை விஷநீரா என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தியாவின் முக்கியமான ஆறு, ஆற்றுப்படுகைகள் வறண்ட ஆறுகளாக முத்திரை குத்தப்பட்டுவிட்டன. அடுத்த 20 ஆண்டுகளில் மேலும் ஐந்து ஆறுகள் வறண்டு இந்தப் பட்டியலில் சேர இருக்கின்றன. ஆறுகள் வறண்டு வரும்போது அதன் தொடர் விளைவாக, ஏரிகளும் குளங்களும் மட்டுமல்ல, நிலத்தடி நீரும் வறண்டு விடுகின்றன.
வேடிக்கை என்னவென்றால், நமது ஆட்சியாளர்களும், திட்டமிடுபவர்களும் கழிவுநீர் ஓடைகளாகவும், நச்சுநீரை உள்வாங்கும் வாய்க்கால்களாகவும், நதிகளும், ஆறுகளும் மாறுவதை வளர்ச்சி என்று கருதிப் பெருமைப்பட்டுக் கொள்வது. சென்னையையே எடுத்துக் கொள்வோம். ஏறத்தாழ, ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், ஊர் மக்கள் குளிக்கும் ஆறாக இருந்த கூவம் இன்று கழிவுநீர்க் கால்வாயாக மாறிவிட்டிருப்பதைப் பற்றி யாருமே வருத்தப்படுவதாகத் தெரியவில்லை. இதே நிலைமைதான் இந்தியாவிலுள்ள பல ஆறுகளுக்கும் நேர்ந்திருக்கிறது.
நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றின் அறிக்கையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதன்படி, கிராமப்புறங்களிலுள்ள 84 விழுக்காடு வீடுகள் கிராமப்புறக் குடிநீர்த் திட்டத்தால் பயன்பெறுவதாகவும், அதில் 16 சதவிகிதத்தினர் மட்டுமே பொதுக் குழாயில் தங்களது அன்றாடக் குடிநீர்த் தேவையைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்றும் தகவல் தரப்பட்டுள்ளது. அதே அறிக்கையில் இன்னோர் இடத்தில், ஒரிசா போன்ற மாநிலங்கள் பற்றிய குறிப்புகளில் 9 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே வீட்டில் குழாய் வசதி பெற்றிருப்பதாகவும் கூறுகிறது. அதே அறிக்கை, நகர்ப்புறங்களில் 37 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே நேரடி குழாய் வசதி பெற்றிருப்பதாகவும் குறிப்பிடுகிறது. அப்படியானால் எது உண்மை?
வேடிக்கை என்னவென்றால், ஒருபுறம் குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. ஆனால், டாங்கர் லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்பவர்களுக்கோ, கேன்களில் சுத்திகரிப்பு செய்த தண்ணீரை விநியோகிப்பவர்களுக்கோ தண்ணீர் தட்டுப்பாடே கிடையாது. எத்தனை வறண்ட கோடையாக இருந்தாலும் பன்னாட்டு குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தங்களது உற்பத்தியை நிறுத்தி வைத்ததாக இதுவரை தகவல் இல்லை.
சமீபத்தில், ஆந்திர அரசு குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியிலிருந்து நாளொன்றுக்கு 21.5 லட்சம் லிட்டர் தண்ணீரை கோகோ கோலா நிறுவனத்துக்குத் தர உறுதி அளித்திருக்கிறது. இந்த ஏற்பாட்டுக்கு நன்றிகூறும் விதமாகவும், ஏழை எளிய மக்களின் வறுமையைத் தீர்க்கவும் பெரிய மனது பண்ணி கோலா நிறுவனம் தமது "மாஸô' குளிர்பானத்துக்காக ஆந்திரத்திலிருந்து மாம்பழங்களை வாங்கிக் கொள்ள உறுதி அளித்திருக்கிறது. குண்டூர் மாவட்டத்தில் கடும் கோடையால் பாதிக்கப்பட்டு, நா வறண்டு தவிக்கும் கிராமவாசிகள் கோகோ கோலா அருந்தித் தங்களது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஆந்திர அரசு நினைக்கிறதோ என்னவோ...
குடிமக்கள் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க வழிகோலுவது ஒரு தேசியக் கடமை என்று நமது மத்திய, மாநில அரசுகள் ஏனோ கருதவில்லை. மினரல் வாட்டர் நிறுவனங்களும், பன்னாட்டுக் குளிர்பான நிறுவனங்களும் மக்களின் வறண்ட நாக்கின் தாகத்தைத் தணிக்கும் என்று அரசு ஒதுங்கிக் கொள்ளப் பார்ப்பது ஒருபுறம். படித்த, பதவிகளில் இருக்கும் நகர்ப்புற வாசிகளும், மத்தியதர வகுப்பினரும் தாங்கள் மட்டுமே இந்தியப் பிரஜைகள் என்று நினைத்து, மினரல் வாட்டர் குடிக்க முடியாதவர்களைப் பற்றிக் கவலையேபடாமல் இருப்பது இன்னொருபுறம்.
பணக்கார மற்றும் மத்தியதர வகுப்பினர் மட்டும்தான் இந்தியாவா? ஏனைய வாய்ப்பு வசதியில்லாத, ஏழை எளிய மக்களும், கிராமப்புறப் பொதுஜனங்களும் சாக்கடைத் தண்ணீரையும், நச்சுத் தண்ணீரையும் குடித்து நாசமாய்ப் போகட்டும் என்பதுதான் நமது சமத்துவ, சமதர்ம சமுதாயக் கோட்பாடா? அந்த அப்பாவிகளுக்காகக் கவலைப்பட நம்மில் யாருமே இல்லையா?
நன்றி - தினமணி