Wednesday, November 9, 2011

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முறையான, நிலையான பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்கின்ற மனவருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.

அதாவது இத்திட்டங்கள் இனிமேல் மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அதிகாரிகளால் தணிக்கை செய்யப்படும்.  வேலை உறுதியளிப்பு திட்டத்தின் அடிப்படையே, விவசாயப் பணிகள் இல்லாத வெற்று நாட்களில் விவசாயிகள் வேலையில்லாமல் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால், அத்தகைய காலகட்டங்களில் இவர்களுக்கு அதே பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும் என்பதற்காகத்தான்.  

இத்திட்டம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் சுயநல விருப்பங்களுக்காக நடத்தப்படும் திட்டமாகவும், இதில் குறைந்தபட்சம் ரூ. 100 கூலியை முழுதாகத் தராமல், அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் குறைந்தபட்சம் ரூ. 25 வரை பிடித்தம் செய்து பங்குபோட்டுக் கொள்கிறார்கள் என்றும் புகார்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. 

அறுவடை உள்ளிட்ட விவசாயப் பணிகள் நடைபெற வேண்டிய நாளில் இத்தகைய திட்டத்தை அரசு எடுத்துக்கொள்ளும்போது, விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன என்று இத்திட்டம் குறித்து பல இடங்களில் இருந்தும் பலவாறு புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.  உத்தரப்பிரதேசத்தில் 7 மாவட்டங்களில், மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் நிதி முறைகேடாக எடுக்கப்பட்டுள்ளது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்த, அதற்கு அம்மாநில முதல்வர் மாயாவதி மிகக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். 

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மாயாவதி கூறினாலும், இந்த நிதியை எந்த மாநிலமும் முறையாகப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.  ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களுக்குத் தரப்படும் நிதிகள் தொடர்பான தணிக்கை இதுவரை மேற்கொள்ளப்பட்டதே இல்லை. இப்போதுதான் முதல்முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது. 

அதுமட்டுமன்றி, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் செய்துள்ள பாராட்டுக்குரிய நல்ல செயல், தனது அமைச்சகத்தின் மூலம் நிதி வழங்கப்படும் குடிநீர் மற்றும் கழிப்பறைத் திட்டங்கள் குறித்தும் தலைமை கணக்கு தணிக்கையாளர் துறை ஆய்வு செய்யும் என்று அறிவித்திருப்பதுதான்.  மாநில அரசும், கிராமப் பஞ்சாயத்தும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இந்த முறைகேடுகளிலிருந்து தப்பிவிட முடியாது. 

இத்திட்டங்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக நிதிஒதுக்கீடு பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அசாம், ஆந்திரப் பிரதேசம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், ஒரிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் தற்போது முதல்கட்டமாக சிஏஜி தணிக்கைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களும் இருப்பதால், மாயாவதி அச்சம் தெரிவித்திருப்பதைப்போல, வெறுமனே அரசியல் பழிவாங்கும் எண்ணம் இருப்பதாகத் தோன்றவில்லை. 

 மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் ஊழல் நடைபெற முக்கிய காரணமே இதில் செய்யப்படும் பணிகள் நிரந்தரமானவை இல்லை என்பதுதான். 

ஏரி, குளத்தை ஆழப்படுத்தும் பணியும், கரைகளைப் பலப்படுத்தும் பணியும் நிரந்தரமானவையாகக் கருதப்பட முடியாத பணிகள். மழைக்காலத்தில் ஏரி, குளத்தின் கரைகள் கரைந்து போகும். ஆழப்படுத்தப்பட்ட ஏரிகள் மழையில் தூர்ந்துபோகும். ஆகவே, இத்திட்டத்தில் பொய்க்கணக்கு எழுதி சம்பாதிப்பது என்பது மிக எளிதாக இருக்கிறது. கிராமத்து ஆள்களைக் கூட்டி வந்து மதியச் சாப்பாடு போட்டு, கையில் ரூ.20, 30 கொடுத்து அனுப்பி விட்டு, 50 பேர் வந்த இடத்தில் 100 பேருக்குக் கணக்கு எழுதினாலும் இதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. 

 இவற்றையெல்லாம் எப்படி முறையான செலவுக்கணக்கில் கொண்டுவந்தால், இந்தத் தணிக்கையை மேலும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்காக சிஏஜி அதிகாரிகள் கலந்துபேசி வருகிறார்கள். விரைவில் ஒரு பொதுவான கணக்கீட்டு முறை, பணிகள் பதிவேடு ஆகியன இத் திட்டங்களுக்கு விரைவில் உருவாக்கப்படும்.  

அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறை வசதிகளை நவம்பர் 30-ம் தேதிக்குள் உருவாக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் உள்ளன. விதிவிலக்காக மிகச் சில பள்ளிகள் மட்டுமே இருக்க முடியும். இதற்குக் காரணம், தமிழக அரசு மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியை முழுமையாகப் பெற்றுள்ளது என்பது ஒருபுறம் இருக்க, அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் கிடைத்த நிதியைக் கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டப்பட்டன. 

ஆனால், இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் புகார் உள்ளது.  இந்திய ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையை நோக்கி நகரத் தொடங்கி இருப்பதன் அறிகுறிதான், மத்திய அமைச்சரே தனது துறையின் கீழுள்ள ஒரு திட்டத்தைத் தணிக்கை செய்யப் பரிந்துரைத்திருப்பது. 

திட்டம் எதுவாக இருந்தாலும், சட்டம் எப்படி இருந்தாலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் நிர்வாகத்தின் திறமை வெளிப்படுகிறது

Saturday, November 5, 2011

கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால் கவலைப்பட வேண்டியது யார்?

கவலைக்கிடமான நிலையில் ஒரு தலைவரோ, கலைஞரோ இருந்தால் நாடே கவலைப்படுகிறது. ஆனால் கவலைக்கிடமாக ஒரு நாடே இருந்தால் கவலைப்பட வேண்டியது யார்?  அப்படி கவலைக்கிடமாக இருப்பதுகூட பரவாயில்லை, அப்படி இருக்கிறோம் என்கிற உணர்வுகூட அந்த நாட்டை வழிநடத்தும் தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தால் எப்படி?

 ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து பொருளாதார மேதை டாக்டர் மன்மோகன் சிங் பிரதமரானபோது மிகவும் அகமகிழ்ந்தோம். மிகச் சிறந்த நிர்வாகி, நேர்மையாளர், நடுநிலையாளர், அரசியல் கறை படாதவர் என்றெல்லாம் ஆலவட்டம் சுழற்றினோம். 
ஆட்சி நிர்வாகத்தை அவரும் கட்சி நிர்வாகத்தை சோனியாவும் பார்த்துக் கொள்ள இந்தியா வல்லரசாகிவிடும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து எல்லோரும் கூடிக் குலவையிட்டோம். 

 இன்றைக்கு நிலவரம் என்ன? 

காய்கறி, அரிசி, பருப்பு போன்ற அன்றாட உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் நடுத்தர, அடித்தட்டு மக்களின் விழி பிதுங்குகிறது. விலைவாசி கழுத்தை நெரிக்கிறது.  சமையல் கேஸ், டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு கூட அல்ல, பெட்ரோலிய நிறுவனங்களே நிர்ணயிக்கும் நிலைமை. வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்கிற நிலைமை மாறி, மாதாமாதம் பெட்ரோல் விலை உயர்கிறது. 

இப்படியே போனால், பங்குச் சந்தையைப்போல, தங்கம், வெள்ளி விலை நிலவரம்போல பத்திரிகைகளில் பெட்ரோல், டீசலின் அன்றாட விலையைப் போட வேண்டிய துர்பாக்கியம்கூட ஏற்படலாம்.  

அருணாசலப் பிரதேசம் எங்களுடையதுதான் என்று வாரத்துக்கு ஒரு முறை அறிவித்துக்கொண்டிருக்கும் சீனா நம்முடைய காஷ்மீர மாநிலத்துக்கு உள்ளேயே வந்து நம்முடைய ராணுவத்தினர் பயன்படுத்தி குளிர்காலம் என்பதால் விட்டுவிட்டு வந்த பதுங்கு குழிகளையே அழித்துவிட்டுப் போகிறது. 

 வான் எல்லை மீறி எங்கள் நாட்டுக்குள் வந்துவிட்டீர்கள் என்று கூறி நம்முடைய தரைப்படை வீரர்கள் சென்ற ஹெலிகாப்டரை பாகிஸ்தான் வான்படை வழிமறித்து அழைத்துச் செல்கிறது. இதைப்பற்றி எல்லாம் மத்திய அரசு கவலைப்பட்டு சுறுசுறுப்பாக ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?  

ஊழல் அதிகரித்து வருவது குறித்து அண்ணா ஹசாரே போன்றோர் கவலைப்படுகின்றனர்.

விலைவாசி உயர்வு குறித்து நடுத்தர மக்களும் இல்லத்தரசிகளும் கவலைப்படுகின்றனர். சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து நாட்டுப் பற்றாளர்களும் மூத்த குடிமக்களும் கவலைப்படுகின்றனர். 

 தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, நிரந்தர வேலைவாய்ப்பு முறை மறைந்து ஒப்பந்தத் தொழிலாளர் முறை நிலைபெற்று வருகிறதே, வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று தொழிற்சங்கத் தலைவர்கள் கவலைப்படுகின்றனர். 

 கிராமப்பகுதிகளில் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தால் விவசாய வேலைக்குப் பண்ணையாள் கிடைப்பதில்லையே என்று விவசாயிகள் கவலைப்படுகின்றனர். 

அணைகள் கட்டுதல், பாசன வாய்க்கால்கள் அமைத்தல் போன்ற பணிகளை அரசு குறைத்துக் கொண்டுவிட்டதே, குடிமராமத்தே நின்றுபோய் வெறும் கணக்கெழுதி அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் சாப்பிடும் நிலைமை வழக்கமாகிவிட்டதே என்று வேளாண் குடிகள் கவலைப்படுகின்றனர். 


 ரூபாயின் மாற்று மதிப்பு குறைந்து வருவதால் சீனா போன்ற நாடுகள் சர்வதேசச் சந்தையில் குறைந்த விலையில் பொருள்களைக் குவிப்பதால் நம்மால் அவர்களுடன் போட்டியிட முடியவில்லையே என்று ஏற்றுமதியாளர்கள் கவலைப்படுகின்றனர். 

 நம்முடைய சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அடகு வைக்கும் வகையில் அணுமின் சக்தி திட்டங்களுக்காக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமை சாசனம் எழுதித்தர வேண்டுமா என்று சுயராஜ்ய சிந்தனை உள்ளவர்கள் கவலைப்படுகின்றனர்.  

மின்னுற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகிறது, நிலக்கரி கையிருப்பும் குறைந்து வருகிறது, அணு மின்சக்தி திட்டத்தின் பின்விளைவுகள் பற்றிய அச்சத்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற சூழல் இல்லையே என்று தொழில்முனைவோர் கவலைப்படுகின்றனர்.  

கல்வி நிலையங்களின் தரம் குறைந்து வருகிறது, உயர் கல்வி பெற விரும்பும் அனைவருக்கும் வாய்ப்பு தர முடியாமல் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதே என்று கல்வியாளர்கள் கவலைப்படுகின்றனர்.  

சுகாதார வசதியில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம்; அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள், பணியாளர்கள், டாக்டர்கள் இல்லாமல் பிறந்த குழந்தைகள்கூட உயிரிழக்கும் ஆபத்து நேரிட்டுவிட்டதே என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கவலைப்படுகின்றனர். 

 வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உலக பணக்காரர்களில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஊழல் செய்தும் வரி ஏய்ப்பு செய்தும்தான் இதில் இடம் பெற்றனர் என்ற அவமானம் என்று எத்தனையோ விஷயங்கள் கவலைக்கிடமாக இருக்கின்றன. 

 இந்த நிலையில் குப்பம்பட்டி வார்டு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா, யார் வேட்பாளர் என்று கேட்டால் கூட மத்தியக் கட்சித் தலைமையின் முடிவுக்கே விடும் காங்கிரஸ் தலைவர்களுக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதால், இந்த நிலைமை எப்போது மாறும் என்கிற கவலை நம்மைத் தொற்றிக் கொள்கிறது. 

 இந்த நாட்டின் தலைமை சரியில்லை, முடிவெடுக்க முடியாமல் திணறும் போக்கு நல்லதல்ல என்று விப்ரோ நிறுவனத்தின் தலைவர் தொழிலதிபர் அசீம் பிரேம்ஜி, பெங்களூருவில் கவலை தெரிவித்திருப்பது நூறு சதவீதம் நியாயமே என்று வழிமொழியத்தானே தோன்றுகிறது.

thanks - dinamani

Tuesday, November 1, 2011

Tuesday, October 25, 2011

லஞ்சம் வாங்கிய அதிகாரி மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது என்று அன்றாடம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் மீது என்னதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்கின்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்படுவதே இல்லை. ஒரு அதிகாரி குறித்து புகார் வந்தால், அதை மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்துகிறது. 

அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், அவர் பணியாற்றும் துறையோ கடுமையான நடவடிக்கையை எடுக்காமல், ஏதோ ஒப்புக்கு நடவடிக்கை எடுக்கிறது என்பதுதான் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை தற்போது தெரிவித்துள்ள புகார்.

ஹரியாணா வனத்துறை அதிகாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து வனவிலங்குகள் சரணாலயத்துக்கு பாதகம் ஏற்படும் வகையில் தனியார் பண்ணைகளை மேம்படுத்த அனுமதி அளித்து அதன் மூலம் பல கோடி ரூபாய் பலன் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகார் குறித்து அமைச்சர் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கிறார். அமைச்சரவை இலாகா மாற்றத்துக்குப் பிறகு இன்னொருவர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகிறார். அதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் அமைச்சகத் துறையிலிருந்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு கடிதம் வருகிறது. என்னவென்று? விசாரணை தேவையில்லை. அந்தக் கோப்புகளை முடித்துக்கொள்ளலாம் என்று.

ஜூலை மாதம் வரையிலும் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு அறிக்கை அளித்துள்ளது. ""சில அரசுத் துறைகள் தங்கள் ஊழியர் மீது, குறிப்பாக அதிகாரிகள் மீது நாங்கள் பரிந்துரைக்கும் கடுமையான நடவடிக்கையை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றன.

சாதாரண எளிய தண்டனையாக மாற்றிவிடுகின்றன'' என்பதுதான் இந்த அறிக்கையில் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ள கசப்பான கருத்து.அதுமட்டுமல்ல, 2010-ம் ஆண்டில் 2,982 அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை தண்டித்துள்ளது. இவர்களில் 99 பேர் மட்டுமே வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது கட்டாய ஓய்வில் செல்லுமாறு துறையால் பணிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் பணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு ஊதிய உயர்வு ரத்து, அல்லது சில மாதங்கள் இடைநீக்கம் என்று இவர்கள் சிறு தண்டனை பெற்று மீண்டும் பணிக்கு வந்துவிடுகிறார்கள். நடப்பாண்டில் ஜூலை 2011 வரை மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்திய லஞ்சம் மற்றும் ஊழல் முறைகேடு தொடர்பான 1,681 புகார்களில் 1,263 புகார்களுக்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து அந்தந்த துறைகளுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால், தண்டனை நிறைவேற்றப்படுமா அல்லது நீர்த்துப்போகுமா என்பது, அந்த அதிகாரி அத்துறையில் பெற்றிருக்கும் செல்வாக்கைப் பொறுத்தது அல்லது அவருக்கு மாநில, மத்திய ஆட்சியாளர்களிடம் இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்தது.

இந்த ஆண்டு அதிக தண்டனை பெற்றவர்களில் 165 பேர் ரயில்வே துறையைச் சேர்ந்தவர்கள். சுமார் 45 பேர் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைச் சேர்ந்தவர்கள். 9 பேர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், அரசுத் துறைகளில் கைது செய்யப்பட்டோர் என்னவாகிறார்கள்? இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதே இல்லையா என்கின்ற கேள்வி எழுகிறது.ஊழியர் அமைப்புகள் கண்ணை மூடிக்கொண்டு தவறு செய்த ஊழியர்களைப் பாதுகாக்க வருவதுதான் இன்று ஊழல் அலுவலர்களை, முறைகேடு செய்வோரை, வேலையை ஒழுங்காகச் செய்யாத ஊழியரை அம்பலப்படுத்த பெரும் தடையாக இருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை. 

ஊழியர்களின் நலனைப் பேணவும் உரிமைகளைப் பாதுகாக்கவும் குரலெழுப்ப வேண்டிய ஊழியர் அமைப்புகள், தவறு செய்பவர்களைத் தட்டிக் கேட்டு நிர்வாகம் முறையாக நடைபெற உதவவேண்டிய ஊழியர் அமைப்புகள் குற்றவாளிகளின் ஏவலாளிகளாக, ஊழல் பேர்வழிகளின் பாதுகாவலர்களாகச் செயல்படுகின்றன என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. 

இதற்கு ஒரு சிறிய உதாரணம்: அரக்கோணம் ரயில் விபத்தில், டிரைவர் செல்போனில் பேசினார் என்று கூறப்பட்டபோது, எடுத்த எடுப்பில் இப்படியொரு கருத்தைச் சொல்லக்கூடாது என்று கூறியது ஊழியர் அமைப்புதான். அவர் பேசினார் என்பது உறுதியானதுமே, அதிகாரிகள்தான் செல்போனில் எங்களைப் பணிநேரத்தில் அழைக்கிறார்கள் என்று கூறப்பட்டது. 

இப்போது, அந்த நேரத்தில் வந்த அழைப்புகள் அனைத்தும் டிரைவரின் நண்பர்களிடமிருந்துதான் என்பது உறுதியான பிறகு பேச்சே இல்லை. ரயில்வேக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, 11 பேர் இறந்துபோன சம்பவத்தின் தீவிரத்தைவிட, சக தொழிலாளியைக் காக்க வேண்டும் என்கின்ற தீவிரம்தான் இன்று இந்தியா முழுவதிலும் லஞ்சமும் முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டாலும், களையெடுக்கப்படாமலும் இருப்பதற்குக் காரணம்.

நீதிமன்றங்களால் கண்டிக்கப்பட்ட காவல்துறையினருக்கு மாநில அரசுகள் பதவி உயர்வும், விருதும் அளித்துக் கௌரவிக்கின்றனவே, இது நீதிமன்ற அவமரியாதை இல்லையா? குற்றவாளிகளுக்குக் குடை பிடிக்கும் செயல் அல்லவா? ஆட்சியாளர்களின் ஏவலாளர்களாக இருப்பதற்குத் தரப்படும் மரியாதையாக விருதுகள் மாறி விட்டிருக்கின்றனவே, இதுவேகூட ஊழலுக்கு உரமிடும் செயல்பாடு அல்லவா?

மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை அறிவிக்கும் தண்டனையை அளிக்காமல் அதை நீர்த்துப் போகச் செய்தால், அதற்காக அந்தத் துறைத் தலைவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் தள்ளக்கூடாது?ஊழலை ஒழிப்பதில் நமது ஆட்சியாளர்களுக்கு உதட்டளவு அக்கறைதான் இருக்கிறது என்பது புரிகிறது. 

ஆனால், ஊழல் பெருச்சாளிகள் என்று தெரிந்தும் அவர்களுக்கு மக்கள் மீண்டும் மீண்டும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கிறார்களே அதுதான் ஏன் என்று புரியவில்லை!
thanks - dinamani

Thursday, August 25, 2011

இந்தியாவை பாலைவனம் ஆக்கி விட்டு போகட்டும்

இந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவுள்ள மசோதாக்களில் ஒன்றுதான் "இந்திய உயிரி-தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம்' மசோதா.

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உழவர் பாதுகாப்பு என்ற பெயரில் திமுக அரசால் சட்டப்பேரவையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிறகு இயற்கை வேளாண் ஆர்வலர்கள் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது நினைவு இருக்கலாம். அந்த மசோதாவுக்குத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புகளில் முக்கியமான ஒன்று வேளாண் பயிற்சி தொடர்பானது. விவசாயிகளுக்கு வேளாண் முறைகளை யார் வேண்டுமானாலும் சொல்லித்தரும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசு அனுமதி பெற்ற நபர் அல்லது நிறுவனம்தான் செய்ய முடியும் என்கிற வகையில், நுட்பமாக வரையறுக்கப்பட்ட அந்த மசோதாவை இயற்கை வேளாண் ஆர்வலர்கள் எதிர்த்தார்கள்.

÷இப்போது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வைக்கப்போகும் இந்திய உயிரி - தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய மசோதா, தமிழக அரசு மசோதாவில் இருந்த ஆட்சேபத்துக்குரிய பகுதிகளை இன்னும் கடுமையாக, ஆனால் வேறுவிதத்தில் முன்வைக்கிறது. இந்த மசோதாவில் மிகப்பெரும் ஆட்சேபத்துக்குரியதாக இரண்டு பகுதிகளை கிரீன்பீஸ் ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள்:

÷""....... உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள் அல்லது தாவரத்தின் பாதுகாப்பு தொடர்பாக எந்தவிதமான அறிவியல் ஆதாரங்கள் இல்லாமல், மக்களிடம் தவறான கருத்துகளைக் கொண்டுசெல்லும் நபர் யாராக இருந்தாலும், அவருக்கு 6 மாதங்கள் அல்லது ஓராண்டுவரை நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனையும், இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் அல்லது இரண்டும் ஒரேநேரத்தில் விதிக்கப்படும்.....'' என்கிற இந்த நிபந்தனை மக்களிடம் மரபீனி மாற்றப்பட்ட விதைகள், காய்கனிகள், வேளாண் விளைபொருள்கள் குறித்த தீமைகளைப் பேசுவதையே மறைமுகமாகத் தடைசெய்கிறது.

÷அறிவியல் ஆதாரங்கள் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு ஆய்வுக்கூடத்துக்கும் மாறுபடுபவை. பன்னாட்டு மென்பானங்களில் நச்சுத்தன்மை உள்ளது என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லும் முடிவுக்கு, "அனுமதிக்கப்படும் அளவு'க்கு உள்ளாகத்தான் இருக்கிறது என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது அரசு. இந்த அனுமதிக்கப்பட்ட அளவு அமெரிக்காவில் ஒரு விதமாகவும், இந்தியாவில் வேறு விதமாகவும் இருக்கிறதே, அது ஏன் என்று கேள்வி கேட்பாரில்லை. இப்போதுள்ள கருத்துரிமைப்படி ஒரு வேளாண் பொருளில் நச்சுக்கலப்பு உள்ளது என்று சொல்வதற்காவது உரிமை உள்ளது. அதனை முற்றிலுமாக இந்த மசோதா பறித்துவிடும். மரபீனி மாற்றப்பட்ட உற்பத்திப் பொருள்களால் விளையும் எல்லா தீமைகளும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கிறது என்பதாக அரசு சொல்லும்போது, இதைப்பற்றி பேசுவதே தண்டனைக்குரியது. அப்படியானால், எப்படி மக்களிடம் இதைக் கொண்டுசெல்வது? தவறுகளைத் தட்டிக் கேட்கக் கூடாதா? மாற்றுக் கருத்துக்கு இடமே கிடையாதா? வல்லான் வகுத்ததுதான் சட்டமா?

÷""......அரசு அனுமதித்துள்ள தாவரம் அல்லது உயிரி - தொழில்நுட்பம் சார்ந்த பொருளை அனுமதியின்றி பரிசோதனைக்கு உள்படுத்துவது (கிளீனிக்கல் டிரையல்) தண்டனைக்குரியது. இக்குற்றத்தைச் செய்பவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் ஒரேநேரத்தில் தண்டனையாக விதிக்கப்படும்.....'' என்கிற நிபந்தனைகள், யாருக்காக, யாரைத் திருப்திப்படுத்த அல்லது பாதுகாக்கச் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லை.

அரசின் அனுமதி பெற்ற பிறகுதான் இந்தப் பொருள்களைத் தனியார் அமைப்புகளும் இயற்கை ஆர்வலர்களும் பரிசோதிக்க முடியும். ஒரு விளைபொருளை அல்லது உயிரிப் பொருளைப் பரிசோதிக்கவும் அரசின் அனுமதி பெற வேண்டும் என்றால், இந்தியாவில் மக்களாட்சிதான் நடக்கிறதா என்கிற சந்தேகமல்லவா எழுகிறது. இவர்கள் தொழுதடிமை செய்து வணங்கும் அமெரிக்கத் திருநாட்டில் இப்படி எல்லாம் தடை இல்லையே. அங்கே தரப்படும் சுதந்திரமும் உரிமையும் இங்கே மட்டும் தட்டிப் பறிக்கப்படுகிறதே, ஏன்?

÷மசோதாவின் இத்தகைய பிரிவுகள் முழுக்கமுழுக்க, மரபீனி மாற்றுப்பயிர்களில் (ஜி.எம். புராடக்ட்ஸ்) ஈடுபடும் பன்னாட்டு நிறுவனங்களின் வற்புறுத்தலால் செருகப்பட்ட நிபந்தனைகள்தான் இவையெல்லாம் என்பதுதான் போராட்டம் நடத்தும் இயற்கை ஆர்வலர்களின் கருத்து. ஆனால், இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தாகிவிட்டது. இப்போது, அண்ணா ஹசாரே விவகாரத்தால் மக்களின் மனமும், ஊடகங்களின் கவனமும் வேறுதிசையில் இருப்பதால், நாடாளுமன்றத்தில் சந்தடி சாக்கில் விவாதம் இல்லாமலேயே இந்த மசோதா நிறைவேறும் அபாயம் நிறையவே இருக்கிறது. இந்த மசோதா மாநில அரசுகளின் அதிகாரத்தில் குறுக்கிடுகிறது என்பதுடன் சுகாதாரத் துறை, சுற்றுச்சூழல் துறை தலையிட முடியாததாகவும் உள்ளது.

÷ஏற்கெனவே பி.ட்டி. பருத்தி உற்பத்தியில் மரபீனி விதைகள் இந்திய மண்ணில் வேரூன்றிவிட்டன. 2009-10-ம் நிதியாண்டில் 2.43 லட்சம் குவிண்டால் பி.ட்டி. பருத்தி சந்தைக்கு வந்தது, 2010-11-ம் நிதியாண்டில் 2.60 லட்சம் குவிண்டாலாக உயர்ந்துள்ளது. இப்போது வடமாநிலங்களில் பி.ட்டி மக்காச்சோளம் விதைகள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன மரபீனி மாற்றுப்பயிர் நிறுவனங்கள். பி.ட்டி. கத்திரிக்காய் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.

÷இந்த நேரத்தில் இப்படியொரு மசோதா. கேள்விக்கு ஒருவர் இல்லை.

thanks to dinamani

Thursday, February 10, 2011

இஸ்ரோ ஊழல் --திட்டம் தீட்டிக்கொடுப்பவர்களே அதிகாரிகள்தான்

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் என்பது இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் பிரிவு என்று சொன்னால் அது மிகையல்ல. ஆராய்ச்சியாளர்கள், இந்திய அறிவுசார் வல்லுநர்கள் மட்டுமே இதில் இடம்பெற்று, அறிவியல் கண்டுபிடிப்பின் அனைத்து நன்மைகளையும் இந்திய மக்களுக்கு அளித்து வருகிறார்கள் என்பதுதான் இதுவரைக்கும் நம் அனைவருக்கும் இருந்த கருத்து.

இவர்கள் ஏவும் செயற்கைக்கோள் பாதியில் வெடித்துச் சிதறினாலும், பழுதானாலும், பாதைவிலகி பயனற்றுப் போனாலும்கூட இந்த ஆராய்ச்சியாளர்களை யாரும் குறை சொன்னதில்லை. தவறுகளைத் திருத்தி இன்னும் நன்றாக மீண்டும் செயற்கைக்கோள் செலுத்துங்கள் என்றுதான் அரசும் மக்கள் அமைப்புகளும் ஊக்கப்படுத்தின. தொடர்ந்து செயற்கைக்கோள் ஏவுதலில் தோல்விகளைச் சந்தித்தபோதும் அதற்கான துறைவாரி குழு அமைத்து விசாரித்தபோதும்கூட யாரும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை.

ஆனால் அத்தனை நம்பிக்கையையும் சிதைத்துவிட்டது, அரசுக்கே தெரியாது நடைபெற்றுள்ள ஆன்டிரிக்ஸ் - தேவாஸ் மல்டிமீடியா ஒப்பந்தம்.

பிரதமரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் விண்வெளித் துறைக்குத் தகவல் தெரிவிக்காமலேயே, இஸ்ரோவின் வணிகப் பிரிவான ஆன்டிரிக்ஸ், தனியார் நிறுவனமாகிய தேவாஸ் மல்டிமீடியாவுடன் 2005-ல் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவர்களுக்கென்று, அவர்களுக்கு வசதிப்படும் தொழில்நுட்பங்களுடன் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கும், எஸ்-பாண்டில் 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 20 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தவும் ஒப்பந்தம் போட்டுள்ளது.

அது மட்டுமா? தேவாஸ் மல்டிமீடியா தனது உரிமைகளை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்கிறது அந்த ஒப்பந்தம். வெறுமனே 60 நாள்களுக்கு முன்பாகத் தகவல் தெரிவித்தால் போதும் (அனுமதி பெறவேண்டியதில்லை) என்று அந்த ஒப்பந்தம் அனுமதித்திருப்பதையும், மக்கள் பணம் ரூ.2,000 கோடியில் இரண்டு செயற்கைக்கோள் ஏவ முன்வந்திருப்பதையும் பிரதமர் அலுவலகத்துக்குத் தெரிவிக்காமல் இருப்பதென்றால், இதைவிட ஒரு தேசத் துரோகம் என்னவாக இருக்க முடியும்?

எஸ்-பாண்டு அலைக்கற்றை மூலம், கைப்பேசி சேவையையும் தற்போது டாடா ஸ்கை, டிஷ்டிவி போல வீட்டுக்கு ஒளிபரப்பை நேரடியாகக் கொண்டு வருவது மட்டுமன்றி, இந்தியாவின் கனிமவளம், நீராதாரம், மழை, ராணுவச் செயல்பாடுகள் ஆகியவற்றையும்கூட கண்காணிக்க முடியும் என்கிறபோது, பிரதமர் அலுவலகத்துக்குத் தெரியாமல் இப்படியான ஒப்பந்தம் போடவும், யாருக்கு வேண்டுமானாலும் உரிமையை மாற்றலாம், விற்கலாம் என்பதும் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

ஒரு சாதாரணப் பாமரனுக்கு ஏற்படும் கலக்கம்கூட விஞ்ஞானிகளான படித்தமேதைகளுக்கு இல்லாமல் போனது எப்படி? இவர்கள் தெரிந்தே தவறு செய்திருக்கிறார்கள். அமைச்சர்களுக்கும் பெருந்தொழில் அதிபர்களுக்கும் சொல்லிக் கொடுத்து, திட்டம் தீட்டிக்கொடுப்பவர்களே அதிகாரிகள்தான் என்பது அண்மைக்காலமாக வெளியாகும் அனைத்து ஊழல்களிலும் அம்பலமாகிறது. இப்போது விஞ்ஞானிகளும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன், இந்தத் தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார். 2010 ஜூலை மாதம் உள்ளாய்வுக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது என முடிவு எடுக்கப்பட்டு, இது தொடர்பாக அரசிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்கிறார். ஒப்பந்தம் போட்டபோது தகவல்கூடத் தெரிவிக்கவில்லை. ரத்துசெய்ய மட்டும் அரசின் ஆலோசனையா? வேடிக்கையாக இல்லையா இந்தக் காதில் பூச்சுற்றும் வேலை?

ஒப்பந்தம் ரத்து காரணமாக தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துக்கு நஷ்டஈடு தரும் அவசியமில்லாதபடி செய்வோம் என்கிறார். ஏன் மற்ற நிறுவனங்களையும் அழைத்து விலைகோரவில்லை என்ற கேள்விக்கு, தேவாஸ் மல்டிமீடியா உருவாக்கியது வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத அறிவியல் பயன்பாடு ஆகும் (!) என்கிறார். எல்லாவற்றுக்கும் இப்படி ஏடாகூடமான ஏதாவது ஒரு பதில் அவர்களிடம் இருக்கிறது.

"இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கே வரவில்லை என்பதால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு என்று சொல்வது தவறு' என்று பிரதமர் அலுவலகம் சொல்கிறது. மிகச் சரி. பத்திரிகைகளில் அம்பலமான பிறகுதானே இதை ரத்துசெய்ய முடிவு செய்திருந்தோம் என்கிறீர்கள். ஏன் ஒப்பந்தம் செய்ததை 5 ஆண்டு காலம் மறைத்தீர்கள்? 2010 ஜூலை மாதத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஊழலை எல்லோரும் பேசத் தொடங்கிவிட்டார்கள் என்பதால்தான், இஸ்ரோ உள்ளாய்வுக் குழு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம் என்ற முடிவுக்கே வந்தது என்பதுதானே பச்சையான உண்மை. இப்போது பிரதமர் அலுவலகம் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயல்கிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்தில் யாரெல்லாம் தொடர்பு உடையவர்கள், இதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்பதையெல்லாம் துருவிப் பார்த்தால்தான் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியும் உண்மைகளும் தெரியவரும். இஸ்ரோ அதிகாரிகள், பெருந்தொழில் அதிபர்கள், சில அரசியல்வாதிகள் கூட்டணியில்தான் இந்த ஒப்பந்தம் சாத்தியம். வேறு எந்தக் குப்பனும் சுப்பனும் இந்த ஒப்பந்தத்தைப் போட முடியாது. இதில் குற்றத்தின் பங்கு அதிகாரிகளுக்கே அதிகமாக இருக்கும். ஆனால், அரசியல்வாதிகளும் சம்பந்தப்படாமலா இருப்பார்கள்?

இஸ்ரோவில் அறிவியல் செயலராகப் பணியில் இருக்கும்போதே அனைத்து ஏற்பாடுகளையும் திட்டங்களையும் செய்துவிட்டு, அரசு ஓய்வூதியப் பலன்களை அனுபவித்தபடி, தேவாஸ் மல்டிமீடியாவுக்குத் தலைமை ஏற்க முடியும் என்பது வியப்பை ஏற்படுத்தவில்லை. இந்தியாவில், முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றும்போதே, உரிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, தனியார் பள்ளித் தாளாளர் ஆக முடியும்; கல்வி அமைச்சர் பதவியில் இருக்கும்போதே கல்லூரிகள் தொடங்க முடியும்; உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் முன்பாகவே மருமகன்களை கோடீஸ்வரர்களாக்க முடியும் என்கிற நிலைமை எல்லாத் துறைகளையும் சீரழிக்கும் புற்றுநோயாகப் பரவிவிட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் ஓய்வுபெறும் உயர் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் பொறுப்பேற்கவும், ஆலோசகர்களாக இருக்கவும் முடிகிறது. தான் சீரழிந்ததோடு நில்லாமல், அந்தப் பிரதமர் க்கு உயர்ந்துள்ள தனது ஜூனியரையும் வûளைத்துப்போட இவர்கள் பேருதவியாக இருக்கிறார்கள். காட்டு யானைகளை வழிக்குக் கொண்டுவரப் பயன்படுத்தும் யானைகளுக்கு "கும்கி' என்று பெயர். அரசு அதிகாரிகள் அளவிலும் இத்தகைய "கும்கி'கள் பெருகிக்கிடப்பதுதான் மலிந்துவிட்ட ஊழலுக்கே ஓர் அடிப்படைக் காரணம்.

விஞ்ஞான பூர்வமான ஊழலை அரசியல்வாதிகள் செய்யும்போது, விஞ்ஞானிகள் அதைவிடத் துல்லியமாகவும், சிறப்பாகவும் செய்துவிட முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் "இஸ்ரோ' விஞ்ஞானிகள்.

பிரதமருக்கும், பிரதமர் அலுவலகத்துக்கும் தெரியாமல் என்னவெல்லாமோ நடக்கிறது என்று சொன்னால், பிறகு அந்தப் பிரதமர் பதவியில் இருந்தென்ன, இல்லாமல் போனால்தான் என்ன?